படிக்காத பாமரர்களாக இருந்தபோது இருந்த நடை, உடை, பாவனை கல்வி அறிவு மிகைத்துள்ள இந்த காலத்தில் பெரும்பான்மையான மக்களிடம் இல்லை. கல்வி அறிவு பெறுவதே! பல விசயங்களையும் கற்று பகுத்தறிந்திடவும் அதன்மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும்தான். ஆனால் இன்று அவைகள் எல்லாம் தலைக்கீழாக உள்ளன.
உலக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து , மார்க்கக் கல்வியை புறக்கணித்ததின் காரணமாகத்தான் இந்த தலைகீழ் மாற்றம் என்று எண்ணத் தோன்றுகிறது – அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இன்று பெரும்பாலான பெண்கள், ஆடைகள் அணியும் விசயத்திலே மிகவும் கேவலமாக இருக்கிறார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதுவும் சிறு குழந்தைகளுக்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பெண் குழந்தைகளுக்கு உடை அணிவதில் மிகவும் மோசமாக இருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு வருடமாக இதை தொடராக நோட்டமிட்டு வருகிறேன் – மேலும், மேலும் இந்த அவலம் கூடத்தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆடைகள் அணியும் விதத்தை பற்றி ஆலிம்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லத்தான் செய்கிறார்கள் – அவைகளை எவரும் செவிமடுப்பதாக தெரியவில்லை. ஆடைகள் என்பது மானத்தைக் மறைப்பதற்காகவும், உடலை பாதுகாப்பதற்காகவும் உடுத்துவது – மானத்தைப் பறக்கவிடுவதற்காகவும் , உடலை நாசம் பண்ணுவதற்காகவும் உடுத்துவது அல்ல.
இன்று நமது பெண் குழந்தைகள் பெரும்பாலோர் ‘கை’கள் இல்லாத சட்டைகளையே அணிகிறார்கள். இதற்கு வயது வித்தியாசம் இல்லை பிறந்த குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை இந்த கேவலமான ஆடைகளையே அணிவது நாகரீகம் என்று கருதுகின்றனர் – இது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது.
சிறுமிகளுக்கு அரை, குறை ஆடைகளை அணிவிக்கின்றனர். முதுகு தெரிவது, வயிறு தெரிவது, மார்பு பாதிக்குமேல் தெரிவது, முட்டுக்காலுக்கு மேல் தொடை தெரிகிற மாதிரியான உடைகள். மேலும் சினிமா நடிகைகள் கூட , சில ஆடைகளை அணிந்து வெளியே வர கூச்சப்படும் வித, விதமான ஆடைகளை நமது சிறுமிகளுக்கு அணிவித்து அழகு பார்க்கின்றனர் இல்லை, இல்லை நரகத்திற்கு பாதை அமைக்கின்றனர்.
என் கண்ணில்பட்ட , என் காதுகளுக்கு எட்டிய சில சம்பவங்களை எழுத மனம் இல்லை , எழுத்தில் வடிப்பது சரியில்லை என்றாலும் சில சாதாரண சம்பவங்களை எழுதியே ஆகவேண்டிய கட்டாயத்தின் பேரில் எழுதுகிறேன் – இவைகள் வெறும் சாதாரண நிகழ்ச்சிகளே!
ஒருநாள், கடற்கரையில் சிறுமிகள் மூன்று பேர் விளையாடி கொண்டிருந்தனர் அவர்களிடம் சென்று, என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதில் ஒருவள் தேர்டு என்றால், அடுத்தவள் மூன்றாம் வகுப்பு என்றும் மற்றவள் நான்காம் வகுப்பு என்றாள். அவர்களில் இருவர் ‘கை’களில்லாத (Sleeveless Blouse/Tops) சட்டை (ரவிக்கை) அணிந்து இருந்தனர். தேர்டு என்று சொன்ன குழந்தையிடம் தாய்!, நீ இந்த மாதிரி கைகள் இல்லாத சட்டை போடாதேம்மா, கை வைத்துத் தைத்த சட்டை போடு என்றேன், உடனே அவள், “ இந்த வயசில் போடாமல் எந்த வயசில் போடுவார்கள் “ என்று போட்டாலே ஒரு போடு, பிறகு அவளிடம் சொன்னேன், தாய்! அப்படி சொல்லக்கூடாது நீங்கள் எல்லாம் பெரிய பிள்ளைகள் 8, 9 வயதாகிறது
அதனால் ‘கை’ வைத்து தைத்ததுதான் போடனும், பெரியவர்கள் சொல்வதை கேட்கனும் என்றேன், மூன்று பேர்களும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட தொடங்கினார்கள்.
