| |
ஆக்கம் எண் (ID #) 81 | | | வெள்ளி, மார்ச் 8, 2013 | | இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள்! சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 7912 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய | |
அன்பான வாசகர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் அத்தனையும் ஊரில் நடந்தவற்றையும் , நடந்துக்கொண்டிருப்பவற்றையும் , நடக்கபோகின்றவற்றையும் குறிப்பிடுகிறதே அல்லாமல் , தனிப்பட்ட எவரையும் காட்டிக்கொடுப்பதோ, எச்சரிக்கை செய்வதோ அல்ல என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். - வஸ்ஸலாம்.
- கட்டுரை ஆசிரியர்.
|
இருசக்கர வாகனம் என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மிதிவண்டி ( BICYCLE / சைக்கிள் ) தான். ஆனால் இந்த கட்டுரையில் ஆபத்தாக சொல்லப்படுவது மிதிவண்டியை பற்றி அல்ல மோட்டார் சைக்கிளைப் பற்றியே! இருப்பினும் ஆபத்தற்ற மிதிவண்டியை முதலில் பார்ப்போம்.
சுழல் வண்டி என்றோ , சுழற்சி வண்டி என்றோ சொல்லாமல் மிதிவண்டி என்றே சொல்கிறோம் ( பெடலை மிதிப்பதால் சக்கரங்கள் சுழல்கின்றன என்பது உண்மைதான் ) அதை மிதித்து சுழற்சி செய்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சியாக அது மாறுகிறது.
மாட்டுவண்டி , குதிரை வண்டிகள் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் மிதி வண்டிகள்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது – இன்னும் அதன் தேவையும், சேவையும் மறுக்கவோ, மறக்கவோ முடியாததாகவே இருக்கிறது. அந்த மிதிவண்டிகளில்தான் பக்கத்து ஊர்களுக்கு சென்று தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வருவார்கள். மேலும் ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பெரும்பாலும் மிதிவண்டியைத்தான் வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய பணியை செய்து முடிக்க உதவியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தது மட்டுமல்லாது எரிபொருள் (பெட்ரோல்/ டீஸல்) தேவையற்றதாகவும் அளவான (ஸ்பீடு) வேகத்தில் செல்லக்கூடியதாகவும் , ஆபத்து / விபத்துகள் அற்றதாக / மிக, மிக குறைந்ததாகவும் இருந்தது.
1960கள் கடைசி வரை அதற்கு லைசென்ஸ் முறை இருந்தது சைக்கிளுக்கு மட்டும்தான் , ஓட்டுவதற்கு அல்ல. ஒரு வருடத்திற்கு 6 ரூபாய் பணம் செலுத்தி ஒரு மெட்டல் பிளேட்டை வாங்கி சைக்கிளில் பொருத்திக்கொள்வர் – அதுதான் சைக்கிளின் லைசென்ஸ். அடுத்து இரவு நேரங்களில் சைக்கிளில் (டைனமோ) லைட் இல்லாமல் சென்றால் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு பெரும்பாலும் எச்சரிக்கை செய்து விடப்படுவார்கள், சில சமயம் தண்டம் (ஃபைன்) கட்ட சொல்வார்கள். அதெல்லாம் ஒரு சுவாரஷ்யமான காலம். சொந்த சைக்கிள் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள். வாடகைக்கு என்று நகரில் பல சைக்கிள் கடைகள் இருந்தது. வாடகை ஒரு மணி நேரத்திற்கு 5 பைசாதான். நாள் வாடகைக்கு என்றும் விடப்படுவதுண்டு.
கல்யாண விஷேஷங்கள், பள்ளிக்கூட விழாக்கள், கந்தூரி என்று எல்லா வைபவங்களின் வேலைகளுக்கும் சைக்கிள்தான் மிகவும் உதவியாக இருந்தது. வியாபாரிகள் பக்கத்து ஊர்களிலிருந்து சைக்கிளில் பொருட்களை கொண்டுவந்து விற்பார்கள், கடைகளுக்கு சரக்குகளை போடுவார்கள். இன்று காலங்கள் மாறிவிட்டது, சைக்கிளின் உபயோகம் மிக குறைந்து விட்டதுடன் ஸ்கூட்டர் / மோட்டார் பைக் என்று மோட்டார் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெருகிவிட்டன அதனால் ஆபத்துகளும், விபத்துகளும் கூடிவிட்டன.
