காயல்பட்டினம் வண்ணார்குடி கடைத் தெருவில் - எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை. இங்கு காய்கறி, மீன் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்தையில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், காயல்பட்டினம் கடைப்பள்ளிக்கு சொந்தமான பரிமார் தெரு மீன் சந்தையில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டுமென்றும் கூறி, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இச்சங்கத்தின் தலைவராக அப்துல் அஜீஸ், துணைத்தலைவராக எஸ்.பீட்டர், செயலாளராக ஜெஸ்மின், துணைச் செயலாளராக கே.சுடலை மணி நாடார், பொருளாளராக ஷம்சு அலியார் ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இன்று காலையில், காயல்பட்டணம்.காம் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த செயலாளர் ஜெஸ்மின்,
எங்கள் சங்கம் முறைப்படி அரசுப் பதிவு செய்யப்பட்டுள்ளது... கடைப்பள்ளிவாசலுக்கு சொந்தமான இந்த மீன் மார்க்கெட்டில், கடந்த 19 வருடங்களாக சாதி - மத வேறுபாடுகளின்றி நாங்கள் 110 வியாபாரிகள் இங்கு மீன் வணிகம் செய்து வருகின்றோம்... “காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்கம்” என்ற பெயரிலான எங்கள் சங்கத்திலும் பல மதங்களைச் சார்ந்தோர் நிர்வாகிகளாகவும் இருந்து வருகின்றனர்.
முற்காலத்தில், பரிமார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மீன் வியாபாரிகளும், வண்ணாக்குடி தெருவில்தான் மீன் வணிகம் செய்து வந்தோம்.... இன்றிருக்கும் - நகராட்சிக்குச் சொந்தமான தினசரி சந்தை கட்டிடம் அன்று இல்லை... எல்.கே.மேனிலைப்பள்ளியின் கோட்டைச் சுவருக்கு வெளிப்புறத்திலுள்ள சுற்றுப்புறத்தில்தான் நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம்...
அப்பள்ளியின் ஆசிரியர்களும், நிர்வாகிகளும், மாணவர்களும் - “உங்க பிள்ளைகளும் இங்குதானே படிக்கிறாங்க...? அவங்க நல்லா இருக்கனும்னு உங்களுக்கு ஆசை இல்லையா? அவ்வாறு இருந்தால், வேறு இடத்தில் மீன் வியாபாரம் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொள்ள, நாங்கள் அதற்கு உடனடியாக கட்டுப்பட்டு, அவ்விடத்தில் மீன் விற்பனை செய்வதை நிறுத்திக்கொண்டோம்...
ஆனால், வேறு சில வியாபாரிகள் தொடர்ந்து அதே இடத்தில் மீன் விற்பனை செய்ததையடுத்து பிரச்சினை முற்றி, 1993ஆம் ஆண்டு ஊர் கலவரம் வரை சென்றது.
பின்னர், கடைப்பள்ளி நிர்வாகத்திற்குச் சொந்தமான காலி நிலத்தில் - தற்போதிருக்கும் மீன் சந்தை கட்டித் தரப்பட்டது... அன்று முதல் இன்று வரை இந்த பரிமார் தெரு மீன் சந்தையிலேயே நாங்கள் மீன் விற்பனை செய்து வருகின்றோம்...
அதுபோல, வண்ணார்குடி கடைத் தெருவில், நகராட்சியின் சார்பில் தினசரி சந்தை அமைக்கப்பட்டது...
இந்நிலையில், வழமையாக கூட்ட நெரிசலுடன் காணப்படும் எங்கள் பரிமார் தெரு மீன் சந்தையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கூட்டம் வெகுவாகக் குறைந்து எங்கள் வியாபாரம் மந்த நிலையை அடைந்தது... “நீங்க விக்கிறதை விட பல மடங்கு குறைத்து வண்ணார்குடி கடைத் தெரு சந்தையில் விற்பனை செய்றாங்க...” என்று பல வாடிக்கையாளர்கள் தெரிவித்ததையடுத்து நாங்கள் அங்கு சென்று பார்த்தபோதுதான், அங்கே ஒரு பெரிய மீன் சந்தையே இருப்பது தெரிய வந்தது...
மீன் விற்பனை கிடையாது என்பதால், வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள அந்த தினசரி சந்தையை பல ஆண்டுகளாக யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை... அதனையடுத்து, ஒரு இரும்பு வியாபாரி இரும்பு குடோனுக்காக அவ்விடத்தை எடுத்திருந்தார்... இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் ஒரு பெண் அந்த குடோன் காரரிடம் அனுமதி பெற்று, அதன் வாசல் அருகில் மீன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்... இதனால் எங்களுக்கும் பாதிப்பில்லாததால் நாங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை... ஆனால், காலப்போக்கில், வியாபாரிகள் எண்ணிக்கை 20 முதல் 25 வரை அதிகரித்து, அவ்விடம் மீன் சந்தையாகவே மாறிவிட்டது... பிடிக்கப்பட்ட மீன்களை அவர்கள் நேரடியாகவே கொண்டு வந்து விற்பதால் எங்கள் வியாபாரம் பெரிதும் பாதித்துள்ளது...
