ஒவ்வொரு நாட்டுக்கும் , நகருக்கும் அதனதன் உரிமையை நிலைநாட்ட எல்லைகள் வகுத்திருப்பது போல் , தனிபட்ட மனிதர்களுக்கும் அவர்களின் நிலங்களை , வீடுகளை முழு சுதந்திரத்துடன் அனுபவிக்க அவர்களுடைய ஒவ்வொரு சொத்துக்கும் எல்லைகள் உண்டு. அந்த எல்லைகள் அரசாங்கத்தால் நிர்ணையிக்கப்பட்டு , அவைகள் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்விதமாக எல்லைகள் நிர்ணையிக்கப்படுவது நம் ஊரிலோ, நம் நாட்டிலோ மட்டும் அல்ல – உலகம் முழுமையிலும் நடைமுறையில் உள்ள பழக்க, வழக்கமாகும். இந்த அடிப்படையில் ஒருவருடைய நிலத்திற்கு அடுத்து இன்னொருவருடைய நிலம் வரலாம் அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலமோ அல்லது பொதுவான பாதைகளோ, சாலைகளோ வரலாம்.
அடுத்தவருக்கு சொந்தமான அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம் இல்லாமல் எந்த ஒரு நிலமும் தனித்து நிற்காது. எனவே ஒவ்வொரு நிலமும் அடுத்தவரை சார்ந்தோ , அரசாங்கத்தை சார்ந்தோதான் எல்லைகள் வகுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி பிரிக்கப்படுகிற எல்லைகளை அமைப்பதில் / அளப்பதில் நாம் நீதமாக நடந்துக்கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ்! திருமறையிலே கூறுகிறான், நிறுவையை நீதியாக நிலைபெறச் செய்யுங்கள் ; தராசைக் குறைத்து விடாதீர்கள் “ என்று.
ஆகையால் அளவுகளை அளப்பதிலே நீதியாக நடந்துக்கொள்ள வேண்டும் அது தங்கமாக இருந்தாலும், வேறு எந்த பொருளானாலும், நிலமாக இருந்தாலும் சரியே! அடுத்தவரின் நிலத்தில் அல்லது அரசாங்கத்தின் நிலத்தில் ஓர் அடிகூட முறையின்றி நம்முடன் இணைத்துவிடலாகாது – மேலும் பொது பாதைக்கு எந்த ஓர் இடைஞ்சலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் உணர வேண்டும். ஆனால் இன்று சொத்துக்களின் எல்லைகள் அளக்கப்படுவது பல இடங்களிலே முறை தவறி நடைபெறுகிறது என்பதை உணர முடிகிறது. அதிலும் பெரும்பாலும் தெருவின் பக்கம் உள்ள நிலங்கள் , கட்டிடங்களின் எல்லைகள் அத்துமீறுகின்றன – ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
சமீப காலமாக நமது ஊர் தெருக்கள் பலவும் ஒடுங்கத்தொடங்கி விட்டன. முன்பெல்லாம் நமது தெருக்கள் நேர்த்தியாக இருந்தது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில்கூட இல்லாத நேர்த்தி நமது சிரிய நகரில் இருந்தது. அன்று பெரிய, பெரிய அடுக்குமாடி வீடுகள் இல்லை என்றாலும்கூட , விரிவான தெருக்களிலும், குறுகிய தெருக்களிலும் அமைக்கப்பட்டிருந்த வீடுகள் எல்லாம் ஒரே சீராக இருந்தது.
வீட்டின் வெளிப்பக்கம் உள்ள சிறிய (ஜான்ஸ் வாயிற்படி) படிக்கட்டுகளும், மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் பால்கனியும் வெளியே தெருவில் இருந்தாலும், அது யாருக்கும் எந்ததொரு சிரமத்தையும் கொடுக்கவில்லை – பார்வைக்கும் சீராக அமைக்கப்பட்டு தெருக்கள் நேர்த்தியாக இருந்தது. ஆனால் இன்று அவைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தெருக்கள் குறுகிவிட்டன. சில தெருக்கள் சந்துகள் போன்று காட்சியளிக்கின்றன. ஒரு கார் மட்டுமே செல்லும் அளவிற்கு ஒரு வழிப்பாதையாக மாறிவருகிறது.
