சுயகெளரவத்தையோ , சுயதேவையையோ விரும்பியவர்களாக ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்)[07 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19886
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகராட்சிக்கு உள்ளே என்ன நடக்குது என்பது மக்களுக்கு தெரியாது அதனால்தான் மக்களுடைய பிரதிநிதியாக மக்களுக்கு சேவை செய்வதற்காக உங்களுக்கு ஓட்டுபோட்டு உங்களை நகராட்சிக்கு உள்ளே அனுப்பினார்கள் மக்கள். ஆனால் நீங்களோ எந்த ஒரு முறையான காரணமும் இல்லாமல் " வெளிநடப்பு " என்ற பெயரில் வெளியே வருகிறீர்கள்.
பொதுவாக அரசியல் கட்சிகள்தான் இந்த மாதிரியான வெளிநடப்புகளை செய்தும் , கோஷம் போட்டும் நகர் மன்றத்தை செயல்பட விடாமல் முடங்கச் செய்யும் என்பதாலேயே அரசியல் கட்சிகள் அல்லாத நிர்வாகத்தை நம் ஊர் மக்கள் விரும்பி அதன்படி ஓட்டளித்து தேர்ந்தெடுக்கிறோம்.
நம்ம ஊர் என்றல்ல எந்த ஊருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் என்பது அரசியல் கலக்காமல் இருந்தாலே திறமையாக செயல்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை செய்ய முடியும் - இதை மக்களுக்கு சேவை செய்யணும் என்ற எண்ணம் உள்ளவர்கள் உணர்ந்தார்களானால் " வெளிநடப்பு " என்றல்ல கோஷ்டி பூசல்களும் உண்டாகாது - மன்ற உறுப்பினர்களிடையே மனக்கசப்பு இல்லாமல் - சகிப்புத் தன்மையும் , பொறுமையும் கையாளப்பட்டு - கருத்துக்கள் பரிமாறப்பட்டு நகர்மன்றம் சேவைமிக்க மன்றமாக செயல்படும்.
இதைத்தான் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனர் - ஆகவே தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களுடைய தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் - மக்களின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுங்கள்.
-----------------------------------------------
வெளிநடப்பு :
கூட்டத்தில் எத்தனையோ முக்கியமான விசயங்களை பற்றி பேசி கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்று இருக்க -கூட்டமே தேவை இல்லை என்று ஒவ்வொருவராக " வெளிநடப்பு " என்று சொல்லி வெளியேறி இருப்பது நல்லவர்களுக்கு உகந்தது அல்ல.
வெளிநடப்புக்கு கூறும் காரணங்கள் பொருத்தமற்றது - சில காரணங்கள் ஜீரனிக்க முடியாதது - வேறு சில காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றாலும் அவைகள் சகித்துக் கொள்ளக்கூடியதே - அவைகளுக்காக வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை.
நகராட்சியை அரசியல் கட்சிகள் ஆளாவிட்டாலும் கோஷ்டிகள் சேர்ந்து பணியை முடக்க செய்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.
--------------------------------------
கூட்ட " படி " / சம்பளம் :
இந்த மாதம் கூட்டத்திற்கு போய் கையெழுத்து போட்டு விட்டு , கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள் , அப்படியிருக்க இந்த மாத கூட்டத்திற்கான " படி " யை வாங்கியிருக்க தேவை இல்லையே.
நீங்கள் கேட்காமல் அவர்களாகவே உங்களுடைய, இந்த மாத கூட்டத்திற்கான " படி " யை தந்தால்கூட , நீங்கள் அதை வாங்க மறுத்து , நாங்கள் வெளிநடப்பு செய்யப் போகிறோம் எங்களுக்கு இந்த மாத கூட்டத்திற்கான " படி " வேண்டாம் என்று வாங்க மறுத்து உங்கள் நேர்மையை !? நிரூபித்திருக்கலாம்.
காரணம் மாதம் ஒரு கூட்டம் அவசியம் நடைபெற வேண்டும் அந்த ஒரு கூட்டத்திற்கு மட்டும்தான் " படி " கொடுக்கப்படும் - அந்த கூட்டத்திற்கு நீங்கள் தொடராக 3 முறை வரவில்லை என்றால் உங்கள் பதவிக்கு பாதிப்பு ஏற்படும்.
மற்றபடி அந்த மாதத்தில் எத்தனை கூட்டங்கள் நடைபெற்றாலும் அதற்கு என்று " படி" இல்லை - அந்த "படி" இல்லாத கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் உங்கள் பதவிக்கு பாதகமில்லை.