உடனடியாக நாங்கள், எல்.கே.மேனிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பின்வருமாறு கடிதம் எழுதினோம்...
அதனைத் தொடர்ந்து, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு பின்வருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது...
அதுபோல, இந்த வெளியூர் மீன் வியாபாரிகளின் ஊர் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினோம்...
பின்னர், காயல்பட்டினத்தின் அப்போதைய நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில், பரிமார் தெரு மீன் மார்க்கெட்டைத் தவிர வேறெங்கும் மீன் விற்க தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்... இதுகுறித்து, அப்போதைய ஆணையருக்கு நாங்கள் எழுதிய கடிதம்...
அப்போதைய நகர்மன்ற உறுப்பினர்களான சுகு, எஸ்.ஐ.ரஃபீக் ஆகியோரும் அந்த அமர்வில் உடனிருந்தனர்...
எங்கள் கோரிக்கைக்கு பதிலளித்த தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள், “ஊர் பெருத்துவிட்டது... எனவே, 2 மீன் மார்க்கெட் அவசியமாகிவிட்டது... நகராட்சிக்கு பாத்தியப்பட்ட தினசரி சந்தையில் மீன் விற்பனை நிறுத்தப்பட்டால், நகராட்சியின் வருமானம் பாதிக்கப்படும்... என்று தெரிவித்துவிட்டார்...
பொதுமக்களைப் பொருத்த வரை, குறைந்த விலைக்கு எங்கு பொருள் கிடைக்கிறதோ அங்குதான் சென்று வாங்குவார்கள்... அவர்களுக்கு எங்களின் சிரமங்களை விளக்கிச் சொல்லாமல் தெரியப்போவதில்லை...
நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் மீன் விற்பனை செய்வோர் - ஆலந்தலை, அமலி நகர், புன்னைக்காயல், வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்... இவர்கள் சொந்தப் படகு வைத்திருப்போரின் குடும்பத்தினர் என்பதால், அவர்களால் மிகக் குறைந்த விலைக்கு மீன் விற்க முடியும்... ஆனால், நாங்களோ கடன் வாங்கி பணம் திரட்டி, ஏலத்தில் மீன் எடுப்பதால், அதற்கு மேல் எங்கள் உழைப்புக்கும் சேர்த்து மீன் விலையை அமைக்க வேண்டியுள்ளது... எனவே, பொதுமக்களுக்கு இது அதிகமான தொகையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை...
பிறகு, எங்கள் வியாபாரம் தொடர்ந்து மந்தப்பட்ட நிலையிலேயே இன்று வரை மீன் விற்று வருகிறோம்...
இந்நிலையில், புதிய நகராட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு மனுவை பின்வருமாறு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 18 வார்டுகளின் உறுப்பினர்களுக்கும் அளித்தோம்...
நகராட்சி ஆணையருக்கும், சுகாதார ஆய்வாளருக்கும் பின்வருமாறு கடிதம் அனுப்பினோம்...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் நாங்கள் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்...
அதன்பிறகு, கடந்த 28.06.2012 அன்று மதியம் 03.30 மணியளவில் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையரை சந்தித்து முறையிட்டோம். வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்திருந்த ஜெயபால் என்பவரும் அந்த அமர்வில் கலந்துகொண்டார். நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வருமாறு உடன்பாடு எட்டப்பட்டது...
இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்று காலையில், பரிமார் தெருவைச் சார்ந்த 10 மீன் வியாபாரிகள் வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சியின் தினசரி சந்தைக்கு மீன் விற்க சென்றிருந்தனர். “இங்குள்ள வியாபாரிகளைத் தவிர வேறு எவருக்கும் இங்கு மீன் விற்க அனுமதியில்லை” என்று - ஒப்பந்தத்தை சிறிதும் மதிக்காமல், காவல்துறையினர் துணையுடன் குத்தகைக்காரர் ஜெயபால் எங்கள் வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து நாங்கள் பெரிதும் மனம் நொந்து போயுள்ளோம்...
அந்த தினசரி சந்தையை, பொது ஏலம் இல்லாமலேயே கூடுதல் தொகைக்கு அவர் மீண்டும் குத்தகைக்கு எடுத்திருப்பதுவும், நகராட்சி எப்படி அவருக்கு மீண்டும் குத்தகை வழங்கியுள்ளது என்பதுவும் எங்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளது...
இவ்வாறு, காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச்சங்க செயலாளர் ஜெஸ்மின் காயல்பட்டணம்.காம்-இடம் தெரிவித்தார்.