முந்தையக் காலத்தில் ஒரு வீட்டின் சராசரி அளவு அகலம் 20 அடியும், நீளம் 40 அடியுமாக இருந்தது – இதில் கொஞ்சம் கூடுதல், குறைவு இருக்கலாம். இந்த அளவிற்கு அதிகமாக பெரும்பாலும் யாரும் வீடு கட்டுவதில்லை. பணம் வசதி படைத்தவர்கள் அல்லது இடம் வசதியாக வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள்கூட மாடி வைத்துக் கட்டினார்களே! தவிர வீட்டின் அளவைக் கூட்டவில்லை.
இன்றையக் காலத்தில் இடவசதி வேண்டும் என்ற தேவை உள்ளவர்கள் மட்டுமல்ல – பணவசதி படைத்தவர்களாக இருந்தாலே போதும், வீட்டை பெரிதாக கட்டிவிடுகிறார்கள். நான்கு வீட்டின் நிலத்தில் இரண்டு வீடு அல்லது மூன்று வீட்டின் நிலத்தில் இரண்டு வீடு என்றும், அதற்கு மேலும் மாடிகளை வைத்து பல வசதிகளுடன் கட்டுகிறார்கள். இப்படி அவர்கள் வீடுகளை விசாலமாக கட்டுவதில் எந்த தவறுமில்லை. இன்றையக் கால சூழலுக்கும் , அவர்களுடைய தேவைக்கும் , அவர்களுக்கு இருக்கும் பண வசதிக்கும் வீடுகளை பெரிதாக , பல வசதிகளுடன் கட்டிக்கொள்ளலாம் – அதை குறை கூற முடியாது, குறை கூறவும் கூடாது. ஆனால் அவர்கள் வசதியாக / விசாலமாக கட்டுவதன் மூலம் பிறருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இடையூறு செய்தால் அது வருந்தத்தக்கது.
பெரிய, பெரிய வீடுகள் என்று அல்ல சிறிய வீடுகளை கட்டுகிறவர்கள் கூட இன்று தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு செய்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவதற்காக வீட்டின் முன்புறம் “ கார் ஷெட் “ ( கார் நிறுத்துமிடம் ) கட்டுகிறார்கள் – அந்த ஷெட்டுக்குள் கார் ஏற, இறங்க வேண்டும் என்பதற்காக தெருவின் நடைபாதையில் மூன்று அடி எடுத்து சரிவு (ஸ்லோப்) அமைக்கிறார்கள். இப்படி அமைப்பதினால் தெருவின் அகலம் சுருங்கி விடுகிறது - வாகனங்கள் செல்ல வசதிகள் குறைகிறது. அதுமட்டுமா எத்தனையோ பாதசாரிகள் அந்த சரிவில் தடுக்கி விழுகிறார்கள். இரவில் என்றல்ல பகலிலும்கூட தடுக்கி விழத்தான் செய்கிறார்கள். இப்படி தங்களுடைய சொந்த தேவைக்காக தெரு பாதையின் நிலத்தை எடுத்துக்கட்டி மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.
கார் ஷெட் அமையுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய காலத்தில் கார் நிறுத்த இடம் கிடைக்காதுதான், கிடைப்பது மிக, மிக சிரமம் என்பதும் உண்மையே!. அதனால் வீட்டின் முன்னே கார் ஷெட் அமைத்துக் கொள்வது பல வகையிலும் உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக மூன்று, நான்கு அடி கூடுதலாக உள்ளுக்குள் இடம் எடுத்து கார் ஏறுவதற்குண்டான ஏற்றத்தை உங்கள் கட்டிடத்திற்குள்ளேயே அமைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து அந்த சரிவு நிலை (ஸ்லோப்) கட்டிடத்திற்கு வெளியே தெருவிற்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்தீர்களானால் அது மக்களுக்கோ , வாகனங்களுக்கோ எந்த ஒர் இடையூறையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.