மாதாந்திர கூட்டத்திற்கு வந்ததாக கையெழுத்து போட்டு பதவியை தக்க வைத்ததோடு நிறுத்தியிருக்கலாம் - " படி "யை
வாங்கி இருக்க தேவையில்லை.
--------------------------------------
இணையத் தளம் :
ஒவ்வொரு காரணமாக விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் - இருந்தாலும் ஒருசிலதை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
இணையத் தளத்தில் காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனால் " வெளிநடப்பு " செய்கிறேன் என்பது எந்த விதத்தில் பொருந்தும் - இணையத் தளம் நகராட்சியுடைய சொந்த இணையத் தளமா ? தலைவரோ அல்லது உறுப்பினர்களோ தட்டிக்கேட்க வில்லை அதனால் வெளிநடப்பு செய்கிறேன் என்பதற்கு ?.
இணையத் தளம் காழ்ப்புணர்ச்சியோடு , ஒருதலைப்பட்சமாக உங்களை பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தால் , குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தவர்களிடம் முறையிட்டு அதை நிவர்த்தி செய்து கொண்டிருக்கலாம்.
இணையத் தளம் உங்கள் மீது அவதூறாக செய்தியை வெளியிட்டிருந்தால் , உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றிருந்தால் நீங்கள் குறிப்பிட்ட அந்த இணையத் தளத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாமே வீணாக நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்யவேண்டியதில்லை.
நீங்கள் வெளிநடப்பு செய்ததினால் இனிமேல் அந்த இணயத் தளம் உங்களுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுமா இல்லை ஒரு வேளை உங்களிடம் ஏதும் தவறு இருந்தால் அதை வெளியிடாமல் மறைத்துவிடுமா ? என்ன ?.
நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்று சொல்லி 2 சகோதரிகள் வெளிநடப்பு செய்திருக்கிறீர்கள் - வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்று நீங்கள் சொல்வது இந்த ஒரு கூட்டத்திற்கு மட்டும்தானா ? இல்லை எல்லாக் கூட்டத்திற்கும் பொருந்துமா ?.
காரணம் 30.12.2011 அன்று நடந்த கூட்டத்தில் (கூட்டம் எண் 4 பொருள் எண் 24 தீர்மானம் 141 ) கூட்ட நடப்புகளை வீடியோ பதிவு செய்து அந்த குறுந்தகடுகளை உள்ளூர் தொலைக் காட்சிகளுக்கும் , இணையத் தளங்களுக்கும் , இதர ஊடகங்களுக்கும் தர தீர்மானம் நிறை வேற்றபட்டப்போது அதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை.
அந்த தீர்மானம் கொண்டு வரும்போது வீடியோ எடுப்பது என்பது கலாச்சாரத்திற்கு மாற்றமாக தெரியவில்லையா ? இல்லை நீங்கள் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா ?
சகோதரிகளே! உங்களை மதிக்கிறேன் தயவு செய்து அடுத்தவர்களுடைய சொல்லை கேட்டு, அடுத்தவர்களுடைய தூண்டுகோலினால் அருத்தமற்ற காரணங்களை கூறி " வெளிநடப்பு செய்து " உங்களுடைய பெயர்களை கெடுத்துக் கொள்ளாதீர்கள் - உங்களுடைய அறிவை பயன்படுத்தி அல்லாஹ்வை முன்னிறுத்தி எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்துங்கள் - வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
நகராட்சியில் ஆணையர் அவர்களுக்கு தற்சமயம் தனி அறை ஒதுக்கபடாததால் உடனடியாக தனியறை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று துணைத் தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் - பாராட்டுகிறேன்.
அவசியம் தனியறை கொடுக்கப்படவேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை - அதே நேரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவர்
அவர்கள் தனியறை இல்லாமல் முதல் ஐந்து மாதங்களாக அல்லல்பட்டு கொண்டிருந்தாரே அப்போது ஏன் அதைப்பற்றி யாரும் வாய் திறக்கவில்லை துணைத் தலைவர் உட்பட ?. - உறுப்பினர்களே சிந்தியுங்கள் !!!.
ஒரு சகோதரி அவர்கள், நகராட்சி ஆணையர் அவர்களுக்கு தனி அலுவலகமில்லை என்றும் அது ஆணையருக்கும் அவரை சந்திக்க வரும் பலருக்கும் அசெளகரியமாக இருப்பதாகவும் மிகவும் நாசூக்காக விளக்கமாக எழுதி இருப்பதோடு நகராட்சி ஆணையர் அவர்களின் பதவி வட்டாட்சியர் அவர்களின் பதவிக்கு ஈடானதாகும் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
நகராட்சி ஆணையர் அவர்களின் பதவி வட்டாட்சியர் பதவிக்கு சமமானது என்பது சரிதான் - இருந்தபோதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு நகராட்சியின் தலைவரும் நகராட்சியின் ஆணையருக்கு கீழ்படிந்தவர் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
நகராட்சியின் தலைவர் மக்களின் பிரதிநிதி - நகராட்சியின் ஆணையர் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மறந்திட வேண்டாம்.
