ஹாங்காங்கில் நடைபெற்ற சேலஞ்ச் லீக் க்ரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில், காயல்பட்டினத்தின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
ஹாங்காங் க்ரிக்கெட் கழகத்தின் (Hong Kong Cricket Association - HKCA) அங்கீகாரத்துடன், ஹாங்காங்கிலுள்ள தனியார் சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக சேலஞ்ச் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினத்தின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணியும் விளையாடி வருகிறது. 15 அணிகளை உள்ளடக்கிய இச்சுற்றுப்போட்டியில், முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் “ஏ” பிரிவில் விளையாடும். அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி கடந்த மூன்றாண்டுகளாக “ஏ” பிரிவில் விளையாடியது.
நடப்பு சுற்றுப்போட்டியில் மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும். 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த அணி 4ஆவது தரத்தைப் பெற்றது.
24.06.2012 அன்று, ஹாங்காங் பழைய விமான நிலையம் அருகிலுள்ள கை டாக் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த அணி - கடந்த ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தன்னைத் தோற்கடித்த ஸ்ரீலங்கன் சோஷியல் க்ரிக்கெட் க்ளப் (SLSCC) அணியை எதிர்த்து ஆடி வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
01.07.2012 அன்று, ஹாங்காங்கிலுள்ள PKVR Diamond Hill மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், TCC-HK BLUES அணியை எதிர்த்து மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் (MCC) அணி களம் கண்டது.
இந்த அணியில், காயல்பட்டினத்தைச் சார்ந்த
ஹபீப் (அணி தலைவர்),
வாவு யாஸிர் (அணி துணைத்தலைவர்),
மக்பூல்,
முஷ்தாக்,
அஜ்மல்,
மொகுதூம்,
ஷம்சுத்தீன்.யு.,
பஷீர்,
லாஃபிர்,
ரிஹான்,
லியாக்கத்,
வாவு இப்றாஹீம்
ஆகியோர் விளையாடினர்.
நாணயச் சுழற்சியில், TCC-HK BLUES அணி வெற்றிபெற்று, துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. 30 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 வீரர்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் வினீத் 36 ஓட்டங்களும், வர்நித் 44 ஓட்டங்களும் பெற்றனர்.
எதிரணியின் பஷீர் 2 வீரர்களையும், லியாக்கத், ரிஹான், யு.ஷம்சுத்தீன் ஆகியோர் தலா ஒரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி துடுப்பெடுத்தாடியது. அந்த அணி, 26 ஓவர்களை மட்டும் எதிர்கொண்டு, வெற்றி இலக்கான 158 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் யு.ஷம்சுத்தீன் (விளக்கு) ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களும், அஜ்மல் 24 ஓட்டங்களும், லியாக்கத் 26 ஓட்டங்களும், ரிஹான் 16 ஓட்டங்களும், முஷ்தாக் 15 ஓட்டங்களும் பெற்றனர். ஆட்டத்தின் இறுதியில், காயல்பட்டினம் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் யு.ஷம்சுத்தீன் (விளக்கு) ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், பந்து வீச்சில் மொத்தம் 6 ஓவர்களை வீசி, 2 மெய்டன் ஓவர் பெற்று, 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, ஒரு வீரரை ஆட்டமிழக்கவும் செய்துள்ளார். அதுபோல, ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அணிக்காக பெற்றுத் தந்துள்ளார்.
பின்னர், மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணித் தலைவர் ஹபீபுர்ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார். தனது தலைமையில் கிடைக்கப்பெற்ற இந்த வெற்றிக்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், கடந்தாண்டு அரையிறுதியில் தோல்வியடைந்த பிறகு, இந்த சுற்றுப்போட்டி பருவத்தில் தமதணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஒற்றுமையுடனும், குழு முயற்சியுடனும் விளையாடி இந்த மகத்தான வெற்றியை ஈட்டித் தந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னணியாக இருந்து, அணி வீரர்களை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு போட்டியின்போதும் சிறப்பு உழைப்புகளை வழங்கி செயல்பட்ட தனதணி வீரர்களான முஷ்தாக், மக்பூல் (அணித் தலைவரின் சகோதரர்) உள்ளிட்டோருக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அணித் தலைவர்களாக இருந்த அனைவருக்கும், மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் நல விரும்பிகளுக்கும், இச்சுற்றுப்போட்டி முழுவதிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தகவல்:
ஹபீப்
அணி தலைவர்,
மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப். |