இன்று எங்கு பார்த்தாலும் ( மிகுதியான தெருக்களில் ) அந்த சரிவு நிலைகள் (ஸ்லோப்) தார் ரோடு / சிமெண்ட் ரோடுகளை தொட்ட வண்ணமே! , ஏன்! அந்த ரோட்டின் மேல் 1 அல்லது 2 அடிகளை தாண்டியும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை கண்கூடாக பார்க்கலாம். இப்படி செய்வதற்கு வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும் – அல்லாஹ்வின் தண்டனையை மறந்துவிடக்கூடாது.
மேலும் இப்பொழுது புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய வீட்டை புதுப்பிப்பவர்களும் ஏற்கனவே இருந்த அவர்களின் எல்லையைக் கடந்து வந்து தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் மின் கம்பம் / டெலிபோன் கம்பம் வரை இழுத்து தங்கள் வீட்டின் அளவை கூட்டிக்கொள்கிறார்கள் / விரிவுப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டினருகில் மரம் இருந்தால் அந்த மரம் வரையில் தங்கள் ஆக்கிரமிப்பை விரிவுப்படுத்திக் கொள்கிறார்கள் – இது மகாத் தவறு.
சில மக்கள் நினைக்கிறார்கள் மின் கம்பங்களையும், மரங்களையும் தாண்டிதானே தார் ரோடு, சிமெண்ட் ரோடு போட்டு இருக்கிறார்கள், எனவே அதுவரை நம் வீட்டை அமைத்துக்கொள்ளலாம் – அதனால் வாகனத்திற்கு இடையூறு ஒன்றுமில்லையே! என்று.
மின் கம்பம் அல்லது மரம் வரை உள்ள நிலம் உங்களுக்கு எவ்வகையில் சொந்தமாகும். உங்கள் எல்லைமால் என்ன என்பதை பாருங்கள் நான்கு முனையையும் அளந்தால் உங்கள் எல்லைகள் தெளிவாகும். உள்பக்கம் உள்ள இரண்டு முனையையும் பக்கத்து நிலங்களுடனும் , தெரு பக்கம் உள்ள இரண்டு முனைகளையும் தெருவின் ஆரம்பப்பகுதியுடன் ஒப்பிடுங்கள். அதல்லாமல் அங்குள்ள மின் கம்பத்தையோ அல்லது மரத்தையோ எல்லையாக மனதில் கொண்டு அளந்தால் இந்தமாதிரியான தவறுகள் / தப்புகள் வரத்தான் செய்யும். வீடுகளை அழகாக கட்ட வேண்டும் , விரிவாக , வசதியாக கட்ட வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் நிலத்தை / நடை பாதையின் நிலத்தை எடுப்பது எப்படி முறையாகும்.
சில மக்கள் சொல்வார்கள் அந்த வீட்டைப் பார், இந்த வீட்டைப் பார் என்று அருகில் உள்ள வீடுகளை காண்பித்து, அவர்கள் வீடுகள் எல்லாம் எங்கள் வீட்டைவிட ரோட்டுப்பக்கம் கூடுதலாக வந்து இருக்கிறது என்று. அடுத்தவர்கள், ரோட்டை தவறுதலாக ஆக்கிரமிப்பு செய்ததை காரணம் காட்டி, நாமும் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி நியாயமாகும்?. இப்படி ஒருவரை ஒருவர் காரணம் காட்டினால் செய்கின்ற தவறுகள் எல்லாம் தவறில்லை என்று ஆகிவிடுமா. ஒக்க சிரித்தால் வெட்கமில்லை என்பது போல் ஒரு “ ஹராமை “ பல பேர்கள் செய்தால் அது “ ஹலால் “ ஆகிவிடாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீது வருகிறது “ பிறருடைய நிலத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவரின் கழுத்தில் (மறுமையில்) ஏழு பூமிகளை தொங்கவிடப்படும் “ என்று . அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்.