மோட்டார் சைக்கிளின் வரவு அவசியம்தான் , அதன் பயன்பாடு சாதாரண சைக்கிளைவிட பல மடங்கு உபயோகமானது என்பதை விளக்கவேண்டியது இல்லை. அதே நேரத்தில் அவசியத்திற்கு உபயோகிக்க வேண்டுமே தவிர, அவசியமற்றவற்றிற்கு உபயோகிப்பதாலும் , அதன்மூலம் வீர், தீர செயல்களை காட்டுவதாலும் நஷ்டங்களும் , விபரீதங்களும்தான் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
அவசியமற்றது என்று இங்கே குறிப்பிடுவது 200, 300 மீட்டர் தூரம் உள்ள இடத்திற்குகூட மோட்டார் சைக்கிளில் செல்வது அல்லது திருநெல்வேலி, மதுரை போன்ற தூரமான இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வதையும்தான். முதலாவது குறிப்பிட்டது , தூரம் குறைவான இடங்களுக்கு செல்வதால் வீணாக பெட்ரோல் , வண்டி தேய்மானம் , என்றில்லாது , மிக முக்கியமாக உங்களின் ஆரோக்கியம் கெடுகிறது. நடை இல்லாமல் உடல் நிலைகள் வெகுவாக பாதிக்கின்றது. சில நேரம் மோட்டார் சைக்கிள் இல்லாது போனால் சோம்பலால், நீங்கள் செல்லவேண்டிய தூரம் குறைவாக உள்ள அந்த இடதிற்குகூட நடந்து செல்ல மனமில்லாமல் உங்கள் வேலையும் பாதிக்கும்.
இரண்டாவதாக வெகுதூரம் 50 கிலோ மீட்டர் , 100 கிலோ மீட்டர் என்று மோட்டார் சைக்கிளில் செல்வதும் தவறு. காற்று, மழை, வெயில் என்று பாராமல் வெகுதூரம் செல்வதன் மூலம் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதுடன், அதிக நேரம் தொடராக ஓட்டுகிறதால், ஒரே நிலையில் அசைவற்று இருப்பதால் கழுத்துவலி, முதுகுவலி ஏற்படுகிறது. மேலும் அதிக தூரம் பிரயாணம் செய்ய வேண்டியதாக உள்ளதால் நேரத்தைப் பார்த்து, நம்முடைய வேலையை அனுசரித்து விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டும் வேகத்தை அதிகரிப்போம், அதுமட்டுமல்லாது தூரமான பிரயாணத்தில் சோர்வும் ( TIRED ) ஏற்படும். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. எனவேதான் அவசியத்தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது.
அடுத்ததாக , இன்று இருசக்கர வாகனங்களான ஸ்கூட்டர் , மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறவர்கள் பெரும்பாலும் முறையாக ஓட்டுவதில்லை. முறையாக என்பது , வாகனத்தை எப்படி இயக்க வேண்டும் , அதில் எப்படி அமர வேண்டும் , அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதிலிருந்து போக்குவரத்து சட்ட விதிகளை எப்படி கையாள வேண்டும் என்பதுவரை எந்த வழிமுறைகளையும் பெரும்பாலும் யாரும் கடைப்பிடிப்பதில்லை. நூற்றுக்கு 90 நபர்கள் இதை தெரிந்து கொள்ளாது இருப்பதாலும் அல்லது தெரிந்தும் பலர் அதை கடைப்பிடிக்காது இருப்பத னாலும்தான் மிகுதமான விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும் பலர் ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) எடுப்பது இல்லை / லைசென்ஸ் இருந்தாலும் ஓட்டும்போது அதை கையில் வைத்திருப்பதில்லை. லைசென்ஸ் கையில் இல்லாத காரணத்தினால் போலிஸ் செக்கிங் நடக்கிற போது பயத்தில் என்று தாறுமாறாக ஓட்டி , விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள்.
ஓட்டுனர் லைசென்ஸ் எடுப்பது என்று சொல்வது, ஓட்டுவதற்கு முறையாக கற்று லைசென்ஸ் எடுப்பதையே. ஓட்டத் தெரியாமல் மாற்று வழியில் லைசென்ஸ் எடுத்து அரைகுறையாக ஓட்டுவது என்பது மகாத்தவறு. அப்படி முறையாக ஓட்ட கற்காமல் ஓட்டி ஒரு விபத்து ஏற்பட்டால் அதற்கு முழுப்பொறுப்பும் தப்பு என்ற விதத்தில் ஓட்டியவரையே சேரும் – இறைவனின் தண்டனைக்கு பயந்துக் கொள்ளுங்கள். முறையாக கற்று ஓட்டும்போது ஏதும் விபத்துகள் ஏற்பட்டால் - அது விதியாகும் – தவறு என்ற கணக்கில் சேர்ந்துவிடும். எனவே முறையாக கற்று , லைசென்ஸ் எடுத்து அதன் பின் ஓட்டுவதே சிறந்தது.
முறையாக ஓட்டக்கூடியவர்கள் வேகத்தடை வரும்போது வேகத்தை குறைத்து அதன் மேல் ஏறிச்செல்வர். முறையற்று ஓட்டக்கூடியவர்கள் வேகத்தடைக்கு பக்கவாட்டில் ( இருபக்கமும் ) இருக்கும் நடைபாதையில் ஏறிச்செல்வர் அதன்மூலம் பாதசாரிகளுக்கும் தொல்லையைக் கொடுப்பார்கள் மற்றும் விபத்தையும் ஏற்படுத்துவார்கள்.
இன்று மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் தாறுமாறாக, கண்மூடித்தனமாக ஓட்டுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு நிதானம் என்பதே கிடையாது. ஏதோ பந்தயத்தில் ( RACE ) ஓட்டுவது போல்தான் ஓட்டுகிறார்கள். வேகமாக திரும்புவது ஹார்னை அதிக சத்தத்துடன் ஒலிப்பது அல்லது தொடராக ஹார்ன் அடித்துக் கொண்டே ஓட்டிச் சென்று மக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறார்கள்.
சிலர் நடந்து செல்கின்றவர்களுக்கு அருகில் வந்து திடீரென்று ஹார்ன் அடிப்பர் , இதனால் நடந்து செல்பவர் பயந்தவராக இங்குமங்குமாக திக்குமுக்காடி சென்று விபத்துகளும் ஏற்படுகிறது. இன்னும் சிலர் அதிக சத்தமாக இசையுடன் ( MUSIC ) கூடிய ஹார்ன் அடித்து மக்களை கலங்க வைக்கின்றனர் – இதனால் சில பலகீனமானவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.
மேலும் சிலர் மோட்டார் சைக்கிள்களை ஓட்டும்போது தெருவில் போவோர், வருவோரை கணக்கில் எடுப்பதில்லை இடித்துவிட்டுசெல்கிறார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவரின் கால் , ஏன் முட்டுக்கூட நடந்து போகிறவரை இடித்து விட்டு செல்கிறது. பின்னால் உட்கார்ந்திருப்பவர் பெண்ணாக இருந்தாலும் இதே நிலைதான். ( பெண்களை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து செல்வது நல்ல பழக்கம் இல்லை என்பது வேறு விசயம் ) பின்னால், பெண் உட்கார்ந்து இருக்கிறாளே! நிதானமாக போகலாமே என்பதில்லை. ஏதோ ஆகாயத்தில் பறக்கிறதாகத்தான் எண்ணம்.
மோட்டார் சைக்கிளில் இருவர் செல்வது சரி, ஆனால் மூன்று வாலிபர்கள் சில சமயங்களில் நான்கு வாலிபர்கள் கூத்துக் கும்மாளங்களோடு செல்வது வாடிக்கையாகிவிட்டது. இவைகளை அன்னியர்கள் செய்வது மட்டுமல்ல நம்மவர்களே! செய்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும்.
ஒன்றுமட்டும் என்னால் சொல்லமுடியும் இப்படி மோட்டார் சைக்கிள்களில் அதிக வேகமாக செல்கிறவர்களுக்கும் , வேடிக்கை , கேலிக்கூத்துக்களைக் காட்டி செல்கிறவர்களுக்கும் அதன்மூலமே சாவு வரும் என்பது. அவர்களில் எவரும் தப்பியது இல்லை திருந்தியவர்களை தவிர. இப்படி முட்டாள்தனமாக ஓட்டுபவர்களுக்கு இறைவனால் விபத்துக்கள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. அந்த விபத்துக்குப்பின்னும் அவர்கள் திருந்தாதபோது நிச்சயமாக அவர்கள் அதன் மூலமே மரணத்தை சந்திப்பார்கள் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. எனவே! அவர்கள் திருந்துவது நல்லது அல்லது அவர்களின் பெற்றோர்கள் அவர்களை திருத்துவது சிறந்தது.
