சற்று அயர்ந்தால்
தூக்கம்
மரணமாகி விடும் ---- கவிஞர் இன்குலாப்
நீல வண்ணத்தையும் மரகதப்பச்சை நிறத்தையும் கலந்து உருக்கி ஒரு வாயகன்ற சட்டியில் கொதிக்க விட்டது போன்ற அரபிக்கடலின் நீர் பரப்பு. அந்த வண்ண மய அரபிக்கடலில் ஏகாந்த வாசம் செய்யும் வட்டபவளத்திட்டுகள். இந்த திட்டுகள் திரண்டு தீவுக்கூட்டமாக லட்சத்தீவு என்ற பெயருடன் நிலை நிற்கின்றன. இது கேரள கரையிலிருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .
இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மீனவர் ஒருவரை கைரளி என்ற மலையாள தொலைக்காட்சியினர் சந்தித்தனர். அவர்தான் அந்த தீவிலேயே முதன்முதலாக படகு வாங்கியவர்.
அவர் பெயர் பெற்ற கை மருத்துவரும் கூட. சுருக்கமாக சொன்னால் பிரபலமானவர்.
அவரின் வாழ்க்கையை பதிவு செய்த தொலைக்காட்சியினர் இறுதியாக அவரிடம் ஒரு கேள்வியைகேட்கின்றனர்.
உங்கள் வாழ்வின் ஆசீர்வாதமாக எதை கருதுகின்றீர்கள் ?
எட்டு திசைகளிலும் கடல் நீர் சுற்றி வளைத்திருக்கின்றது. இருளானது கடலின் மேலும் அடியிலும் கரைந்து அமர்ந்திருக்கின்றது. தீவின் தனிமை தரும் ஆழ்ந்த அமைதி .இவை அனைத்தும் தீவு முழுக்க பாதுகாப்பு உணர்வை அள்ளி நிறைத்துள்ளது. அந்த அமைதியின் மடியில் இரவில் நிம்மதியாக எங்களால் உறங்க முடிகின்றதே ! இதை விட இறைவன் தந்த நிஃமத் (அருள் வளம்) வேறு என்ன இருக்க முடியும் ? என அவர் திருப்பிக்கேட்டார்.
மனிதன் மட்டும் நிம்மதியாக உறங்கவில்லை இரவின் இதமான அணைப்பில் மரமும் ,விலங்குகளும் கூட நிம்மதியாக தூங்குகின்றன.
ஒரு முஸ்லிமுக்கு மட்டுமே ஓய்வையும் தூக்கத்தையும் அருட்கொடையாக கருதும் மன நிலை வாய்த்திருக்கின்றது. மற்றவர்கள் உறக்கத்தை உடல் உயிரியின் இயல்பான செயல்பாடாக மட்டுமே கருதுகின்றனர்.
பூமி சுழல்வதின் விளைவாக ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இரவு என்பதாக மட்டுமே அறிவியலாளர்களால் கருத முடிகின்றது. பூமி உட்பட எண்ணற்ற கோள்களையும் விண்மீன்களையும் படைத்து இயக்கும் ஒரு மகத்தான ஆற்றலின் பரிசளிப்பாக பகலையும் இரவையும் பார்க்க அவர்களால் முடிவதில்லை.
அத்துடன் அந்த மனிதன் அமைதி நிறைந்த இரவுடன் மோதுகின்றான், தேவைக்கதிகமாக ஆற்றல் வாய்ந்த மின் விளக்குகள் மூலம் இரவை பகலாக்கி இயற்கையின் சம நிலையை குலைக்கின்றான்.
என்னதான் இரவை செயற்கையாக வெளிச்சமாக்கி காட்டினாலும் அந்த வெளிச்சம் தற்காலிகமானதே. அந்த வெளிச்ச துளிகள் கூட மிகுந்த முயற்சியின் விளைவாக கிடைத்தவை. அந்த துளிகளால் இருளை சற்று விலக்க மட்டுமே முடியும்.
மின் விளக்குகளின் வெளிச்ச பரவல் முடியும் எல்லையில் இருள் ஆழ அகலங்களுடன் கம்பீரமாக நம்மை விழுங்க காத்துக்கொண்டிருக்கின்றது. இருளின் பிரம்மாண்டத்தையும் அதனுள் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் புதைந்திருக்கும் கமுக்கங்களையும் மின்சார விளக்குகளால் நெருங்க்கூட இயலாது.
