காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம், 28.06.2012 அன்று (இன்று) மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில்,
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா ஆகியோர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.
கூட்டப் பொருள்:
கூட்டத்தில், பின்வரும் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது:-
கூட்டப்பொருளின் இறுதி பக்கத்தில், நகராட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளிலுள்ள இருப்புத் தொகை பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது:-
மாதப் பணம்:
கூட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில், உறுப்பினர் ஒருவர் நகராட்சி அலுவலரை அவசரப்படுத்தியதையடுத்து, மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை காகித உறையில் வைத்து வழங்கப்பட்டு, கைச்சான்று பெறப்பட்டது.
உறுப்பினர்கள் வெளிநடப்பு:
பின்னர், கூட்ட நிகழ்வுகள் துவங்கும் நேரத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், வேறு சில காரணங்களுக்காகவும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தவாறு ஒவ்வோர் உறுப்பினராக அடுத்தடுத்து கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.
தலைவியின் அபாண்டமான குற்றச்சாட்டைக் கண்டித்து...
இணையதளத்தில் தன் மீது அபாண்டமாக தலைவி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், அதனைக் கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்துவிட்டு கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
தன்னிச்சையாக செயல்படுகிறார் தலைவி...
கூட்டம் நடப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில், கால அவகாசம் தராமலேயே கூட்டப் பொருள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், இக்குறைக்கு தலைவியே முழுப் பொறுப்பென்றும், தலைவி தன்னிச்சையாகவே செயல்பட்டு வருவதாகவும், நகர்மன்ற உறுப்பினர்கள் யாரையும் மதிப்பதேயில்லை என்றும் கூறி, அவற்றைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
குடிபோதையில் பேசியவருக்கு ஆதரவாக செயல்படும் தலைவி...
சங்கர் என்ற ஒருவர் குடிபோதையிலிருந்து நிலையில் அவதூறான சொற்களைப் பேசியதாகவும், நகர்மன்ற வளாகத்திலேயே தன்னைத் தாக்க முற்பட்டதாகவும், இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நகர்மன்றத் தலைவர், சங்கருக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி, அனைவருக்கும் பின்வருமாறு தனதறிக்கையின் ஒரு நகலை அளித்துவிட்டு, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்:-
இணையதளத்தில் ஒருதலைபட்சமாக செய்தி வெளியீடு...
இணையதளத்தில் தன் மீது காழ்ப்புணர்ச்சியோடு ஒருதலைப்பட்சமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
எஃப்.சி. இல்லாத வண்டி...
எஃப்.சி. இல்லாத வண்டியை பழுது நீக்க வேண்டாம்... புதிய வண்டியை வாங்கலாம் என்று ஒரு சில உறுப்பினர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் தெரிவித்த நிலையிலும், பெரும்பான்மையை மதிக்காமல் நகர்மன்றத் தலைவர் தன்னிச்சையாக மினிட் புத்தகத்தில் தீர்மானத்தை மாற்றி எழுதியதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
கடுஞ்சொற்களால் திட்டினார் தலைவி...
கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி நகர்மன்றத் தலைவர் தன்னை திட்டிப் பேசியதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
லைட் எரியவில்லை...
தனித்தனியாக தான் அளித்த 3 கோரிக்கைகளை நகர்மன்றத் தலைவர் ஒரே கூட்டப் பொருளில் சேர்த்துள்ளதாகவும், 16.04.2012 அன்று தனது வார்டு தேவைக்காக 2 சோடியம் லைட் உட்பட 12 தெரு விளக்குகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 6 தெரு விளக்குகள் மட்டுமே இதுவரை பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றிலும் 3 தெரு விளக்குகள் எரியவில்லை என்றும், இதனால் தனது வார்டு மக்களிடம் தனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, இவற்றைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தவாறு 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை...
முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
புதிய சாலை அமைக்கப்படவில்லை...
தனது வார்டில் புதிதாக போட தீர்மானமியற்றப்பட்ட சாலை இதுவரை போடப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
இதுவரை வைத்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லையென்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
கூட்டத்தை வீடியோ எடுப்பது கலாச்சாரத்திற்கு மாற்றமானது...
நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்வது கலாச்சாரத்திற்கு மாற்றமானது என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
09ஆவது வார்டு உறுப்பினரின் குற்றச்சாட்டையே தானும் ஆமோதிப்பதாகவும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறி, 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
வரியைக் கூட்டிய தலைவி...
தலைவி வரியைக் கூட்டியதையெல்லாம் சுட்டிக்காட்டாமல், துவக்கம் முதலே தலைவிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாகவே இணையதளம் செய்தியை வெளியிட்டு வருவதாகவும், அதனைக் கண்டிதது வெளிநடப்பு செய்வதாகவும், இன்டர்நெட்டை இக்கூட்டத்திலிருந்து ஒழித்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறி, 12ஆவது வார்டு உறுப்பினர் கூட்டரங்கிலிருந்து வெளியேறினார்.
இறுதி வரை இருந்த உறுப்பினர்கள்:
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தின் இறுதி வரை அமைதியாக இருந்தனர்.
கூட்டரங்கில் பொதுமக்களில் சுமார் 10 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
வெளியில் சென்ற பின் வெளிநடப்பு (?!)
கூட்ட நிறைவுற்ற சில மணித்துளிகளில், நகர்மன்ற வளாகத்திலிருந்த செய்தியாளர் ஒருவரிடம், “நானும் வெளிநடப்பு செய்ததாக செய்தி போடுங்க!” என்று, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி தெரிவித்தார்.
அதிருப்தி உறுப்பினர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு:
பின்னர் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவரும், கூட்டரங்கிற்கு வெளியே நின்றவாறு செய்தியாளர்களை சந்தித்தனர். நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேட்டியளித்தார்:-
22.06.2012 அன்று நகர்மன்ற உறுப்பினர்கள் மீது தலைவி இணையதளத்தில் அபாண்டமாக குற்றச்சாட்டு அளித்துள்ளார்...
ஆவணங்கள் இல்லாத தண்ணீர் வண்டியைப் பழுது நீக்க தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் தலைவி...
இ-டெண்டர் என்றால் என்ன என்று எந்த உறுப்பினருக்கும் விளக்கமளிக்காமலேயே இ-டெண்டர் மூலம் பொருட்களை வாங்க தலைவி ஒப்புதல் வழங்கியுள்ளார்... இதனால், கவுன்சிலர்களுக்கு கிடைக்க வேண்டிய இருபதாயிரம் ரூபாய் கமிஷன் நின்று போய்விட்டது என்று தலைவி பேசியிருக்கிறார்...
இவற்றையெல்லாம் கண்டித்து, நாங்கள் 15 உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்...
இவ்வாறு, நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
|