ஆணையருக்கு தனி அலுவலகம் இல்லாததால் அசெளகரியமாக இருக்கிறது என்று கடிதம் எழுதும் சகோதரி - தலைவர் ஐந்து மாதமாக அலுவலகம் இல்லாமல் இருந்தாரே அதற்காக எதுவும் வேண்டுகோள் விடுத்தீர்களா ?.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் , தனக்கு என்று அலுவலகமில்லாமல் இருந்தபோது மக்களையும் மற்றவர்களையும் சந்திக்கும்போது அது அவருக்கும் அவரை சந்திக்க வரும் அனைவருக்கும் அசெளகரியமாகத்தானே இருந்திருக்கும்?.
ஆகவே சகோதரி மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடவாமல் இருந்தால், உங்கள் மதிப்பு மக்களிடையே மதிப்போடு இருக்கும்.
முன்னால் நகராட்சி ஆணையரை வலுக்கட்டாயமாக அலுவலகத்தை விட்டு விரட்டி விட்டு அவருடைய அலுவலகத்தை நகராட்சி தலைவர் எடுத்துக் கொண்டார் என்ற ஒரு செய்தி பொதுவாகவே மன்ற உறுப்பினர்கள் சிலரிடமும், வெளியே உள்ள சில விவரமறியா பொது மக்களிடமும் நிலவுகிறது - இது தவறான செய்தி.
தேர்தல் முடிந்து புதிய தலைவர் பதவி ஏற்றவுடன் அவருக்கு தனி அலுவலகம் அமைத்துக் கொடுக்கவேண்டியது அன்று இருந்த (தற்காலிக) ஆணையரின் கடமை அதை செய்ய அவர் தவறினார் அல்லது அவர் சிலரால் தடுக்கப்பட்டார்.
தலைவர் தனது உரிமையை கேட்டுப்பெறவோ அதிகாரத்தை பயன்படுத்தி பெறவோ விரும்பவில்லை அல்லது கூச்சப்பட்டார் இதுதான் நடந்த சம்பவம்.
அலுவலகம் கொடுக்கப்படாமல் நகராட்சி தலைவர் அல்லல்படுகிறார் பலமுறைக் கேட்டும் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் பொதுநல ஆர்வலர்களால் மேலிடத்திற்கு தெரியவந்தபோது அன்றைய தற்காலிக ஆணையருக்கு மேலிடம் சட்டத்தை சுட்டிக்காட்டி அறிவுறுத்தியது - அந்த தற்காலிக ஆணையரும் மறு பேச்சின்றி தனது அறையை உடனே தலைவருக்கு கொடுத்துவிட்டு அவர் வேறு இடத்திற்கு சென்றார்.
அந்த தற்காலிக ஆணையர் அவருக்கென்று தனி அலுவலகம் ஏற்பாடு செய்வதற்கு முன்பே மாற்றலாகி சென்றதால் புதியதாக வந்த இன்றைய ஆணையர் அலுவலகம் இல்லாமல் அசெளகரியப்பட வேண்டியதாகிவிட்டது. இதுதான் சரியான தகவலே தவிர மற்றபடி உலா வரும் எந்த செய்தியும் உண்மையல்ல.
ஆணையருக்கு தனி அலுவலகம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்தில்லை. புதிதாக கட்டிடம் கட்டியபின்தான் என்றில்லை இப்போது இருக்கக் கூடிய அலுவலகங்களின் அமைப்புகளை மாற்றி அமைத்துக் கொண்டால் அவசியப்பட்ட அலுவலகங்கள் கிடைக்கும்.
புதிதாக கட்டிடங்கள் கட்டியபின் கூடுதலான வசதிகளுடன் பல அலுவலகங்களை தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம். முதலில் தேவை நகராட்சி அலுவலர்களுக்கும் , மக்கள் பிரதிநிதிகளுக்கும் பரஸ்பரம் புரிந்துணர்வு. அந்த புரிந்துணர்வு சீரானால் நிர்வாகம் இடையூறு இல்லாமல் நடைபெறும்.
நீங்கள் ஒருவரை ஒருவர் நேர்மையான விசயங்களில் புரிந்து கொண்டால் நடப்பவை எல்லாம் நல்லவையாகவே நடக்கும்.
