உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்தமாக இடம் வாங்க முயற்சி துவக்கப்பட்டுள்ளது. தகுந்த இடங்கள் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்பிற்குரிய காயல்பட்டினத்தைச் சார்ந்த சகோதர-சகோதரியருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய சமூக சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக!
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பாக, இறையருளால் நமது இக்ராஃ கல்விச் சங்கம் கடந்த 2005-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, இன்று வரை இயன்றளவுக்கு நகரில் கல்விச் சேவைகளை தொடராக செய்து வருகிறது.
*** ஏழை மாணவ-மாணவியருக்கு பட்டப்படிப்பு, தொழிற்கல்விக்கான கல்வி உதவித்தொகை...
*** தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு அவ்வப்போது மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி...
*** பிற அமைப்புகள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளை காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவ-மாணவியர் பெற்றிடுவதற்கு முறையான வழிகாட்டல்...
*** அரசுப் பொதுத் தேர்வுகளை மாணவ-மாணவியர் தயக்கமின்றி சந்தித்திட - உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கல்வி ஒளிபரப்பு...
*** ப்ளஸ் 2 தேர்வில் ஆண்டுதோறும் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவரை காயல்பட்டினம் வரவழைத்து, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி... அதையொட்டி நகர சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு...
இன்னும் பலப்பல கல்விச் சேவைகளை, உலக காயல் நல மன்றங்கள் மற்றும் நகரின் கல்வி ஆர்வலர்களின் மனப்பூர்வமான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் இறையருளால் இக்ராஃ சிறப்புற செய்து வருகிறது.
வருங்காலத்தில் பொறியியல்,மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி வழிகாட்டி மற்றும் அரசுப்பணி படிப்பு, ஆட்சிப்படிப்பு (IAS,IPS,IFS)-களுக்குத் தேவையான அனைத்துப் பாடப்புத்தகங்கள் மற்றும் பொது அறிவுப் புத்தகங்களுடன்கூடிய அறிவுக் களஞ்சிய நூலகம் (MEGA LIBRARY) -யையும் நிறுவ இக்ராஃ திட்டமிட்டுள்ளது.
அதுபோன்று> தற்போதைய காலத்தில் மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படும் வேலை வாய்ப்புப் பிரிவு (Employment Exchange) ஒன்றையும் முறையாக ஏற்படுத்தி வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை சேகரித்து - வழங்கி உதவிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்தனை காரியங்களும், இன்னும் பலவும் இன்றளவும் வாடகை கட்டிடத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. துவக்கமாக, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரிக்கு எதிரில், ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப் அவர்களுக்குச் சொந்தமான கட்டிடத்தில் இக்ராஃ இயங்கி வந்தது. அடுத்து, காயல்பட்டினம் அலியார் தெருவில், பொறியாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் இதுநாள் வரை இயங்கி வருகிறது. தற்போது வேறு சில தேவைகளை முன்னிறுத்தி தற்போது இக்ராஃ இயங்கி வரும் இடத்தை ஒப்படைக்குமாறு கட்டிட உரிமையாளர் தரப்பிலிருந்து வேண்டுகோள் பெறப்பட்டுள்ளது.
பல்வேறு தகவல்களைக் கொண்ட, பலவிதமான கோப்புகளடங்கிய இக்ராஃவின் உடமைகளை அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு மாற்றி எடுத்துச் செல்வதும், அனுதினமும் மக்கள் வந்துபோக வேண்டிய அவசியத்திலுள்ள இந்த அலுவலகத்தை அடிக்கடி இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல்களைக் கருத்திற்கொண்டும், இக்ராஃவை சொந்தக் கட்டிடத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை இன்ஷா அல்லாஹ் விரைந்து மேற்கொள்வதென - 21.06.2012 அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, தனது தலைமைப் பொறுப்புக் காலத்திலேயே - சொந்த இடத்தில் இக்ராஃவை இயங்கச் செய்திட அனைத்து முயற்சிகளும், அனைவர்களின் ஒத்துழைப்புகளுடன் மேற்கொள்ளப்படும் என இக்ராஃவின் புதிய தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது, இக்ராஃவிற்கென சொந்த இடம் பார்க்கும் முயற்சிகள் இறையருட்கொண்டு துவங்கப்பட்டுள்ளது. நியாயமான விலையிலோ, குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ - கல்வி ஆர்வலர்கள் இக்ராஃவின் தேவைக்கேற்ற நிலத்தைத் தந்துதவினால், காலங்காலமாக இன்ஷா அல்லாஹ் இக்ராஃ மூலம் பயன்பெறும் ஏழை மாணவ-மாணவியர் மற்றும் இதர கல்விப் பயன்களைப் பெற்றிடும் நகரின் அனைத்து மாணவ சமுதாயத்தின் துஆக்களைப் பெற்றோராக அவர்கள் திகழப்போவது நிச்சயம்.
அந்த அடிப்படையில், பின்வருமாறு பணிவான வேண்டுகோளை உங்கள் மேலான கவனத்திற்கு முன்வைக்கிறோம்.
அன்பானவர்களே! நமதூருக்குட்பட்ட பகுதியில், காலி நிலங்களோ, கலந்தாலோசனைக் கூட்டம், நேர்காணல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துமளவுக்கு நல்ல வீடுகளோ இருப்பதாக நீங்கள் அறிந்திருப்பின், இக்ராஃவின் +91 4639 285650 என்ற அலுவலக எண்ணிற்கோ அல்லது இக்ராஃவின்
தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் (கைபேசி எண் +91 99654 24518)
செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது (கைபேசி எண் +91 98655 09809)
பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் (கைபேசி எண் +91 94866 55338)
நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது (கைபேசி எண் +91 98653 46964)
மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது (கைபேசி எண் +91 97863 42923)
ஆகியோரில் ஒருவரை விரைந்து தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இக்ராஃவின் iqrakpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.
நம் நகரில் பல்வேறு பெருமக்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் இருந்தும் பயன்படுத்தப்படாமல் உள்ளது...
சொந்த நிலங்கள் உள்ளன...
நல்ல எண்ணம், சமூக சிந்தனை, பொதுநல ஆர்வம் கொண்டவர்களுக்கும் நமதூரில் பஞ்சமில்லை...
எனவே, எவ்வித மாச்சரியங்களுக்கும் இடமளிக்காமல் பொதுநலனை மட்டுமே முன்னிறுத்தி - ஜனநாயக அடிப்படையில் இறையருளால் இயங்கி வரும் நமது இக்ராஃ கல்விச் சங்கத்திற்குத் தேவைப்படும் தகுதியான இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ, இலவசமாகவோ - மலிவு விலையிலோ - நியாயமான விலையிலோ தந்துதவி, ஸதக்கத்துன் ஜாரியா எனும் நிலையான - நீடித்த நற்கூலிகளைப் பெற்றேகுமாறும், அவ்வாறு இடங்கள் உள்ளதாக அறிவோர் விரைந்து தகவல் தருமாறும் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |