சில தினங்களுக்கு முன் (12/12) எந்த தமிழ் ஊடகத்தை புரட்டினாலும் 'அதிசயப் பிறவி (12-12-12) ’யின் பிறந்த நாள் கொண்டாட்ட புராணம்தான். அன்றைய தினத்து நல்ல நிகழ்வுகளையெல்லாம் மறக்கடித்து... அரிதாக ஒளிபரப்பாகும் பயனுள்ள நிகழ்ச்சிகளையெல்லாம் முடக்கி... பிறந்த நாள் ஹீரோவை மையமாகக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இந்நாளை ரசிகர்கள் - பொதுமக்கள் உட்பட ஏதோ ஒரு விஷேச தினமாகக் கூட ஆக்கிவிட்டார்கள் போன்றதோர் உணர்வு.
திரையுலகத்தினர் மீதுள்ள மோகம் நாளுக்குள் நாள் கூடுகிறதே தவிர குறைந்த பாடில்லை. பாமரர்கள் மட்டுமன்றி படித்தவர்கள், மேலைநாடுகளில் வசிப்பவர்கள் என ஒரு பட்டாளமே இதில் அடக்கம். பிம்பங்களை நிஜம் என்று நம்பி (பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்) செல்லுலாய்டு காதல் கொள்ளும் பெண்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
தினமலரில் ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்து பகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள். அதில் படித்ததில் சிரித்தது, "தலைவா நீ ஒருவன் சுகமாக வாழ்ந்தாலே போதும்… இந்த ஒட்டுமொத்த தமிழகமே சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்ததற்கு சமம்" என்று கொசுக்கடியிலும், அழுக்கு படிந்த சொக்காவுடன் காய்ந்து போன பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டே எப்பவாவது வரும் மின் வெளிச்சத்தில் கமன்ட் எழுதியிருக்கிறார் அன்பர் ஒருவர்.
சினிமா பகுதி இல்லாத தமிழ் இதழ்கள் ஊடகங்கள் ரொம்ப கம்மி. அப்பாவி ரசிகர்களின் மோகத்தை மூலதனமாக்கி, சினிமா என்ற மாயவலையில் மென்மேலும் சிக்க வைத்து… தனது ‘டி ஆர் பி’ ரேட்டிங்கை, பத்திரிக்கை விற்பனையை உயர்த்திக் கொள்வதற்கு ஊடகங்களின் நூதன முயற்சிகள்தான் இந்த அதிசய நாள் அக்கப் போர்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் உறவுக்காரன் அல்லது பக்கத்து வீட்டுக்காரனை ஒரு எட்டு கூட பார்க்க மாட்டார்கள்... ஆனால் ரஜினி, அமிதாப் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு உடல்நிலை சரியில்லை அல்லது பிறந்த தினங்கள் என்றால் சிறப்பு பூஜைகளில் தொடங்கி... மசூதிகளில் / தர்காக்களில் நம்மவர்கள் (சிலர்) வரை செய்யும் கூத்துக்களை எழுதி மாளாது. போதாக் குறைக்கு நமது பிரதமர் ‘கொலவெறி’ நடிகரை விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்திய புதுமை.
எந்த ஒரு தனிநபர் / சினிமா துறையினர் மீதும் நமக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை. ஒரு ஜான் வயிற்றுக்காக ஏதேதோ பிழைப்புகளை சிலர் கொண்டுள்ளதைப் போல, இவர்களுக்கும் இது ஒரு பிழைப்பு என்றே நாம் எடுத்துக்கொள்வோம். ஆனால் நம்முடைய வருத்தமெல்லாம்…
பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டமாய் தன் அபிமான நாயகர்களின் படங்களை பலமுறை தியேட்டரில் பார்த்து… நடிகர்களின் வாழ்வை வளமானதாகவும் தன் வாழ்வை கேள்விக்குறியாகவும் ஆக்குகிற - ஈமு கோழியில் பிரபல நடிகர்கள் சொன்னதால பணம் போட்டோம் என்று கூறும் அப்பாவி ரசிகர்கள் - பொதுமக்கள் மீதுதான்!