இன்னும் மக்களில் சிலர் கூறுகிறார்கள், இது அடுத்தவர் நிலம் அல்ல – அரசாங்கத்தின் நிலம்தான் – இதில் நமக்கும் பங்கு உண்டு என்று. இப்படி கூறுவது எவ்வகையில் சாத்தியமாகும் – அரசாங்கத்தின் நிலமானாலும் , அடுத்தவர் நிலமானாலும் தவறு, தவறுதான் என்பதை மக்கள் உணர வேண்டும். “ நிலத்தில் (வைக்கப்படும்) அடையாளங்களை மாற்றி அமைப்பவனை அல்லாஹ் சபிக்கிறான் “ என்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்பதாக அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் ஸஹீஹுல் முஸ்லிமில் வரும் ஹதீதிலே அறிவிக்கிறார்கள். ஆகவே அல்லாஹ்வுடைய சாபம் கிடைக்குமே என்ற பயம் ஏற்பட வேண்டும் – அந்த பயத்தின் காரணமாக இப்படி அடுத்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
புதிதாக வீடு கட்டுவதற்கு முன்பு இருந்த, பழைய வீட்டின் அளவு சரியாகத்தான் இருந்திருக்கும். ரோட்டுப்பக்கம் உள்ள ஜான்ஸ் வாசலின் (வாயிற்படி) படிக்கட்டுகள் (பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு படிகள்) ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை தெருவில் இருக்கும் – இதற்கான வரியை வீட்டு தீர்வையுடன் சேர்த்து, நகராட்சிக்கு கட்டுவது வழக்கம் (இப்பொழுது அந்த வரி வசூலிப்பது நடை முறையில் உண்டா இல்லையா என்பது தெரியாது). இப்படி தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் வாயிற்படி படிக்கட்டுகளால் தெருவுக்கு எந்த இடையூறும் இருந்ததில்லை.
ஆனால் இன்று ரோட்டுக்கு மேல் ரோடு போட்டு எல்லா தெருக்களும் உயர்ந்து விட்டதால் வீடுகளின் வாயிற்படி படிக்கட்டுகளும் உயரமாக அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக தெரு பக்கம் அமையக்கூடிய வாயிற்படி படிக்கட்டுகள் ஒன்று, இரண்டிலிருந்து ஐந்து, ஆறு என்ற எண்ணிக்கைக்கு ஏணிப்படியாக உயர்ந்த நிலையில் அந்த வாயிற்படி படிக்கட்டுகளை தெருவை முன்னோக்கி அமைக்காமல் , பக்கவாட்டில் அமைத்து ஏறி, இறங்குகிறோம். இப்படி வைப்பதில்கூட எவ்வளவுக்கு அவைகளை சுருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவைகளின் அகலத்தை சுருக்கி தெருவின் நடைபாதைக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் அமைத்துக்கொள்ள வேண்டும் – அதுதான் முறை.
அப்படி முறையாக செய்கிறோமா என்றால் இல்லை எனலாம். அந்த படிக்கட்டுகளை கம்பீரமாக அமைத்து அவைகளுக்கு மார்பிள், கிரில் என்று பல விதத்திலும் அலங்கரித்து, அதன் அளவைக்கூட்டி மக்களுக்கு இடைஞ்சலைத்தான் உண்டுபண்ணுகிறோம் – இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
வீட்டு உரிமையாளரிடம், ஏன் படிக்கட்டுகள் ரோடுவரை வந்து இருக்கிறது என்று கேட்டால் அவர் சொல்வார், இது மேஸ்திரி செய்த வேலை, முதலில் நாங்கள் இப்படி வரும் என்று நினைக்கவில்லை, வீட்டு வேலைகள் முடியும்போதுதான் இது எங்களுக்கு தெரிய வந்தது என்று. அதுமட்டுமல்லாது இன்னொரு சூப்பர் சமாளித்தலும் அவர் வாயிலிருந்து வரும் ஹி…ஹி… வாயிற்படிக்கட்டு ரோட்டைத் தொடுதே! என்று அளந்துப்பார்த்தோம், எங்கள் நிலம் ரோடுவரை 4 அடி இருக்கத்தான் செய்கிறது ஆனால் நாங்கள் 3 அடிதான் அதில் (ரோட்டில்) எடுத்திருக்கிறோம் என்பார்.
ஏதோ, ஒரு, சில இடங்களில் இந்த மாதிரி 3 அடியோ, 4 அடியோ ரோட்டை தொடுகிறமாதிரி அவர்களுடைய பத்திரப்பதிவுப்படி இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை – சில நேரங்களில் பத்திரப்பதிவுகளில் தவறுகள் ஏற்படுவதும் உண்டு. ஆனால் இப்பொழுது நம் மக்கள் செய்கிறதைப்போல் எல்லோருக்கும் ரோடுவரை நிலம் இருக்காது – எல்லா பத்திரங்களிலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் தெரு நடைப்பாதைக்காகவும் 4 அடி நிலம் விட்டுக்கட்டுவது உண்டு. அன்றைய நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இறைவனுக்கு பயந்தவர்களாக அவைகளை முறைப்படுத்தி செய்தார்கள்.
இன்னும் சொல்வதென்றால் பழைய வீடு இருந்த அளவை கணக்கு வைத்துக் கட்டினால் இந்த நிலை வராது. இடிக்கப்பட்ட அந்த பழைய வீட்டில் அவர்களுடைய 3, 4 தலைமுறைகள் வாழ்ந்திருப்பார்கள் 70 , 80 வருடங்களாக குறைந்தது 50 வருடங்களுக்கும் மேலாக அந்த வீட்டில் பரம்பரையாக வாழ்ந்தபோது தெரியாத அந்த 4 அடி நிலம் புதிய வீட்டை கட்டும்போது புதிதாக முளைத்து விடுகிறதா?. உண்மையாகவே, உங்கள் நிலத்தில் சில அடிகள் ரோட்டிலே இருந்தாலும்கூட, நடை பாதைக்கு என்று சில அடிகள் விட வேண்டும் இன்னும் தெருக்களும் சீராக தெரிய வேண்டும் அல்லவா! இவைகளை எல்லாம் சிந்தித்து கட்டினால்தான் அந்த வீடு சீராகவும் அமையும், சிறப்பாகவும் இருக்கும்.
புதிதாக வீடுகளை கட்டுபவர்கள் முடுக்கு பகுதிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முடுக்குகளில் பெரிய அளவில் படிக்கட்டுகளை உயரமாக கட்டுகிறார்கள் – இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். இரு பக்கத்து வீட்டாரும் படிக்கட்டுகளை கட்டி அதில் கிரில் வைத்திருப்பதால், உள் வீட்டுக்காரர் சைக்கிளைக்கூட உள்ளே கொண்டுப்போக முடியவில்லை. அந்த வழியாக மாடு ஏதும் வந்தால்கூட அதை கடக்கவும் முடியாமல் வந்த வழியே திரும்பவும் முடியாமல் தவிக்கிறது. தெரு வீட்டுக்காரருக்கு சிரமம் இருக்காது. உள் வீட்டுக்காரர்தான் ரிப்பேருக்காக ஃப்ரிஜ் , மற்றும் ஃப்ர்னிச்சர்களை எடுத்துச் செல்ல மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகிறார். இதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள் மரணித்தவருடைய “ மையத்தை “ கொண்டு செல்ல முடியவில்லை என்பதே மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. ஆகவே நடை பாதைக்கு நாசத்தை உண்டாக்குகிறவர்கள் – இறைவனால் நாசமாக ஆக்கப்படுவதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் கழிவுநீர் தொட்டிகளை (செப்டிக் டேங்க்) அமைப்பதை பற்றி பார்க்கும்பொழுது அதுவும் இன்று முறையற்றதாகவே இருக்கிறது - தெருக்களுக்கும் நடைபாதைகளுக்கும் இடையூறாகவே அமைந்துள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் கழிவுநீர் தொட்டிகளை முடுக்குகளில்தான் அமைத்தார்கள். அன்று முடுக்குகள் விசாலமாகவும், காலிமனைகள் அதிகமாகவும் இருந்ததுடன் மக்களும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார்கள். ஆனால் இன்று அவைகள் எல்லாம் சுருங்கி விட்டதுடன் , வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால் தெருவின் பக்கமும் கழிவுநீர் தொட்டிகளை வைக்கவேண்டிய கட்டாயமாகிவிட்டது என்பது உண்மையே!