பின்னர், காலை 11.00 மணியளவில், திருச்செந்தூர் தாலுகா வட்டாட்சியர் சங்கர நாராயணன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் மற்றும் தலையாரி முனுசாமி ஆகியோர் பரிமார் தெரு மீன் சந்தைக்கு வந்து, மீன் வியாபாரிகளிடம் கருத்துக்களைக் கேட்டனர்.
பின்னர், காயல்பட்டணம்.காம்-இடம் பேசிய காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், இம்மாதம் 05ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாலை 04.00 மணியளவில், திருச்செந்தூரிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சமாதானக் கூட்டத்திற்கு இரு தரப்பினரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
பரிமார் தெரு மீன் சந்தையை நிர்வகிக்கும் கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், இன்று மதியம் காயல்பட்டணம்.காம் செய்தியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.
இப்பிரச்சினை காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச் சங்கம் என்ற அமைப்பிற்கும், வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள நகராட்சியின் தினசரி சந்தை குத்தகைதாரருக்கும் இடையிலுள்ள பிரச்சினையே தவிர, இதற்கும், கடைப்பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை...
“இந்த மீன் சந்தையில் இடம் இருக்கும் வரை, இங்கு வியாபாரம் செய்ய வரும் யாரையும் விரட்டாமல் இடம் கொடுக்க வேண்டும்” என்ற விதிமுறையின் அடிப்படையில், எங்கள் பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட பரிமார் தெரு மீன் சந்தையை ஆண்டுதோறும் நாங்கள் குத்தகைக்கு விடுவோம்... நடப்பாண்டில், பரிமார் தெருவைச் சார்ந்த ஜெஸ்மின் என்ற தனிநபர் குத்தகைக்கு எடுத்துள்ளார்... இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அவரது குத்தகைக் காலமாகும்... என்று கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் அனைத்து சில்லறை மீன் தொழிலாளர் நலச் சங்க செயலாளர் ஜெஸ்மின் கூறிய கருத்துக்கள் குறித்து, வண்ணார்குடி கடைத் தெருவிலுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் தினசரி சந்தை குத்தகைதாரரான ஜெயபாலிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காயல்பட்டணம்.காம் பேசியது. அப்போது கருத்து தெரிவித்த அவர்,
இன்று காலையில் 10 வியாபாரிகள் வரவில்லை... 4 வியாபாரிகள் வந்தனர்... அவர்கள் யாரையும் நான் துரத்தவுமில்லை... காவல்துறையினர் யாரும் அப்போது சந்தையில் இருக்கவுமில்லை...
நீண்ட காலமாக இச்சந்தையில் மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் இடத்தை பரிமார் தெரு வியாபாரிகள் கேட்டனர்... “உங்களுக்கு இதே சந்தையில் வேறு இடம் தருகிறேன்... இந்த இடம்தான் வேண்டுமென்று கேட்காதீர்கள்...” என்றுதான் நான் சொன்னேன்... அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், “நாங்க நகராட்சியில் பார்த்துக்கொள்கிறோம்...” என்று தெரிவித்தவாறு சென்றுவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அதே பரிமார் தெருவிலிருந்து வேறு 4 வியாபாரிகள் வந்து, நாங்கள் காட்டிய இடத்தில் அமர்ந்து, எந்த இடைஞ்சலுமின்றி வியாபாரம் செய்துவிட்டு சென்றனர்...
நகராட்சி தலைவி மற்றும் ஆணையர் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இச்சந்தையில் வெளியூர் வியாபாரிகள் பத்து பேர், உள்ளூர் வியாபாரிகள் பத்து பேர் மீன் வியாபாரம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது... மொத்தமே 25 கடைகள் மட்டுமே உள்ள இச்சந்தையில் இதைத்தானே நாங்கள் செய்ய முடியும்...? என்று கூறினார்.
“அவ்விடம் மீன் சந்தையல்ல; காலப்போக்கில் அப்படி மாற்றப்பட்டுவிட்டது” என்ற கருத்து குறித்து அவரிடம் வினவியபோது, “இது தினசரி சந்தை... இங்கு மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் விற்கப்படுவது போல மீன் வியாபாரமும் நடைபெற்று வருகிறது...” என்று தெரிவித்தார்.
தினசரி சந்தையை நடப்பாண்டில் குத்தகைக்கு எடுத்தது குறித்து கேட்கப்பட்டபோது, கடந்த 5 ஆண்டுகளாக அவர்தான் இந்த சந்தையை குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், கடைசியாக சென்ற ஆண்டு பொது ஏலத்தில் 91,000 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்ததாகவும், நடப்பாண்டில், 15 சதவிகித கூடுதல் தொகை கொடுத்து, 9 மாத காலத்திற்கு 78,458 ரூபாய்க்கு குத்தகை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். |