இப்படிப்பட்டவர்கள் இருக்கும் தைரியத்தில்தான் - புற்றீசல் போல புதிது புதிதாய் நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் ஹீரோ - ஹீரோயின்களும், அளவுக்கதிகமான திரைப்பட வெளியீடுகளும். இம்மாயைக்கு நம் சமுதாயத்தினர் மட்டும் விதிவிலக்கா என்ன...?
சினிமாக் காரர்களில் ஒரு சிலர் நம் சமூகத்தவர் என்றால், சினி துறையில் ஏதோ அவர்கள் நமது சமுதாயத்தின் பிரதிநிதி அல்லது பெருமை சேர்ப்பவர்கள் போல எண்ணி பெருமை பட்டுக்கொள்கின்றனர் சிலர். வேடிக்கையாக இல்லையா? இன்றைய சமுதாய அமைப்பினர்கள் அவர்களை முன்னிலைப் படுத்தி சமூதாய நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கூட தருகின்றனர்.
உணவகத்தில் பில் செட்டில் பண்ணும்போது 'எந்த நாடு' என்று துருக்கி கார கடை முதலாளி கேட்டார். இந்தியா என்றேன்... உடனே அவர் ஒரு சில பாலி / கோலிவூட் நடிகர்களின் பெயர்களைக் கூறி தனக்கு பிடிக்கும் என்றார். எப்படி என்று கேட்டேன்... அரபு நாட்டில் தான் பணிபுரிந்தபோது நம்மவர்கள் அறிமுகப்படுத்திய திரைப்படங்கள் மூலம் என்றார்.
சினிமா தியேட்டர்களே இல்லாத சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் ஜாய் ஆலுகாஸின் புதிய ஷோ ரூமை திறக்கப் போன ஒரு நடிகருக்கு அவரே எதிர்பார்த்திராத அளவுக்கு ஓர் உற்சாக வரவேற்பு... கைகுலுக்கல்... வேறு யாரும் இல்லை... சவுதி இளைஞர்கள் கூட்டம். நாம் கெட்டது போதாதென்று இவர்களையும் வேறு கெடுத்து வைத்திருக்கின்றோமே...
திரைப்படங்கள் பார்ப்பதே மிகப்பெரிய குற்றமாக - சமூகத் தீமையாக கருதப்பட்ட காலங்கள் மலையேறிப் போய்... மலேசியா - சிங்கப்பூர் போன்ற தெற்காசிய மற்றும் நம்மவர்கள் அதிகம் வசிக்கும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அனைத்து சினிமா (இசை) கலை நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்கள் - ஏற்பாட்டாளர்கள் - அங்கத்தினர்கள் - பார்வையாளர்களில் பெரும்பாலானோர் நம்மவர்கள்தான். கடல் கடந்தும் நம் மக்களை சினிமா மோகம் ஏன்தான் இந்த பாடுபடுத்துகிறதோ தெரியவில்லை.
சமீபத்தில் நமதூரின் பெயரை தலைப்பாகக் கொண்டு ஒருதிரைப்படம் வரப்போகிறது என்றவுடன் நமக்குள் எத்தனை கவலைகள்...? நம் ஊரின் கலாச்சாரம் - கண்ணியம் சினிமா மூலமும் கெட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு. பெரும்பாலான சினிமாக்கள் / சினிமா நிகழ்ச்சிகள் சமூகத் தீமைகளை - கலாச்சார சீரழிவுகளைத்தான் அள்ளித் தெளிக்கின்றன என்று உணர்ந்திருக்கின்ற அதே வேளையில், நம்மில் எத்தனை பேர் இதனை முழுமையாக தவிர்த்து வருகிறோம்... ?
நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டமாகவே இருக்கும் நாம்… அதனை சுய பரிசோதனை மற்றும் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். ?
நம்மில் ஒரு சிறு சதவிகிதத்தினரே சினிமாவின் வாசனை தன்னையும் தன் பிள்ளைகளையும் அண்டாமல் இன்று வரை பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சினிமா, சீரியல், சினிமா ஷோக்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வர முடியாதவர்களாகவே இருக்கிறோம். இதில் மிகப்பெரிய கொடுமை என்ன என்றால், தான் கெட்டது போதாதென்று தன் பிள்ளைகளையும் கூட வைத்துக்கொண்டு, குடும்ப சகிதம் சினிமா படங்கள் - நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் சில பெரியவர்கள் பெற்றோர்கள்.
ஒரு காலத்தில் சினிமாவை ஒரு சைத்தான் என்று ஊரில் பலர் கூற கேட்டிருப்போம். ஆனால் இன்று மருந்துக்கு கூட அந்த வார்த்தையின் பயன்பாடு இல்லை. சினிமா ஒரு தீமை... அதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று இக்கால கம்மா/அப்பாமார்களிடம் (தாத்தா - பாட்டிகளிடம்) கூறினால் கூட... “என்னடா இவன்? அந்தக் காலத்து மனுஷன் போல பேசுகின்றானே?” என்பார்கள். அவர்களே இப்படியென்றால் இளவட்டத்திடம் போய் இதனைக் கூற முடியுமா என்ன? காரணம் இன்று இவையெல்லாம் சமூகத்தால்அங்கீகரிக்கப்பட சமூகத் தீமைகளுள் ஒன்று.
இவை ஏற்படுத்திய தாக்கங்கள்... பல்கிப்பெருகி வரும் கலாச்சார சீரழிவுகள். இந்த அவல நிலைக்கும் காரணம்... நாம் முழுமையாக மாறி விட்டோம். ஆனால் மிக எளிதாக நம் பிள்ளைகள் & விஞ்ஞான வளர்ச்சிகளை மட்டும் காரணம் காட்டி பழியைச் சுமத்தி தப்பித்துக் கொள்கின்றோம்.
சினிமா பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லையா... குறைந்த பட்சம் சிறு குழந்தைகளின் முன்னிலையில்லாமல் தனியாக பாருங்கள். காரணம், குழந்தைகளும் நம்மோடு திரைப்படங்களை - சினிமா & நிகழ்ச்சிகளைக் காணும்போது, அதில் வரும் காட்சிகளை அப்படியே மனதில் உள்வாங்கி, அதில் வரும் கதாபாத்திரங்களாக தங்களை உருவகப்படுத்திக் கொண்டு, கற்பனை உலகத்துக்கு மாறி விடுகின்றார்கள். அம்மாற்றத்தை அவர்களின் பேச்சு - நடவடிக்கைகள் வாயிலாக உடனே நம்மால் உணர / காண முடியும். இது கார்ட்டூன்களுக்குக் கூட பொருந்தும்.
ஒரு நாளைக்கு அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை டிவி - கம்புயூட்டரை (ரைம்ஸ் கார்ட்டூன்) பார்க்க அனுமதிக்காதீர்கள் என்கிறனர் குழந்தை நல மருத்துவர்கள். ஏனென்றால் இவைகளனைத்தும் அவர்களின் சிந்தித்து அறிந்து உணரும் திறனை - க்ரியேட்டிவிட்டியை (படைப்புத் திறனை) குறைக்கும் என்றார். குழந்தைகளுக்கு தன் பெற்றோர்களை விட மிகச் சிறந்த ஆசான் எவரும் இருக்க முடியாது.
நாம் நினைத்தால் - முயற்சியெடுத்தால் சினிமா - அது தொடர்பான மாயையில் இருந்து மீள அல்லது அதிலுள்ள அதீத ஈடுபாட்டை நம்மிடத்தில் / நம் பிள்ளைகளிடத்தில் படிப்படியாகக் குறைக்க முடியும். அன்றாட வாழ்வில் இவற்றை நம்மால் தவிர்க்க முடியவில்லையென்றால்... குறைந்த பட்சம் நமது பிள்ளைகளையாவது (அடுத்த தலைமுறையினரை) இதற்கு பலி கொடுக்காமல் கவனமுடன் பார்த்துக் கொள்வோம். வருங்கால சமுதாயம் இது போன்ற பைத்தியக்காரத்தனமான - கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா என்ற மாயையில் அடைபட்டு விடாமல் பாதுகாப்போம். இதனை புது வருட உறுதிமொழியாக எடுப்போம். |