தெருக்களின் பக்கம் அவரவர்கள் வீட்டை ஒட்டியே கழிவுநீர் தொட்டியை அமையுங்கள் அதை தவிர்க்க இயலாது. ஆனால் அதை ஒரு கட்டுப்பாட்டுடன் அமையுங்கள். ஒன்றரை அடி அல்லது அதிகபட்சம் இரண்டு அடி அகலத்திற்குள் இருக்குமாறும் , தரை தளத்திற்கு மேல் அந்த தொட்டி வெளியே தெரியாமல் அமையுமாறும், உறுதியான கான்கிரீட் மூடியோடு அமைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் பாதசாரிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறை ஏற்படுத்தாது.
ஆனால் இன்று தெருக்களில் தாராளமாக 4 அடி அகலம் வரை கழிவுநீர் தொட்டியைக் கட்டுகிறார்கள். தரைத் தளத்திலிருந்து அரை அடி அல்லது முக்கால் அடி உயரம் வரை உயர்த்திக் கட்டி இருக்கிறார்கள். இப்படி உயர்த்திக் கட்டுவதால் பாதசாரிகள் நடப்பதற்கும், வாகனங்கள் செல்வதற்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன. தரையோடு, தரையாக கட்டுவதால் பெரிய வாகனங்கள் அதன் மேல் ஏறி, அது உடைந்து வாகனமும் விழுந்து, பல விபத்துகள் ஏற்படுகிறது – உயிர் பலியும் ஏற்படுகிறது. ஆகவே 3, 4 அடிகள்வரை கழிவுநீர் தொட்டிகளின் அகலத்தை தெருவின் பக்கம் இழுத்து வராமல் ஒன்றரை அடி அல்லது இரண்டு அடிக்குள் உங்கள் சுவரோடு சேர்த்துக் கட்டி தரையோடு தரையாக அமைத்துக் கொண்டால் நல்லது. உங்கள் சுவரை ஒட்டியவாறு எந்த கனரக வாகனமும் வராது அதனால் வாகன விபத்துகள் ஏற்படாது, தரையோடு தரையாக இருப்பதால் பாதசாரிகளுக்கும் இடையூறு இருக்காது.
இப்படி தெருக்களுக்கும் நடைபாதைக்கும், ஏதோ பொதுமக்களின் வீடுகளில் மட்டும்தான் இடையூறை ஏற்படுத்துகிறார்கள் என்றில்லை. வணக்க வழிப்பாடு நடைபெறுகிற இடங்களில்கூட கழிவுநீர் தொட்டிகளை ரோட்டின் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணமாக அமைத்திருக்கிறார்கள் – தெருவை ஆக்கிரமிப்பு செய்யும்வண்ணம் கூரைகளையும் அமைத்திருக்கிறார்கள் – இது மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் கழிவுநீர் தொட்டிகளை உள் வளாகத்தில் அல்லது திறந்தவெளி இடங்களில் சில சிரமங்களையும், செலவுகளையும் பாராமல் அமைத்துக்கொள்வது நல்லது. பொது ஸ்தலங்களும், வழிபாட்டு ஸ்தலங்களும்தான் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தனக்காகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ சொந்தமாக ஒரு வீட்டை கட்டும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக தொடங்குகிறோம். அது பெரிய பங்களாவானாலும் சரி, சாதாரண வீடானாலும் சரி ஏன் அது ஒரு குடிசை வீடாக இருந்தாலும் சரியே!, பல எதிர்பார்ப்புகளுடன், தேவையான வசதிகளை அமைத்துக்கட்டி மகிழ்ச்சியோடு குடியேறுகிறோம்.