ஊருக்கும் , மக்களுக்கும் நல்லதை செய்யவேண்டும் என்று எல்லோரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டால் இந்த மாதிரியான வெளிநடப்புகள் தேவையில்லை.
நல்லதை செய்ய வேண்டும் என்று விரும்பும் சிலரும் சில நேரம் மதியை இழந்து விடுகிறார்கள் என்பதே வருத்தப்படக்கூடியதாக இருக்கிறது.
செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்து செய்திகளை சேகரித்து அனுப்புவதால்தான் இன்டர்நெட் மூலமும், செய்திதாள்கள் மூலமும் நகரமன்ற செய்திகளை மக்கள் அறிய முடிகிறது - செய்திகள் வெளியே போகும் என்பதை உணர்வதாலயே உறுப்பினர்கள் அடக்கத்துடன் உரையாட முடிகிறது - செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வரவில்லையெனில் அந்த கூட்டம் எப்படி இருக்கும் என்பதை உறுப்பினர்களே சிந்தியுங்கள்.
ஊடகங்கள் தலையீடு இருப்பதாலேயே நகராட்சியின் செயல்பாடுகள் அதன் குறைபாடுகள் மற்றும் ஊழல்கள் வெளியே தெரிகிறது.
அதனால் இன்டர்நெட் மற்றும் செய்தியாளர்கள் அவசியம் நகர்மன்றத்தை எப்போதும் சுற்றியே வருவது நல்லது அது குறிப்பிட்ட இன்டெர்நெட் என்றோ செய்தியாளர்கள் என்றோ இல்லை - யாரும் எவரும் வலம் வரலாம். ஆனால் செய்திகளை முறையாக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
செய்தியாளர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் செயல்படவேண்டும் ஒருதலைபட்சமாக இருப்பது அவர்களின் செய்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் - மக்களுக்கு உண்மையை விளக்க முடியாது போய்விடும்.
ஆகவே நேர்மையானவர்கள் செய்தியாளர்கள் வருவதை எதிர்க்கக்கூடாது அவர்கள் மன்ற உருப்பினரானாலும் சரி பொது மக்களாக இருந்தாலும் சரியே.
மேலே சொல்லப்பட்ட வாசகங்களை படித்துப் பார்க்கும்போது நகராட்சி தலைவருக்கு சாதகமாக எழுதி இருப்பது போல் தெரியும்.
என்னை பொறுத்தவரை யாருக்கும் சாதமாக எழுதவேண்டும் , பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லை பொது நலனைக் கருத்தில் கொண்டே எழுதி இருக்கிறேன்.
மற்றபடி தலைவர் எனக்கு சொந்தக்காரருமில்லை உறுப்பினர்கள் வேண்டப்படாதவர்களுமில்லை - இன்னும் சொல்லப்போனால் உறுப்பினர்களிலே என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலரும் - எனக்கு வேண்டியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். ஆகவே எப்போதும் என்னுடைய கருத்தக்களை நடுநிலையாகவே படித்துப் பார்த்து சிந்தியுங்கள்.
தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடுகளை மறந்து, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்தால் மட்டுமே நகராட்சியை நன்றாக நடத்த முடியும்.
அதல்லாமல் சுயகெளரவத்தையோ , சுயதேவையையோ விரும்பியவர்களாக செயல்பட்டால் நிச்சயமாக உங்களால் நகராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாது.
அதுமட்டுமல்ல நேர்மையாக செயல்பட விரும்பும் நகராட்சி அலுவலர்களும் செயல்பட முடியாமல் போவார்கள் - மேலும் அவர்களை வழிக்கெடுப்பதற்கென்றே மக்களிலிருந்து ஒரு கூட்டம் அவர்களை சுற்றிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அதிகாரிகளும், அலுவலர்களும் முறையாக செயல்படுவார்கள் அவர்கள் முறை தவறி நடந்தாலும் நீங்கள் அவர்களை தட்டிக் கேட்கமுடியும் அதன்மூலம் அவர்கள் நேர்மையாக நடக்கமுடியும்.
ஆகையால் தயவு செய்து மக்களுக்காக உண்மையாக, நேர்மையாக சேவை செய்ய விரும்புபவர்கள் உங்கள் பதவிகளிலே தொடருங்கள் - அதற்கு பிரியமில்லாதவர்கள் யாருடைய சொல்லுக்கும் அடிபணியாமல் நீங்களாகவே உங்கள் சுய புத்தியை பயன்ப்படுத்தி உங்கள் பதவிகளை விட்டு விலகி செல்லுங்கள்.
அப்படி செய்தீர்களானால் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross