-- செல் பேசி , இணைய தளம் மூலம் முறையற்ற தொடர்புகள்
-- பள்ளிகூடத்திற்கும் கல்லூரிக்கும் சென்ற வயதிற்கு வந்த பெண் பிள்ளையை காணோம்.
-- வீட்டில் இருந்த குமரிப்பெண்கள் மாயம்
-- கடற்கரையில் கள்ள உறவு ஜோடிகள்
என்ற செய்திகள் நம் செவிகளையும் இதயங்களையும் தாக்கிக்கொண்டே இருக்கின்றது.
முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவைகள் இன்று தினம் தினம் பெருகிக்கொண்டே வருகின்றது.
கால் நடைகள் காணாமல் போனால் நமக்கு ஏற்படும் சலனம் கூட ஊரில் பிறர் வீட்டைச்சார்ந்த வயதிற்கு வந்த பிள்ளைகள் ஓடிப்போகும்போது ஏற்படுவதில்லை. அப்படியே ஏற்பட்டாலும் கூட அந்த உணர்வானது தற்காலிகமானதாக மட்டுமே இருக்கின்றது.
இதில் குற்றவாளிகள் யார் ?
பழியை பிறர் மீது சுமத்தி எளிதாக தமது கடமையிலிருந்து தப்ப முயற்சிப்பதும் ஒரு வகையான குற்றம்தான்.
இந்த ஒழுக்க சீர்கேட்டிற்கு சம்பந்தபட்ட பிள்ளைகளை மட்டும் பழி சுமத்துவது பிரச்சினையை தீர்க்க உதவாது.
குழந்தைகளின் முதல் உலகமாக ஆசானாக கல்விக்கூடமாக திகழ்வது அதன் பெற்றோர்கள்தான். அவர்களின் இரண்டாம் பெற்றோர் பள்ளிக்கூடத்து நிர்வாகிகளும் , ஆசிரியர்களும் ஆவார்கள்.
இவர்கள் இருவரிடத்தில்தான் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்தையும் , அறிவையும் உலகத்தையும் சுருக்கமாக சொல்வதானால் மொத்த வாழ்வைப்பற்றிய அறிமுகத்தையும் பெறுகின்றனர்.
நமதூரைப்பொறுத்த வரை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்விக்கூட நிர்வாகிகளும் கடமையிலும் கண்காணிப்பிலும் தவறும்போதுதான் குழந்தைகளிடம் ஒழுக்க சீர் கேடு துளிர் விடத்தொடங்குகின்றது. இதற்கு அண்மையில் நடந்த இணைய தளம் மற்றும் பள்ளி மாணவி + ஆசிரியை நிகழ்வுகளும் சாட்சி.
முதன்மை பொறுப்பில் இருக்கக்கூடிய பெற்றோரும் ஆசிரியரும் பள்ளி நிர்வாகிகளும் கடமை தவறும்போது உறவினர்கள் மீது அந்த பொறுப்பு சாரும். அவர்களும் தங்கள் கடமையை மறக்கும்போது இந்த நெறிப்படுத்தும் பொறுப்பு ஜமா அத்தையும் , ஆலிம்களையும் சாரும். இவர்கள் எல்லாரும் தங்கள் கடமையிலிருந்து நழுவும்போது அது இறுதியாக பொது நல அமைப்புகள் மீதுதான் விழும்.
ஆனால் நமதூரைப்பொருத்தவரை மேற் சொன்ன அனைத்து பிரிவினரும் அதாவது ஒட்டு மொத்த சமூகமும் தனது கடமையில் இருந்து தவறியிருக்கின்றது.
ஓடிப்போகும் சம்பவங்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டில் தனியொருத்திக்கு நடப்பதாக நாம் நினைப்பதால்தான் இந்த கடமையை எளிதாக புறக்கணிக்கின்றோம். அடுத்ததாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது பொது தளத்தில் விவாதிப்பதையே ஒரு அவமானமாக கருதும் போக்கும் நம்மிடையே உள்ளது.
முதலில் இந்த எண்ண போக்குகளிலிருந்து நமதூர் மக்கள் விடுபட வேண்டும். தீக்கோழி போல் தலையை மட்டும் மண்ணுக்குள் புதைத்து கொள்வதால் சமூக அவலங்களை உலகத்தின் பார்வையை விட்டும் மறைக்க இயலாது என்கின்ற கசப்பான உண்மையும் நமக்கு புரிய வேண்டும்.
பின்னர் இந்த ஒழுக்க சீர்கேட்டின் ஆணி வேரை கண்டு பிடித்து தீர்க்கும் வகையில் ஜமா அத்துகள் ,ஆலிம்கள் , கல்வி நிறுவனங்கள் , சமூக நல அமைப்புகளின் பிரதி நிதிகளை உள்ளடக்கிய ஒரு அவையில் விவாதங்களும் கலந்தாலோசனைகளும் நடைபெற வேண்டும்..
இப்பிரச்சினைக்கு ஆன்மீகம் & தனி நபர் ஒழுக்கம் , குழந்தை வளர்ப்பு , உளவியல் , மன நலம் , ஆண் பெண் தொடர்பாடல் , பெற்றோர் புறக்கணிப்பு ,வறுமை , உரிய வயதில் திருமண தொடர்புகள் அமையாமை ,பெண் கல்வி , பெண்கள் உரிமை , நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகை , உலக மயமாக்கம் , நுகர்வியம், மத மாற்றம் , ஃபாசிச இயக்கங்களின் செயல்பாடு என பல பக்கங்கள் உண்டு.
இந்த விவாதங்களில் பிரச்சினையை துண்டு துண்டாக பார்க்காமல் மேற்குறிப்பிட்ட பல பக்கங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகத்தான் அணுக வேண்டும். அப்போதுதான் தீர்வின் வாசலையாவது பார்க்க முடியும்.
தவறும் பட்சத்தில் உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் பெருமையாக நினைவு கூறப்படும் நமதூரின் வரலாற்று பாரம்பரியம் இது போன்ற சிறுமைகளால் மங்கி விடும் சங்கடமும் உண்டு
சீர்திருத்த முயற்சிகள் அவசர கதியில் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் ஓடிப்போதலும் தவறான உறவுகளும் தினசரி காலண்டரின் தாளைக்கிழிப்பது போன்று எளிதில் மறக்கக்கூடிய அன்றாட நிகழ்வாகவும் இயல்பான விஷயமாகவும் மாறி விடும். |