சொந்தமாக வீடு கட்டி குடியேறும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியை அளவிட முடியாது – அவரவர் வசதிக்கு தக்கப்படி விருந்து உபசாரங்கள் நடைபெறுகிறது. வீடும், வீட்டில் உள்ளோரும் எப்போதும் சந்தோசமாக , மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக கட்டிய வீட்டில் திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்களுக்கு ஏற்பாடு செய்து குடிபுகுகின்றோம். திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்களை வைப்பதற்கு கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட திக்ர், ஸலவாத் போன்ற வைபவங்கள் வைக்காது போனாலும் உற்றார், உறவினர்களுக்கு விருந்து கொடுத்தும், ஆடு அறுத்து ஏழைகளுக்கு (குர்பானி) கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டுதான் புதிய வீட்டிலே குடியேறுகிறார்கள். அப்படி மகிழ்வோடு அந்த புதிய வீட்டிலே குடியேறுவதிலே மிகப்பெரும் சந்தோசத்தை காண்கின்றார்கள். இவ்வாறு செய்வதிலே ஊர்களுக்கு இடையிலோ, கொள்கைகளுக்கு மத்தியிலோ வித்தியாசம் இல்லை.
நம் ஊரிலே அவர்கள் வீடு கட்டினாலும் சரி அல்லது அவர்கள் வியாபாரம் செய்யும் பெரிய,பெரிய நகரங்களிலே சொந்தமாக வீடு கட்டினாலும் சரி இந்த மகிழ்ச்சியை கொண்டாட விருந்து உபசாரங்கள் இருக்கும். இப்படி நாம் புதிய வீட்டில் குடியேறுகிற அன்று மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டு பலருடைய ‘துஆ’ வை ( வாழ்த்துக்களை ) யும் பெறுகின்ற நாம், அந்த வீட்டில் குடியிருக்கின்ற காலமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் ஆக்கிரமிப்பு இல்லாது, பிறருக்கு இடையூறு இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
குடியேறுகின்ற அன்று நம் வீட்டுக்கு வந்த உற்றார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாம் நம்மிடம் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வதிலே இருப்பார்களே தவிர, நம்மிடம் உள்ள குறையை சுட்டிக் காட்டமாட்டார்கள். ஆனால் நம் வீட்டின் மூலம் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பினால், தெருப் பாதைக்கு ஏற்படும் இடையூறுகளினால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் காலமெல்லாம் நம்மை சபிப்பார்கள் , கடும் சொல்லை உதிர்ப்பார்கள். இன்னும் அந்த ஆக்கிரமிப்புகளை காணுகின்ற பாதிக்கப்படாத மக்களும் , இது பலருக்கும் இடையூறை ஏற்படுத்தும் என்பதால் சபிப்பார்கள் , என்பதை உணருங்கள். வீட்டுக்கு அழகும், அந்தஸ்தும் கிடைக்க வேண்டும் என்றால் தெருபாதைக்குரிய அந்தஸ்தையும், அழகையும் அந்த வீட்டின் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும்.
எனவே, மகிழ்ச்சியாக வீடுகளை கட்டக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அந்த வீட்டிலே மகிழ்ச்சியாக எப்போதும் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய மனம் விசாலமாக இருந்து தெருக்களையும் , நடைபாதையையும் விசாலப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்! நம்முடைய கப்றும் விசாலமாகும் என்பதை மறவாதீர்.
