காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாகச் சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் சிலர் பேசிய பேச்சு ஆகிய சீர்கேடுகளை சரிசெய்து நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, காயல்பட்டினம் மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
02.07.2012 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், அவ்வமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி இதுகுறித்து அளித்துள்ள கோரிக்கை மனுவின் வாசகங்கள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கவும், விண்ணப்பங்கள் வேண்டியும் மனு அளித்து வருகின்றனர். அவற்றுக்கு 3, 4 மாதங்களாகியும் குறைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன. அரசுப் பணிகளும் மிகவும் கால தாமதமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் காலப்போக்கில் மறைந்து misplace ஆகிவிட்டது எனக்கூறி, மீண்டும் மனு அளிக்கும்படி வேண்டப்படுகிறது.
நிர்வாக சீர்கேட்டினை நிவர்த்தி செய்வதற்கும், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும், நிர்வாகத்தினை சீராக்க - திருச்செந்தூர் கோட்ட வட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) மூலம் விசாரணை மேற்கொண்டு, நிர்வாகத்தை சமச்சீர் செய்து ஆள்வதற்கு தங்களிடம் பணிவுடன் வேண்டுகின்றோம்.
மேலும் குடிநீர் வழங்கல் சரிவர பராமரிக்கப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் ஒரு சில விஷமிகள் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். பொதுமுக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தாங்கள் இது விஷயத்தில் சீரான நிர்வாகம் நடைபெறுவதற்கு, திருச்செந்தூர் கோட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டுகின்றோம்.
மேலும், உறுப்பினர்கள் இரண்டு நபர்கள் நகராட்சி நிர்வாகத்தில் ஊழலை ஊக்குவிக்கும் பொருட்டு, கலந்துரையாடிய சி.டி. (குறுந்தகடு) காயல்பட்டினத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது. இது விஷயத்திலும் தங்கள் நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்தி, நிர்வாகத்தை சீர்தூக்கி, ஆட்சியை சீராக்கித் தரும்படி மெத்த பணிவுடன் வேண்டுகிறோம். (Please refer www.kayalpatnam.com)
இவ்வாறு, மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி, மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். |