கதிரவன் மயங்கி சரியும் மாலைப்பொழுதில் கிழக்கிலிருந்து இளம் இருளானது சாம்பல் நிறத்தில் பூமியின் மீது படியத் தொடங்குகின்றது. இருளைக்கொண்டாடும் ஷைத்தான்களும் காற்றில் மிதந்து பரவுகின்றனர். இந்த இராக்கால ஷைத்தான்களிடமிருந்து குழந்தைகளையும் கால் நடைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படி நபி (ஸல்) நம்மை எச்சரிக்கின்றனர்.
இரவு தொடங்கியதிலிருந்து சில மணி நேரம் கழிந்த பிறகு உடல் களைத்து படுக்கையில் சாய்கின்றோம்.உடல் ஒரு பக்கம் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றது. அதன் ஆன்மாவை இருளானது தனக்கே உரித்தான மர்மங்களோடும் கமுக்கங்களோடு ம் ஆபத்துக்களோடும் சூழ்கின்றது.
மை போன்ற கரிய திரவமான இரவையும் அதனுள் நீந்தும் ஆன்மாவின் நுட்பங்களையும் முழுமையாக புரிந்து கொள்ள நம்மால் முடிவதில்லை.
மனித மனதின் அடுக்குகளுக்குள் புகுந்து ஆன்மாவை ஆராய புறப்பட்ட ஸிக்மண்ட் ஃப்ராய்ட் உள்ளிட்ட நவீன உளவியலாளர்களால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல இயலவில்லை. அவர்களின் ஆய்வுகள் மனிதனின் தசை , நரம்பு , எழும்பு ,குருதியைத்தாண்டி உயரே எழும்ப முடியவில்லை. மனிதனையும் அவனை இயக்கும் மனத்தையும் வெறும் இச்சைகளின் குவியலாக மட்டுமே பார்க்க அவரால் முடிந்திருக்கின்றது.
ஆன்மாவின் உன்னதங்களையும் படைத்தவனோடு தொடர்பு படும்போது அந்த ஆன்மா அடையும் மேன்மைகளையும் நாத்திக மனதால் ஒருபோதும் அறிய இயலாது.
இரவிலும் பகலிலும் ஆன்மாவை சூழ்ந்திருக்கும் மறைவானவற்றைப் பற்றி அவற்றை படைத்த இறைவனால் மட்டுமே நமக்கு அறிவித்து தர முடியும். அதனால்தான் மறைவானவற்றின் தீங்கிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் வாயிலாக அல்லாஹ் கற்றுத்தருகின்றான்.
இரவின் தாலாட்டில் நாம் உறங்கி விடுகின்றோம். அந்த உறக்கத்தில் பலவிதமான கனவுகளை காண்கின்றோம். அந்த கனவுகளில் பல காட்சிகள் நிறைந்துள்ளன... அந்த காட்சிகளில் சில நேரடியாக உள்ளன. சில படிமங்களாகவும் குறியீடுகளாகவும் தென்படுகின்றன அவற்றில் சில பல பிற்காலங்களில் நடைமுறை வாழ்வில் பலிப்பதையும் நாம் உணருகின்றோம்.
யூஸுஃப் நபியின் கனவு விளக்கங்களே இதற்கு சான்றாக உள்ளது.
இரவு தூக்கத்தில் மனித ஆன்மா ஓய்ந்து கிடப்பதில்லை. இவ்வுலக செயல்கள் , நிகழ்வுகள் தீர்மானிக்கப்படும் மேல் உலகிலும் ஏழு வானங்களிலும் அது நடமாடுகின்றது, சில மர்மங்களை அது தரிசிக்கின்றது . வீட்டு படுக்கையில் உறங்கும் மனிதனின் ஆன்மாவானது இறந்த ஆன்மாக்கள் குடியிருக்கும் மேல் வானங்களுக்கும் சென்று வருகின்றது என்பதை ஒரு சராசரி மனிதனுக்கும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்
இரவு உலாவில் இறந்த ஆன்மாக்களுடன் இந்த ஆன்மாவும் நிரந்தரமாக சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றதே ! எனவேதான் நமது இரவு நித்திரையை அரை மரணம் எனவும் வர்ணிக்க முடியும்.
அதனால்தான் இரவு தூங்க போகும் முன்னர்
“ இறைவா உன் பெயராலேயே மரணிக்கின்றேன் .உயிர்த்தெழவும் செய்கின்றேன் “ .
“ உனது பெயரால் எனது விலாவை கிடத்துகின்றேன். உன்னாலேயே நான் எழுவேன். என் உயிரை நீ தடுத்து வைத்துக்கொண்டால் அதற்கு நீ அருள் புரிவாயாக ! “ (ஹிஸ்னுல் முஸ்லிம்)
என இறைவனிடம் விண்ணப்பிக்கின்றோம்.
நமது மேல் வான உலாவில் இன்னும் சில விஷயங்களும் இருப்பதாக படுகின்றது. நமது ஆன்மா அங்கு செல்லும்போது நம்மை போலவே தற்காலிக வருகையாக ஏனைய மனிதர்களின் ஆன்மாக்களும் ஏற்கனவே அங்கு வந்திருக்கும். அந்த ஆன்ம ஒன்று கூடல்களிலும் நாம் நமக்கும் பிறருக்கும் தீங்கு செய்யும் வாய்ப்பு உள்ளது.
“ என்னால் விளையும் தீமையிலிருந்தும் , ஷைத்தானின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகின்றேன்.எனக்கு நானே தீங்கிழைத்துகொள்வதிலிருந்தும் அல்லது அதை வேறொரு முஸ்லிமுக்கு நான் இழைத்து விடுவதிலிருந்தும் பாதுகாப்பு தேடுகின்றேன். “ ( ஹிஸ்னுல் முஸ்லிம்)
பகலில் பிற மனிதர்களைப்பற்றிய தப்பெண்ணங்களை சுமக்கின்றோம். அந்த சுமைகளினால் இரவிலும் கூட நமது ஆன்மாவை கனக்கச் செய்கின்றோம்.அந்த கனமானது உறக்கத்திலும் கூட நமக்கும் பிறருக்கும் தீங்காக அமைய முடியும் என்பதைத்தான் இந்த துஆ சுட்டிக்காட்டுகின்றதோ?
இரவு உறங்கும் முன்னர் சக மனிதர்களின் மீதான தப்பெண்ணம் எதுவுமின்றி தன் மனதை போர்வையை உதறுவது போல் உதறி விட்டு உறங்கச்சென்றார் ஒரு நபித்தோழர். அவரை சுவன வாசி என நபியவர்கள் உத்திரவாதமளித்தார்கள்.
ஆன்மாக்களின் பரஸ்பர தீங்குகளிலிருந்து பாதுகாப்பு என்பதற்கு அடுத்தபடியாக மூன்றாமவன் ஒருவனைப்பற்றியும் இந்த துஆ நம்மோடு உரையாடுகின்றது. ஷைத்தான் எனப்படும் அந்த மூன்றாவது ஆளின் தீங்கை அது ஒற்றை வரியில் கூறி விட்டு கடந்து செல்கின்றது.
பூமிக்கு நெருக்கமாக உள்ள வானத்தின் கடைக்கோடியில் சில ஷைத்தான்கள் இரவின் உடைக்குள் ஒளித்து நிற்கின்றனர். அவர்கள் விண்ணுலக கமுக்கங்களை சுரண்டி எடுத்து செல்ல எதிர் பார்த்திருக்கும் ஷைத்தானிய எல்லை கவர்தல் படையினை சேர்ந்தவர்கள். அவர்களின் தீங்குகளும் கூட இங்கு உணர்த்தப்பட்டிருக்கலாம்.
நமது ஆன்மாவானது இரவில் விண்ணுக்கு ஏறும்போதும் இறங்கும்போதும் இந்த எல்லை கவர்தல் படையினரைத்தாண்டித்தானே செல்ல வேண்டியுள்ளது. மனித ஆன்மாவிற்கு வானுலகம் செல்ல கிடைத்திருக்கும் அனுமதியினால் ஷைத்தான்களுக்கு பொறாமை ஏற்படுவது இயல்பு. அதன் விளைவாக கூட அந்த ஷைத்தான்கள் நமக்கு தீங்கு இழைக்க முடியும்தானே ?
இறைவா ! ஏழு வானங்களின் அதிபதியே ! மகத்தான அரியாசனத்தின் அதிபதியே ! அனைத்து பொருட்களின் தீமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகின்றேன்.அவற்றின் முன் நெற்றி ரோமத்தை நீயே பிடித்திருக்கின்றாய் ! { உனக்கும் உன் அடியார்களுக்கும் நாங்கள் செலுத்த வேண்டிய } கடனை எங்கள் சார்பில் நிறைவேற்றுவாயாக !
எங்கள் இறைவா ! நாங்கள் மறந்து விட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களை நீ தண்டித்து விடாதே. எங்கள் இறைவா ! எங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது சுமத்தியதைப்போன்று எங்கள் மீது பளுவை சுமத்தி விடாதே.
எங்கள் இறைவா ! எங்களால் இயலாததை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களை பொறுத்தருள்வாயாக . நீயே எங்கள் பாதுகாவலன். எனவே மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக !
மேற்கண்ட துஆக்களின் வரிகளில் அண்ட சராசரங்களின் இண்டு இடுக்குகளிலும் மூலை முடுக்குகளிலும் கண்ணுக்கு புலப்படாமல் பதுங்கி கிடக்கும் எண்ணற்ற இடர்ப்பாடுகளின் தீங்குகளிலிருந்தும் இறைப்பாதுகாப்பு தேடப்படுகின்றது.
தொடர்ந்து அந்த துஆ வரிகள் மனிதன் மீது இறைவன் சுமத்திய அடைக்கலப் பொறுப்புகளை சுட்டிக்காட்டுகின்றது. பகலில் அது தொடர்பாக அம்மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நினைவூட்டுகின்றது.
இந்த நிலவுலகில் வாழும் மனிதன் அனைத்து விதமான வசதிகளையும் வளங்களையும் துய்த்து வாழுகின்றான். இந்த இன்பங்களையும் வசதிகளையும் வல்லோன் அல்லாஹ் நேரடியாகவும் பிற மனிதர்கள் வாயிலாகவும் நமக்கு வழங்குகின்றான்.சுருக்கமாகச்சொல்வதானால் நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைக்காக நாம் இறைவனுக்கும் மனித குலத்திற்கும் கடன்பட்டுள்ளோம்.
பொதுவாகவே கடன் என்றாலே பொருளாதார ரீதியான கடன் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி கடன் என்பதைப்பற்றி விசாலமாக இந்த துஆ அர்த்தப்படுத்துவதாகவே படுகின்றது.
அதை பெருங்கடன் எனவும் அடைக்கலபொறுப்பு எனவும் விவரிக்கலாம். அந்த பெருங்கடனை திரும்ப செலுத்துவது என்பது இறை நெறியை இம்மண்ணில் நிலை பெறச்செய்வதன் வழியாகவும் மனித குலத்திற்கு தொண்டு செய்வதின் மூலமாகவுமே நடக்க வேண்டும் .
கடந்து போன பகலில் மனிதன் தனது அடைக்கல பொறுப்பில் விட்ட பிழைகள் ,தவறுகளையும் நினைவுபடுத்திக்கொண்டு மன்னிப்பு கோரியாக வேண்டும் என்பதனையும் இந்த துஆக்கள் சொல்லுகின்றன. தனது வலிமைக் குறைவையும் இயலாமையையும் நிரந்தர வலிமையாளனான இறைவனிடமே முறையிட கற்றுத்தருகின்றன.
இறைச்செய்தியை மண்ணில் நிறைவேற்ற முனைவது என்பது பஞ்சின் மீது நடப்பது போன்ற சுகமான எளிய விஷயமல்ல. அந்த சமயம் நிராகரிப்பாளர்களும் நீதிக்கும் உண்மைக்கும் எதிரானவர்களும் நமக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவார்கள். எல்லாவித ஆள் அம்புகளின் துணையுடன் நம்மை ஒழித்துக்கட்டவும் துணிவார்கள்.
