வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82 லட்சம் பேர் வேலைவாய்ப்பு எதிர்பார்த்துள்ளனர் என்ற செய்தியை படித்த போது, படித்து முடித்த கையோடு எம்ப்ளாய்மன்ட் எக்சேஞ்சில் பதிவு பண்ணி வேலைக்காக அலைந்த நாட்கள் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. இன்றைய KCGC யின் வழிகாட்டுதல்கள் இல்லாத காலம் அது.
கல்லூரி படிப்புக்கு பின்னர் எதாவது ஒரு பொழப்பை பார்த்துதான் பலர் செல்ல வேண்டியிருந்தது. தகுந்த படிப்பிருந்தும் ஒரு வழிகாட்டுதல்கள் இல்லாததினால் திசை மாறிய பறவைகளாய் சுற்றித்திரிந்து காலம்கடந்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் அல்லது இறுதிவரை வராமல் சென்றவர்களும் கூட உண்டு.
முந்தைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவுக்கு படித்தோ அல்லது பிள்ளைகளின் வேலை தொடர்பான ஆலோசனைகளை வழங்க முடியாத சூழலும், படிச்சு முடிச்ச கையோட தங்கநகை கடைக்கோ அல்லது விசிட் விசா எடுத்து வாப்பா, மாமா என்று யாராவது அவங்க கம்பெனியில் வேலை வாங்கி தந்து விடுவார்கள் என்ற மனநிலையும் இதற்கு காரணம்.
கல்லூரி படிப்பு வரை தான் பெற்றோர்களின் பொறுப்பு. அதன் பின்னர் ‘இரையை தேடி அலையும் பறவைகள் போலத்தான்’ ஒவ்வொரு பட்டதாரியும் அலைய வேண்டும். ஃபர்ஸ்ட் ஜாப் (முதல்வேலை) கிடைக்கின்ற வரைக்கும், சிரமங்களை தாண்டித்தான் பலர் பயணிக்க வேண்டும். அதுவரை பெற்றோர்களும் பொறுமையுடன் தன் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டி நம்பிக்கையளித்து கொண்டிருக்க வேண்டும்.
கல்லூரி (கற்பனை) வாழ்க்கை கனவுகளோடும் அதே (ஊர்) நண்பர்கள் பட்டாளங்களுடன் கண்காணிக்க ஆளில்லை என்றெண்ணி சிலமாதங்கள் பொழுது போக்கிய பின்னர் வேலையை சீரியஸாக தேடுகின்றனர் சிலர். வேலை தேடுமிடத்தில் ரூமேட்ஸ் - நண்பர்கள் வட்டாரம்
சரியானதாக, வேலைக்கு கடுமையாக முயற்சிப்பவர்களாக அல்லது அப்படி பட்டவர்களோடு நட்பை ஏற்படுத்தி கொண்டால், பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல நாமும் உந்துதல் பெற்று கரையேறி விடலாம்,
ஒரு காலத்தில் மென்பொருள் (சாப்ட்வேர்) துறையில் வேலை தேடவேண்டுமென்றால் கணினியுடன் கூடிய BE / MCA இருக்க வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலான துறையினரும் அதில் வேலை தேடும் அளவுக்கு வேலைவாய்ப்புகளும் அதற்கு தகுந்தாற்போல் போட்டிகளும் நிறைந்து காணப்படுகின்றன.
பெரும்பாலான நிறுவனங்கள் இளம் பட்டதாரிகளை (Fresher’s) உளச்சார்புத் தேர்வு (Aptitude Test), குழு கலந்துரையாடல் (Group Discussion) மற்றும் உற்றறி பண்பாற்றல் (psychometric) டெஸ்ட் மூலம் கேம்பஸ் அல்லது ஆஃப் கேம்பஸில் தேர்ந்தெடுக்கின்றனர்.
மேற்படிப்புகளுக்காக (GMAT/ GATE / GRE ) முயற்சிப்பவர்கள், எப்படியாவது கேம்பஸ் இண்டர்வியூவில் வேலையே பெற்று விட வேண்டும் என்று எண்ணுபவர்கள், கல்லூரியின் இறுதி வருடத்திலேயே Aptitude Test மற்றும் Group Discussion களுக்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். ஆனால் நாமோ, வேலையே தேட ஆரம்பிக்கும் போதுதான் Aptitude Test - க்காக RS.Agarwal(?) புக்கையே தேட ஆரம்பிக்கின்றோம்... ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கின்றோம்.
பெங்களூரில் வேலைபார்க்கும் போது, காயலர் (இளம்பட்டதாரி) களின் சரணாலயமாகிய ‘அமீன் ஹௌசில்’ குழு கலந்துரையாடலுக்கான ஒத்திகைகள் இளம்பட்டதாரிகளுக்குள் நடக்கும். ஒரு சிலரை தவிர பலர் கூச்ச(அச்ச)த்துடன் கலந்து கொள்வதில்லை. என்னதான் பொறியியல் பட்டபடிப்பு & அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், ஆங்கிலம் என்பது வெறும் மதிப்பெண்களை பெறுவதற்காகவும் , ஆங்கிலத்தில் பேசினால் பீட்டர் -ன்னு சொல்லிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வும் கூச்சசுபாவமும் தான் இதற்கு காரணம்.
இன்றைய நவீனயுகத்தில் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் நாளிதழ்களில் விளம்பரங்களாக வருவதில்லை. இணையதளங்களிலும், லிங்க் டின் போன்ற சமூக வலைதளங்களிலும், ஈமெயில் க்ரூப்ஸ் என்று தகவல் (Information) பரிமாற்றங்கள் மற்றும் நண்பர்கள் ‘நெட்வொர்க் ‘ மூலம் எம்ப்ளாய் ரெஃபரல், ஈமெயில் ஃபார்வட் - ளாகத்தான் இருக்கின்றது.
கணிசமான வேலை வாய்ப்புகள் கன்சல்டன்ஸி - கள் மூலமும் வருகின்றது. வேலைக்கு ஆள் எடுத்து தர உதவியதற்காக கன்சல்டன்ஸி - களுக்கு பல ஆயிரங்களை நிறுவனங்கள் வழங்குகின்றன. பெரிய நிறுவனங்களில் / வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக இளம் பட்டதாரிகளிடம் பணத்தை உறிஞ்சும் டுபாக்கூர் கன்சல்டன்ஸி - களும் உள்ளன.
மற்ற துறைகளில் (Exமெக்கானிக்கல் / எலெக்ட்ரிகல்) ஒரு சிலரே நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் ஓரிரு வருடங்கள் சிறிய நிறுவனங்களில் அனுபவம் பெற்று விட்டால் IT - க்கு இணையான நல்ல ஊதியம் வெளிநாடுகளில் கிடைக்கின்றது. அப்படி முன்னேறிய பலரும் நம்மில் இருக்கின்றார்கள்.
இளம் பட்டதாரிகள் வேலை அனுபவத்திற்காக Small Scale Industries அல்லது ஏதோ ஒரு சிறு/நடுத்தர நிறுவனங்களில் நுழையும்போது, பட்ட படிப்பு சான்றிதல்களை வாங்கி வைத்து விட்டு அடிமை சாசனம் (Bond) எழுதுவதிலும், ட்ரைனிங் என்ற பெயரில் காசை கறப்பதிலும் கில்லாடிகள்
இவர்களில் சிலர்.
சரியான பயோ-டேட்டா (Resume) , நேர்முக தேர்வுக்கு தயார்படுத்துதல் மற்றும் அதற்கான சில முன்னேற்பாடுகள் மிக முக்கியம். வேலைக்கு ஆள் எடுக்கின்றோம் என்ற பெயரில் தலையே சுற்றிவிடும் அளவுக்கு பல சுற்றுகள் , அதிமேதாவித்தனத்தை (?) காட்டுவதற்காக கேள்விகளை கேட்டு கசக்கி பிழிவதில் நமது நாட்டினர் போன்று மேலை / பிற நாட்டினரிடத்தில் நாம் காணமுடியாது என்பது வேறு விடயம்.
வேலைக்கு அப்ளை பண்ணுவதில் நேர்முக தேர்வு அட்டெண்ட் பண்ணுவதில் அலட்சியமோ சடவோ எரிச்சலோ காட்டினால், அது கூட ஒருவரின் திருப்பு முனைக்கான (Turning Point) ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். இது போன்ற சம்பவங்கள் பலர் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. சுய முயற்சி தன்னம்பிக்கையுடன், சோர்வடையாமால் தன்னை தானே ‘தொடர்ந்து’ ஊக்கபடுத்தி கொண்டால்... தான் விரும்பும் நிறுவனத்தில் / வேலையில் அமர்ந்து விடலாம்.
மாமரத்தின் அடியில் (எம்ப்ளாய்மன்ட் எக்சேஞ்சில் பதிவு பண்ணியதோடு அல்லது குறிப்பிட்ட வேலை வாய்ப்பை நம்பி) படுத்துக் கொண்டு மாங்கனிகள் கீழே விழாதா என்று ஏங்குபவர்களை விட அல்லது கண்ணை மூடிக் கொண்டு கல்லெறிபவர்களை விட, குறி வைத்து தாக்குபவர்கள் வெற்றி பெறுகின்றார்கள்.
அரசாங்க வேலைகளில் நமதூரை/ சமூகத்தவரை பொறுத்தவரை ஒரு பெரிய ஆர்வமோ முயற்சியோ காண்பிப்பதில்லை. அரசாங்க உத்தியோகத்திலுள்ள நன்மைகள் (சொந்த ஊரிலே / தாய்நாட்டிலே வேலை, பீஎப், ஜாப் செக்யுரிட்டி, வாரிசுகளுக்கு வேலை*) பற்றிய போதிய விழிப்புணர்வு, தகவல் / அனுபவ பரிமாற்றங்கள், நுணுக்கங்கள், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாதது மிக முக்கிய காரணங்கள்.
ஒரு வேளை நம் முந்தைய தலைமுறையினரில் சில சதவிகிதத்தினர் அரசாங்க துறைகளில் உயர் பதவிகளில் இருந்து, அதுபற்றிய விழிப்புணர்வு - வழிகாட்டுதல்கள் கிடைத்திருந்தால், குடும்பத்தை பிரிந்து ஏதோ ஒரு பாலைவனத்தில், பிடிக்காத அல்லது தன் படிப்புக்கு தகுதியற்ற வேலையை பணிபுரிய வேண்டிய சூழல் தவிர்க்க பட்டிருக்கலாம்.
நமது இளைய தலைமுறையினருக்கு அவர்களுடைய ஒன்பது / பத்தாம் வகுப்பிலிருந்தே, என்னென்ன அரசாங்க தேர்வுகள் (TNPSC ரயில்வே, சிவில் சர்விசஸ்) , அதற்கான தகுதிகள், விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டால்... தனது கேரியரில் உள்ள மற்றதொரு வழியை அறிய / தேர்ந்தெடுத்து கொள்ள அவர்களுக்கு அது வழிவகுக்கும்.
படிப்புக்கு உதவுவதோடு ஒரு சமுதாயத்தின் கடமை முடிந்து விடுவதில்லை. அவ்விளம் பட்டதாரிகள் வேலையில் அமரும்போது தான் அதற்கான முழுபலன் கிடைக்கின்றது. அதற்காக நாம் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற அர்த்தம் இல்லை. அவர்கள் வேலையில் அமர்வதற்கான துறைசார்ந்த வழிகாட்டுதல்கள் , கவுன்சிலிங், அனுசரணைகள் என நம்மால் இயன்ற உதவிகள் (வேலை தேடுவதற்காக சென்னை / பெங்களூர் சென்று, உணவுக்கும் உறைவிடத்துக்கும் வசதியில்லாமல் ஊரிலே காலம் தள்ளுபவர்களும் இருக்கின்றார்கள்) நிச்சயம் அவர்களுக்கு தேவை.
நம் காயலர்கள் கால் படாத நாடும் துறையும் இல்லை. அளப்பரிய சக்தி நம்மிடையே கொட்டி கிடக்கின்றது. இது முறையாக முழுமையாக அறுவடை செய்ய படவேண்டும். வேலையில் நல்ல நிலையை / உயர் பதவியை அடைந்தவர்கள் என ஒவ்வொருவரும் (எங்கிருந்தாலும்) சமுதாயத்தை விட்டு விலகி நிற்காமல், தன் சமூக கடமையுணர்ந்து... தான் கடந்து வந்த பாதையை இளம் பட்டதாரிகளிடம் பகிர்ந்து ஆலோசனைகளை வழங்கி அவர்களை வழிநடத்துவதன் மூலம் நல்லதொரு சமூக முன்னேற்றத்தை நாம் அடைய முடியும் ! |