மேலும் தெருப்பாதையை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் இன்னயின்ன கொள்கை, கோட்பாடை சார்ந்தவர்கள் என்றோ, பணக்காரர், ஏழை, அதிகார வர்க்கத்தில் உள்ளவர், அரசியல்வாதி என்றோ, ஏன் அறிஞர் என்றோகூட பிரித்து சொல்வற்கு இல்லை, எல்லா தரப்பினர்களும் இதில் பங்குக் கொண்டுள்ளனர் இறைவனை பயந்தவர்களைத் தவிர. மற்ற எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
முன்பு எப்போதும் இல்லாத அளவில் இன்றையக் காலத்தில்தான் இந்த ஆக்கிரமிப்பும் , இடையூறும் நடைபெறுகிறது. மரணிக்கும்போது யாரும் , எதையும் கொண்டுபோவதில்லை , எதுவும், எவருக்கும் சொந்தமில்லை ஆறு அடி நிலத்தைத் தவிர என்பார்கள் – அது அந்த காலம் – ஆனால் இன்று அந்த ஆறு அடி நிலம் கூட எவருக்கும் சொந்தமில்லை. ஒருவரை அடக்கம் செய்த அதே குழியில் சில வருடங்கள் கழிந்த பின் இன்னொருவரை அடக்கம் செய்கிறோம் என்பது தெளிவு. அதனால் அந்த ஆறடி நிலத்தைக் கூட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
இப்படி ஊரார் நிலத்தை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலும் வீடுகளை கட்டுகிறார்களே! அவர்கள் யாராவது நிம்மதியாக, மனம் அமைதியாக வாழ்கிறார்களா! என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கு வரும் நோய், நொடிகளைப் பற்றி சொல்லவில்லை – நோய் , நொடிகள் எல்லோருக்கும் வரும். ஆனால் மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் , தானம், தருமங்கள் செய்து வந்தாலும் , தொழுகை, இபாதத்களை முறையாக செய்பவர்களாக இருந்தாலும்கூட, அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு இனம் புரியாத மனக் குழப்பமும், மன அமைதியின்மையும் அவர்களை இந்த உலகத்தில் ஆட்கொள்கிறது – மறு உலகிலோ இறைவனால் கொடுக்கப்படும் தண்டனை கடுமையாக இருக்கும். மக்கள் இந்த சிரமங்களை, தண்டனைகளை உணர்ந்தார்களானால் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை செய்யமாட்டார்கள்.
இந்த கட்டுரையின் நோக்கம் தவறுகளை செய்திருப்பவர்கள் , செய்யப்போகிறவர்கள் மக்களின் சாபத்திற்கும், இறைவனின் கோபத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதே!. ஆகவே, புதிதாக வீட்டைக் கட்டக்கூடியவர்கள் தங்கள் வீட்டுப் படிகளையும், கார் ஷெட்’ களின் சரிவு (ஸ்லோப்) களையும் மற்றும் கழிவுநீர் தொட்டிகளையும் தெருவின் நடைபாதைகளுக்கு இடையூறு இல்லாது அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறமாதிரி தவறுதலாக அமைத்திருப்பவர்கள் அவைகளை அகற்றிக்கொள்ளுங்கள். இறைவனின் அருள் அவர்கள் மீது உண்டாகும். இப்போது தவறுதலாக இருப்பதை அகற்றுவதில் எந்த கெளரவமும் பார்க்க வேண்டியதில்லை – அப்படி அகற்றுவதால் சில செலவுகளும் , அசெளகரியமும் ஏற்படத்தான் செய்யும் அதை நீங்கள் இன்று சிந்தித்து அதை சரிப்படுத்தாது விட்டால், நாளை அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க வேண்டியது வரும். ஆகவே அவைகளை அகற்றி , தெருக்களை தெருக்களாக ஒளிரச்செய்யுங்கள்.
வல்ல அல்லாஹ்! நம் மக்களை நேரான பாதையில் நடக்க செய்து , மனமும் ஒடுங்காது – தெருவும் ஒடுங்காது காத்தருள்வானாக ஆமீன். |