இந்த சம்பவத்தில் அந்த குழந்தை அணிந்திருந்த கையில்லாத சட்டை எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை, “ இந்த வயதில் போடாமல் எந்த வயதில் போடுவார்கள் “ என்றாளே! அந்த வார்த்தைகள்தான் மனதில் தைத்தது. இதில் அந்த குழந்தைமேல் எந்த வருத்தமும் இல்லை, ஏனென்றால் குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான் அவர்களை சொல்லிக் குற்றமில்லை. அந்த குழந்தையின் வீட்டிலுள்ள பெரியவர்கள் மீதுதான் எனக்கு வருத்தம்.
காரணம் அந்த குழந்தை சட்டென்று முகத்தில் அறைந்ததுபோல் அந்த வார்த்தையை சொல்கிறது என்றால் நிச்சயமாக அவர்கள் வீட்டில் இதற்கு முன்பு யாரோ! அந்த குழந்தையின் ஆடை விசயமாக கேட்டிருக்க வேண்டும் , அதற்கு அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் (பெரும்பாலும் தாய்மார்கள்) “ இந்த வயசில் போடாமல் , எந்த வயசில் போடுவாள் “ என்ற பதிலை சொல்லி இருப்பார்கள் – அதனால்தான் அந்த குழந்தை என்னிடம் அதே வாசகத்தை சொல்கிறது.
இன்னொரு சம்பவம் , ஒரு நாள் காலை வாக்கிங் சென்று திரும்பும்போது 2 சிறுமிகள் சென்றுக் கொண்டிருந்தனர் அதில் ஒருவள் கையில்லாத சட்டை அணிந்திருந்தாள், அவளிடம் கை வைத்து தைத்து போடுமா, நீ வளர்ந்த பிள்ளை என்றேன் – எங்க உம்மாதான் போட சொல்கிறாள் என்றாள்.
மறுவாரம் மாலை நேரம் வாக்கிங் சென்று திரும்புகையில் 7, 8 குழந்தைகள் ஒரு கூட்டமாக டியூஷனுக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் அதில் கை இல்லாத சட்டை அணிந்த குழந்தை ஒன்று என் கண்ணில் தென்பட்டது. அந்த குழந்தையைக் கூப்பிட்டு, என்னம்மா படிக்கிறா என்றேன், ஆறாம் வகுப்பு என்று சொன்னாள் அது எனக்கு தெளிவாக கேட்ட பின்பும், அவளிடம், ஆறாம் வகுப்பா? இல்லை எல்.கே.ஜி. அல்லது யு.கே.ஜி. படிக்கிறியா என்றேன். அந்த குழந்தை மீண்டும் ஆறாம் வகுப்பு என்று சொல்வதற்குள் பக்கத்தில் நின்றிருந்த ( சென்ற வாரம் கை இல்லாமல் சட்டை அணிந்திருந்த ) அந்த குழந்தை, அடியா!, நீ கை இல்லாத சட்டை போட்டிருக்கிறியே! அதனால்தான் அந்த அப்பா, உன்னை எல்.கே.ஜி., யு.கே.ஜி. என்று சொல்கிறோ என்பதாக விளக்கம் கொடுத்தாள். அதற்கு அந்த குழந்தை என்னிடம் , எங்க உம்மாதான் வாங்கி தந்தாள் என்கின்றது. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் குழந்தைகளாக வற்புறுத்தியோ, விரும்பியோ வாங்கி கேட்கவில்லை – தாய்மார்களே! வாங்கி கொடுத்து சீரழிப்பதுதான் அதிகம் என்பது. இப்படி தாய்மார்களே! வாங்கிக் கொடுக்கும்போது பிள்ளைகள் என்ன செய்வார்கள்.
“சின்னப்பிள்ளைதானே!“ என்கிறார்கள், அப்படி சொல்வது பெரும் தவறு. குழந்தைகளாக இருக்கும்போது ஒழுக்கமாக வளர்ந்தால்தான் பெரியவர்களாகும்போது ஒழுக்கமாக வாழ்வார்கள். “சின்னப்பிள்ளைதானே!“ என்ற அறிவுக்கு பொருந்தாத வாதம்தான் அவர்களை அதல பாதாளத்திற்கு இழுத்துச்செல்கிறது.
முன்பெல்லாம் குழந்தைகள் குர்’ஆன் ஓத / மார்க்கக் கல்வியை கற்க செல்கிறதென்றால் அந்த சிறுவர், சிறுமியர்களுக்கு பிரத்தியேகமான மிக,மிக ஒழுக்கமான உடையை உடுத்தி அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடையை பார்த்தாலே!, அவர்கள் குர்’ஆன் வகுப்புகளுக்கு அல்லது மார்க்கக் கல்வியைக் கற்பதற்காக செல்கிறார்கள் என்பது தனியாக தெரியும். அந்த குழந்தைகளை பார்க்கும்போது அவர்கள் மீது ஒருவித பாசமும், மரியாதையும் ஏற்படும் - ஆனால் இன்று அது தலைகீழ் நிகழ்வாக இருக்கிறது.
சிறுவர்களுக்கு முக்கால் கால்சட்டையும் , ஒரு பனியனையும் போட்டு தலைக்கு தொப்பியும் இல்லாமல், சில நேரம் காலுக்கு செருப்புமில்லாமல் ஏதோ ஃப்ட் பால் விளையாட போகிறது மாதிரி அனுப்பி வைக்கிறார்கள். இந்தமாதிரி அனுப்பினால் எப்படி ஒழுக்கம் வரும். இப்படி எழுதியிருப்பதால் சிலர் கேட்பார்கள் ஏன் தொப்பி இல்லாமல் ஓதக்கூடாதா? பனியன் போட்டுக்கொண்டு ஓதக்கூடாதா? முக்கால் கால்சட்டைதானே! முட்டுக்கால் மறையத்தானே! செய்கிறது என்று.
இப்படியெல்லாம் உடை அணிந்து ஓதுவது கூடுமா? கூடாதா? என்ற பட்டி மன்றத்திற்கு செல்ல விரும்பவில்லை. பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும்போது கால்சட்டை, மேல்சட்டை, டை இவைகளை அயர்ன் செய்து , ஷூ’க்கு தினமும் பாலிஷ் போட்டு, அதற்கு மேட்ஷாக சாக்ஸ் அணிய செய்து தலை சீவி, சிங்காரித்து அனுப்ப மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்கிற நம் தாய்மார்களுக்கு, மார்க்க விசயங்களை கற்றுக்கொள்ள அனுப்பமட்டும் ஏன் இந்த நேரமின்மையும் மன உளைச்சலும்! ஏற்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டுகிறேன்.
முக்கால் கால்சட்டை என்பது முட்டுக்காலை நன்றாக மறைக்கத்தான் செய்கிறது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது விரும்பத் தகுந்தது அல்ல. முக்கால் கால்சட்டையை போட பழக்கப்படுத்தினால் அது நாளடைவில் அரைக்கால்சட்டையாக மட்டுமல்ல ‘கால்’ கால்சட்டையாக தொடை தெரிகிற அளவிற்கு மாறிவிடும் என்பதை எச்சரிக்கிறேன்.
ஆகவே, முழுக்கால்சட்டை அல்லது சாரம் / லுங்கி அணிவித்து தலைக்கு தொப்பியும், காலுக்கு செருப்பும் அணிவித்து மார்க்கக் கல்வியை கற்கவும், பள்ளிக்கு தொழப்போகவும் அனுப்புவதே சிறந்தது. நீங்கள் எந்த கொள்கையை பின் பற்றுபவர்களாக இருந்தாலும் சரி, இப்படி ஒழுக்கமான ஆடையை அணிவதால் உங்கள் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது மாறாக ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பெண் குழந்தைகளை எடுத்துக்கொண்டால் 5, 6 வயது சிறுமிகளுக்கு குட்டைப்பாவாடை (முட்டுக்கால் மேல் பகுதி நன்றாக தெரியும்படி) அணிந்து தலைக்கு மேல் ஒரு துணியும் இல்லாமல் காலையிலே பள்ளிக்கு ஒதுவதற்காக அனுப்பி வைக்கிறார்கள் இதை ஓறிரு இடத்தில் அல்ல பல இடங்களிலும் பார்க்கலாம்.
அப்படி குட்டைப் பாவாடை அணிந்து ஓத செல்லும் ஒரு சிறுமியை கேட்டப்போது, இது பள்ளிக்கூட யூனிஃபார்ம் ஓதிவிட்டு வந்ததும், உடனே பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டும் என்பதற்காக உம்மாதான் இதை போட்டு விடுகிறார்கள், என்கின்றாள்.
இதன் மூலம் என்ன தெரிகிறது குர்’ஆனை, மார்க்கத்தை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும் என்ற தூய எண்ணம் பெற்றோர்களுக்கு இல்லை. ஏதோ பள்ளிக்கூட பாடங்களை போல் குர்’ஆனையும் ஒரு பாடமாக சம்பிராயத்திற்காக கற்க செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது.
குர்’ஆனை ஓத எட்டுமணிக்கு யூனிஃபார்ம் போட்டு அனுப்புவதைவிட, ஒரு மணி நேரம் முன்னதாக , ஒழுக்கமான உடையை அணிவித்து அனுப்பலாமே.
பிள்ளைகள் மார்க்கத்தை கற்று, மார்க்கம் காட்டும் வழியில் வாழ வேண்டும் என்ற தூய எண்ணம் பெற்றோர்களுக்கு இருக்குமேயானால் அந்த பிள்ளைகளுக்கு ‘அதபு’களை முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும் – அந்த அதபு, உடைகளை உடுத்துவதிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.
மேலும் 9, 10 வயது பெண் குழந்தைகள் இறுக்கமாக உடைகளை அணிவது ஃபேஷனாகி விட்டது. கீழே, காலோடு காலாக இறுக்கமாக ஒட்டிக்கொண்டு பேண்ட் அணிவதும் – மேலே இறுக்கமாக வயிறுடன் ஒட்டிக்கொண்டு குட்டையாக சட்டை (Tops) அணிந்துக் கொண்டு சர்வசாதரணமாக சுற்றித்திரிகிறார்கள். இரண்டு கைகளையும் மேலே தூக்கினால் வையிறு / தொப்புள் நன்றாகத் தெரியும் அந்த அளவுக்குத்தான் அவர்கள் அணிந்திருக்கும் சட்டை அல்லது டாப்ஸ் என்ற தரித்திரம் பிடித்த உடை.
9, 10 வயது என்பது குறைமதியாளர்கள் சிலர் நினைப்பதுபோல் மழலைப் பருவமல்ல. தினமும் செய்திதாள்களில் படிக்கின்றோம் 8, 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது – சிறுமியை கற்பழித்து சென்றவரை போலிஸ் வலைவீசி தேடுகிறது – சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர் யார்? என்றெல்லாம் பலவிதமான செய்திகள் – இந்த நிகழ்வுகள் ஏற்படுவதற்கு அரை, குறை உடைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே இப்படி அரை குறை உடைகளை அணிந்து குழந்தைகள் சீரழிவதை தடுத்திட வேண்டும் – நாகரீகம் என்ற போர்வையில் முறையற்ற உடைகளை அணிவிப்பதால் குழந்தைகள் பழியாவதை காத்திட வேண்டும்.
மேலும் சிறுபிள்ளகள்தானே! 4, 5 வயதுதானே ஆகிறது, இந்த வயதில் எந்த உடையை அணிந்தால் என்ன என்று நினைக்காதீர்கள். இரண்டு வயது குழந்தைகளுக்குக்கூட வெட்கத்தைப் பற்றி தெரியும். மூன்று வயது குழந்தைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை அவர்கள் மிகவும் மதிநுட்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மூன்று வயதில் ஏற்படும் நிகழ்வுகள் அவர்களுக்கு ஆழப்பதியும். மூன்று வயதில் மனதில் பதிந்தவைகள் 60, 70 ஆண்டுகளானாலும் மறக்காது என்பது இந்தக் காலத்து குழந்தைகளுக்கு என்றில்லை, எல்லாக் காலத்து குழந்தைகளுக்கும் பொருந்தும்.
மூன்று வயதிலேயே குழந்தைகளின் உடை விசயத்தில் கவனம் செலுத்தினால், அந்த குழந்தைகள் ஒழுக்கத்துடனே வளர்வார்கள் – தவறினால் தட்டழிந்து போவார்கள்.
குழந்தைகள் ஆடைகள் அணியும் விசயத்தில் பெற்றோர்கள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. சில பெற்றோர்களிடம் கேட்டால் “ கை “ இல்லாததுதான் கிடைக்கிறது என்கிறார்கள் ( “கை” க்கான துணியை கடைக்காரர் தனியாக தந்தாலும் அதை இவர்கள் தைப்பது இல்லை என்பது வேறு விசயம்). “கை” இல்லாமல் இருந்தால் அதை ஏன் வாங்க வேண்டும்? “கை” உள்ளதுதான் வேண்டும் என்று மற்ற ரகங்களை பார்த்து வாங்க வேண்டியதுதானே.
அழகான செருப்பு என்பதற்காக, செருப்பு சின்னதாக இருக்கிறதே என்று செருப்புக்கு தகுந்த மாதிரி காலை வெட்டமாட்டோம். செருப்பு அழகாக இல்லை என்றாலும் காலுக்கு தகுந்த அளவில் வேறொரு செருப்பை எடுப்போம். அது போல்தான் ஒழுக்கமாக அணியக்கூடிய துணிகளை எடுக்க வேண்டும் – ஒழுக்கக்குறைவான துணி எவ்வளவுதான் அழகு என்றாலும் அதை வாங்கி அணியக்கூடாது.
கடந்த பத்து மாத காலமாக குழந்தைகள் உடுத்தும் ஆடைகள் விசயமாக ஆய்வுகள் செய்து வருகிறேன் என்னுடைய ஆய்வில் என்பது சதவிகிதத்திற்கு மேல் (80% க்குமேல்) தாய்மார்களின் கவனக்குறைவும் , குற்றமுமே தெரிய வருகிறது. இருபது சதவிகிதத்திற்கு (20% க்கு) குறைவாகத்தான் குழந்தைகளின் ஆசையும், அலங்கோலமும் இருப்பதாக அறியமுடிகிறது.
என்னுடைய பத்துமாத கால ஆய்வில் ஏறத்தாழ 140 குழந்தைகள் அரை, குறை ஆடைகளுடன் தென்பட்டது, அவர்களிடம் அல்லது அவர்களுடன் செல்கின்ற பெரியவர்களிடம் ஆடையின் விபரீதத்தை பற்றி அறிவுரை கூறி இருக்கிறேன் – இன்னும் தொடர்ந்து , பார்வையில் படுபவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டுதானிருக்கிறேன் அல்லாஹ்தான் அவர்களுக்கு நேர்வழியை கொடுக்க வேண்டும்.
இதிலே இன்னொரு வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் ஆலிம்கள் குடும்பத்து குழந்தைகளும் கைகள் இல்லாத அரைகுறை ஆடைகளை அணிகிறார்கள் என்பதுதான். இப்படி கூறுவதன் மூலம் ஆலிம்களை குறை கூறுவதாக எண்ணிவிட வேண்டாம்.
ஆலிம்கள் சொல்லவேண்டிய மட்டும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், மக்கள் செவிமடுக்கவில்லை என்றால் அதற்கு ஆலிம்கள் என்ன செய்வார்கள். ஆலிம்கள் சொல்லாமல் மெளனமாக இருந்தால்தான் குற்றவாளிகளாக ஆகமுடியும்.
சாதாரண மக்கள் அப்படி, இப்படி இருந்தாலும் ஆலிம்களின் குடும்பத்தவர்கள் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். அப்படி அவர்கள் நடந்துகொள்வதின் மூலமே ஆலிம்களுக்கு கெளரவம் கிடைக்கும், அவர்களின் சொற்களுக்கும் மக்களிடையே மதிப்பு ஏற்படும்.
என்னைப் பொறுத்தவரை கண்ணால் கண்டால் கூப்பிட்டு சொல்கிறேன், அதைக்கேட்டு திருந்திக்கொண்டால் அவர்களுக்கு நல்லது – திருந்தாமல் போனால் அவர்களுக்குத்தான் நஷ்டம் எனக்கு அல்ல, சொன்னதோடு என் கடமை முடிந்துவிடும்.
இந்த கட்டுரையை ஆறு மாதத்திற்கு முன்பே எழுத தொடங்கி, முடித்து வெளியிடாமல் வைத்திருந்தேன் காரணம் எனக்கு ஐக்கியப்பட்ட (மிகச்சிறு) குழந்தைகள் கையில்லாமல் அணிந்திருந்ததுதான். அவர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தும்வரை காத்திருந்த பின்பே இப்பொழுது இதை வெளியிடுகிறேன். ஊருக்கு உபதேசித்துவிட்டு, தனக்கு ஐக்கியப்பட்டவர்களை கண்டும் காணாதும் இருந்தால் நல்லதல்லவே!.
குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதும் , வளர்ந்தபின் ஒழுக்கமாக வாழ்வதும் பெற்றோர்கள் வளர்ப்பதிலேதான் இருக்கிறது. தாய் மட்டும்தான் குழந்தை மீது அக்கரை செலுத்த வேண்டும் என்றில்லாமல் தந்தையும் குழந்தையின் வளர்ப்பிலே, நன்னடத்தையிலே அக்கறை செலுத்தி , உங்கள் குழந்தைகள் நரகத்திற்கு செல்வதை தடுப்பதுடன், நீங்களும் நரகத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆகவே, இதை படிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் குழந்தைகளுக்கும் , உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்துக் குழந்தைகளுக்கும் அதபு குறைவான ஆடைகளை வாங்கி கொடுத்து சீரழிய வழிவகுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் - சிறுபிள்ளைதானே! என்பது சரியல்ல. எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் மக்களுக்கு நேர்வழியை காட்டியருள்வானாக ஆமீன்.
|