இன்றைய நாளில் நம் ஊரில் மோட்டார் சைக்கிள் / ஸ்கூட்டர்கள் பெருகிவிட்டது – படிக்கும் மாணவர்களிடம் இது பெருகிவருகிறது. சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே காணப்பட்டது அதையே பலரும் கண்டித்தனர், படிக்கும் பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள் / ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து கெடுப்பது நல்ல பழக்கமல்ல என்று. ஆனால் இன்று ஹைஸ்கூல் மாணவர்களிடம் அந்த பழக்கம் அதிகரிப்பதுடன், 11 , 12 வயது மாணவர்களும் ஸ்கூட்டர் ஓட்டத் தொடங்கி , அந்த சிறுவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது நாளுக்கு, நாள் கூடிக்கொண்டு போகிறதை தினமும் பார்க்க நேரிடுகிறது. மேலும் மோட்டார் பைக்’ கும் ஓட்டுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.
ஓட்டுகிறவர்கள் ஏதோ 15, 16 வயது உள்ள டீனேஜ் என்று சொல்லப்படுகிற இளைஞர் அல்ல. வெறும் 11 அல்லது 12 வயது நிரம்பாத சிறுவர்களே ஓட்டுகிறார்கள், அவர்களால் ஒரு பைக்கை / ஸ்கூட்டரை எப்படி முறையாக ஓட்ட இயலும் அவர்களுடைய ( விளையாட்டுத்தனமான ) வயதில் சாகசங்களை செய்ய விரும்புவார்கள் / கவனக்குறைவுகள் ஏற்படும், அதன்மூலம் பெரிய, பெரிய விபத்துகள் ஏற்பட்டு ( அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் ) உயிர் சேதங்களும் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
அதுவும் தனியாக சிறுவன் ஓட்டிச்செல்வதில்லை 2 அல்லது 3 சிறுவர்களுடன் ஓட்டிச்செல்கின்றான். அல்லாஹ்! காப்பாற்றவேண்டும் விபத்து ஏற்பட்டால் அனைத்து சிறுவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அந்த சிறுவர்களும் உணர்வதில்லை, அவர்களுக்கு ஸ்கூட்டர் / மோட்டார் பைக்’குகளை ஓட்ட அனுமதிக்கும் / அதன் பின்னால் அமர்ந்து போக அனுமதிக்கும் பாசமற்ற , கவனமற்ற, பொறுப்பற்ற பெற்றோர்களும் உணர்வதில்லை என்பதே நிதர்சனம்.
மேலும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் , சிறு வயதினருக்கும் ஸ்கூட்டர் / பைக்’குகளை கொடுப்பதால் விபத்துகள் மட்டும் ஏற்படுவதில்லை. பலவிதமான விபரீத விளைவுகளும் ஏற்படுகிறது – பிள்ளைகள் கெட்டு சீரழிய இதுவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதை மானமுள்ள பெற்றோர்கள் உணரவேண்டும்.
சிறுவர்கள் ஸ்கூட்டர் / பைக் ஓட்டியதில் காரிலும் பிற வாகனத்திலும் இடித்தது, பாத சாரிகள் மீது மோதியது இன்னும் சில காரணங்களுக்காக அவர்கள் மிரட்டல் (BLACKMAIL) செய்யப்பட்டு பணம் பறிக்கப்படுகிறார்கள். அந்த பணத்தை பெற்றோர்களிடம் ( மிகுதமாக தாயிடம் ) வேறு பொய்யான காரணத்தை சொல்லி வாங்கி கொடுக்கிற சம்பவங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற கசப்பான செய்தியையும் பெற்றோர்கள் உணர்கிறார்கள் இல்லை.
இந்த நிலை நீடித்தால் என்னவாகும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்தால் அல்லது அடிக்கடி உங்களிடம் பிள்ளைகள் பணம் கேட்க தயங்கினால் பிறரின் மிரட்டல் / அச்சுறுத்தல் காரணமாக உங்கள் வீட்டிலோ , பிற இடங்களிலோ திருடி பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள் என்பதை - தகாத வயதில் ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் ஓட்டுகிற பிள்ளைகளின் பெற்றோர்ககள் அனைவருக்கும் எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆகவே பெற்றோர்கள் இந்த விசயத்தில் கண்டிப்பு காட்டவில்லையானால் பிள்ளைகள் திருடர்களாகவும் , பொய் சொல்லி ஏமாற்றுபவர்களாகவும் வளர்வார்கள் என்பது மட்டுமல்லாது , விபத்துகளை உண்டாக்கி கொலைகாரர்களாகவும் மாறுவார்கள் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. எனவே , நேர்மையான பெற்றோர்களே! தங்கள் பிள்ளைகள் பொல்லாதவர்களாகவும் , பெற்றோரையும், பிறரையும் ஏமாற்றக் கூடியவர்களாகவும் வளரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் , உங்கள் பிள்ளைகளை மோட்டார் பைக் / ஸ்கூட்டர் ஓட்ட எவ்வகையிலும் அனுமதிக்காதீர்கள்.
லைசென்ஸ் எடுக்கக்கூடிய வயதை எட்டியபின் , முறைப்படி ஓட்ட கற்று லைசென்ஸ் எடுத்த பிறகு ஓட்ட அனுமதியுங்கள், அதுவும் அவசியத்தை முன்னிட்டு, அதல்லாமல் நீங்களே உங்கள் பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்காதீர்கள்.
இப்போது நவீன காலமாக நம்ம ஊரிலும் பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது தொடங்கி, நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது - இது எங்கே போய் முடியும் என்று சொல்ல இயலவில்லை. பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது நல்லது அல்ல என்பதை மட்டும் கூற முடியுமே தவிர , அதை எவ்வகையிலும் ஆதரிக்க இயலாது. எந்த ஒரு செயலும் தொடங்கத்தான் கஷ்டமே தவிர தொடங்கிவிட்டால் அது அசுர வேகத்தில் பரவிவிடும். இந்த நிலைதான் பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டுவதிலும் ஏற்பட்டிருக்கிறது. பரவலாகியபின் அது எவ்வளவு மோசமான செயலாக இருந்தாலும் அதில் ஏற்படக்கூடிய சிறிய நன்மையை மேற்கோள்காட்டி அதை மக்கள் ஆதரிக்க தொடங்கி விடுவர் - அது இல்லாவிட்டால் மக்கள் மாண்டுவிடுவர் என்னும் அளவுக்கு.
அதன் மூலம் பாதிப்பு அதிகமாக இருக்கிறதே என்பது அவர்களின் கண்களுக்கு அப்போது மறைந்துவிடும். மேலும் பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டும் கலாச்சாரம் எந்த அளவுக்கு போய் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்ல விரும்ப வில்லை - மேலோட்டமாக விவரிக்கிறேன். சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் ஸ்கூட்டர் ஒட்டக்கூடிய பெண்கள் 10 சதவிகிதத்திற்கு குறையாமல் இருக்கின்றனர். அதுவும் பெரும்பாலும் அலுவலகம் செல்லக்கூடியவர்களாகவே இருக்கின்றனர் அல்லது கல்லூரியிலே படிக்ககூடிய மாணவிகளாக இருக்கிறார்கள். சிறுமிகள் ( டீனேஜ் ) யாரும் ஸ்கூட்டர் ஓட்டுவதை பார்க்க முடியவில்லை.
ஆனால் நம்ம ஊரிலே கல்லூரியில் படிக்கும் பெண்கள் கல்லூரிக்கு ஸ்கூட்டரிலே செல்வதை இதுவரை காணவில்லை என்றாலும்கூட மற்ற இடங்களுக்கு ( என் பார்வையில்பட்டவரை ஊருக்குள்தான் ) ஓட்டிச்செல்கிறார்கள் - பின்னால் ஒருவர் சில சமயங்களில் இருவர் இருப்பதும் உண்டு. சில நேரங்களில் பெண் ஓட்ட பின்னால் ஆண் உட்கார்ந்து செல்வதையும் பார்க்கலாம்.