அவர்களின் இந்த கலக முயற்சியை துஆக்களின் மூலம் இறைவன் நமக்கு நினைவூட்டுகின்றான். இந்த தீங்கிலிருந்து பாதுகாவல் தர தன்னையே சார்ந்திருக்கும்படி வல்ல அல்லாஹ் நமக்கு வழிகாட்டுவதுடன் ஆறுதலும் அளிக்கின்றான்.
இறைவா ! நான் என்னை உனக்கே கட்டுப்பட செய்தேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னை நோக்கியே திருப்பினேன். என் விவகாரங்கள் அனைத்திலும் நான் உன்னையே சார்ந்துள்ளேன்.உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத்தவிர வேறு போக்கிடம் ஏதும் கிடையாது (ஹிஸ்னுல் முஸ்லிம்).
நம் தூக்கம் என்பதே இறப்பிற்கான தினசரி ஒத்திகைதானே . எப்போது வேண்டுமானாலும் அந்த ஒத்திகையானது மெய்ப்பட முடியும்.
எனவே நித்தம் அந்த இறுதி தருணங்களை மனதில் அழுத்தமாக பதிக்கும் வண்ணமாக அகிலங்களின் எஜமானனிடம் சரணடையக்கோருகின்றது இந்த துஆ.
நமது உடலுக்கும் ஆன்மாவிற்கும் உடமைகளுக்கும் அவன் தான் முதலும் முடிவுமான அதிபதியும் பாதுகாவலனும் ஆவான்.
இவ்வாறாக ஒவ்வொரு நாளின் இறுதியிலும் முழு முதலவனிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு மனிதன் தூய்மைப்படுத்தப் படுவது உறுதி. அவன் தனக்கும் பிறருக்கும் இப்பூவுலகுக்கும் பயனுள்ள மனிதனாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிறப்பை அடைவான்.
நாம் அன்றாடம் கண் விழித்ததிலிருந்து உறங்கும் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை ஓதக்கூடிய பல்வகையான சந்தர்ப்ப துஆக்கள் இருக்கின்றன.அவை நாக்கின் நுனியிலிருந்து உதிர்க்கப்படும் வெறும் மந்திரச்சொற்கள் இல்லை.
அவைகள் ஆன்மாவின் கடமைகள் , உரிமைகள் , பிரபஞ்சத்தின் கமுக்கங்கள் , இரவு பகலின் நுட்பங்கள் , படைத்தவனின் எதிர்பார்ப்புகள் , சன்மானங்கள் , தண்டனைகள் , ஆறுதல் , அபயம், எச்சரிக்கை , மன அமைதி , வீரம் , வாழ்வின் ஆபத்துக்கள் , இம்மை மறுமை இலக்குகள் போன்ற அனைத்தையும் தனக்குள் பொதிந்து வைத்துள்ளன. இவற்றை பொருள் அறிந்து ஓதும்போது மட்டுமே அதிலிருந்து நாம் பலனடைய முடியும்,
துஆக்களின் மூலம் என் ஆன்ம அனுபவமாக உணர்ந்தவைகளை இக் கட்டுரையில் பதிக்க முயன்றிருக்கின்றேன். இந்த அனுபவம் என்பது ஒரு திவலையின் கால் பகுதியே . எனது எல்லை அவ்வளவுதான்.
இந்த துஆக்களிலும் குர் ஆன் வசனங்களிலும் எண்ணற்ற பொருள்கள் ,வியப்புகள் , அற்புதங்களின் தொகுதிகள் புதைந்து கிடக்கின்றன. அவை கோடுகளையும் புள்ளிகளையும் போன்றவை. கோடுகளும் புள்ளிகளும் ஒவ்வொரு முறையும் புதுப்புது ஓவியங்களை படைத்தளிப்பது போல ஒவ்வொரு மனிதனுக்கும் விதம் விதமான அனுபவத்தை சந்தர்ப்ப துஆக்கள் தரக்கூடியவை.
[மேற்கண்ட துஆக்கள் , திருமறை வசனம் ஆகியவற்றின் தமிழ் பொருள் தாருஸ்ஸலாஹ் பதிப்பகத்தாரின் ஹிஸ்னுல் முஸ்லிம் தமிழ் மொழியாக்கத்திலிருந்து கையாளப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !] |