ஆனால், ( பெண்கள் பள்ளிக்கூடங்களில் ) படிக்கும் மாணவிகள் , பள்ளிக்கூடத்திற்கு ஸ்கூட்டரில் வந்து செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இது நல்ல நடைமுறையா / நல்ல பழக்கமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த ஒரு பொறுப்புள்ள, நல்ல பெற்றோரும் தம் பெண் மக்களுக்கு சீரழியக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுக்க மாட்டார்கள். உண்மையாகவே நன்றாக வளர வேண்டும், மார்க்கம் பேணி நடக்கவேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணும் ஸ்கூட்டர் ஓட்டவோ அதன் பின்னால் அமர்ந்து செல்லவோ விரும்ப மாட்டார்கள். மார்க்கத்தை ஏனோ, தானோ என்று ஒப்புக்கு கடைப்பிடிப்பவர்களே! இந்த செயலை செய்வர், அதற்கு பல காரணங்களும் கூறுவர்.
இப்பொழுது ஸ்கூட்டர் ஓட்டக்கூடிய பெண்கள் ( என் கண்களுக்கு தெரிந்த வரை ) அமைதியாகத்தான் ஓட்டுகிறார்கள், அடக்கமாகத்தான் உடை அணிந்து இருக்கிறார்கள் அதிலே எந்த குறையும் என் கண்களுக்கு இதுவரை படவில்லை. ஆனால் அதே பெண் கடைக்கு போய் பொருள் வாங்கும்போது, கீழே இறங்காமல் ஸ்கூட்டரிலிருந்தவாரே ஒரு காலை கடையின் மீது தூக்கி வைத்துக்கொண்டு, அதபற்ற முறையில் பொருட்களை வாங்குவது பார்வையில் பட்டிருக்கிறது – இதுதானே சீரழிவிற்கு ஆரம்பநிலை.
இன்று ஊருக்குள் ஸ்கூட்டர் ஓட்டும் பெண் நாளை வெளியூருக்கு ஸ்கூட்டரில் போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம். ஸ்கூலுக்கும், டியூஷனுக்கும், கடற்கரைக்கு காலை நேரம் வாக்கிங் மற்றும் மாலை நேரம் பொழுது போக்கிற்காகவும் ஸ்கூட்டரை ஓட்டிச்செல்ல பெண் குழந்தைகளை அனுமதிப்பது நல்ல கலாச்சாரம் அல்ல.
எங்கள் மகள் தனியாக ஓட்டவில்லை. அவளுடன், அவளுடைய தாயோ, சகோதரியோ ஒன்றாகத்தான் செல்கிறாள் என்று சொல்லி சமாளிக்காதீர்கள். எப்போதும் அப்படி சென்றுவிட முடியுமா ? தனியாக செல்ல வாய்ப்பே ஏற்படாதா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை மார்க்கம் பேணும் பெற்றோர்கள் உடனே நிறுத்துங்கள் – உங்கள் பெண் மக்கள் வழித்தவறி போவதற்கு பெற்றோர்களாகிய நீங்களே துணையாக இருக்காதீர்கள். அவர்கள் பாதை தவறி சென்றார்களானால் , கெட்டார்களானால் அவர்களுக்கு இறைவனிடமிருந்து தண்டனைக் கிடைப்பதைப்போல் உங்களுக்கும் பல மடங்கு தண்டனை இறைவனால் வழங்கப்படும். மேலும் இவ்வுலகிலும் உங்களுக்கு இறைவனின் தண்டனை கிடைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
மேலும் ஆண்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிள் / ஸ்கூட்டரில் பெண்ணை மட்டும் அல்ல குடும்பத்தையே பின்னால் உட்காரவைத்து செல்வது நாகரீகமாகிவிட்டது – இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நம்முடைய கலாச்சாரத்திற்கு இது உகந்தது அல்ல. இதை யாரிடமாவது கேட்டால் ஆட்டோவுக்கு கொடுக்கிற பணத்திற்கு இது எவ்வளவோ மிச்சம் என்பார்கள். அப்படி ஒன்றும் மிச்சம் வந்துவிடப் போகிறதில்லை. அதல்லாமல் வெகுதூரம் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலிக்குகூட பெண்களை மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார வைத்து சென்று வருகின்றனர் – இரவு நேரத்தில் வீடு திரும்புகின்றனர், இதுவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவையே என்பதை உணர்ந்து நடந்தால், ஆரோக்கியமும், கலாச்சாரமும் மேம்படும் என்பதை அறியலாம்.
வஸ்ஸலாம்.
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|