சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 65ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 22.06.2012 வெள்ளிக்கிழமை மாலையில் புனித மக்காவில் வைத்து நடைப்பெற்றது. அதன் கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 65ஆவது செயற்குழு அமர்வு, 22.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில், இம்மன்றத்தின் மக்கா உறுப்பினர்களின் பத்தாண்டு கால எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் மக்காவில் தன் குடும்பத்துடன் வசிக்கும் இம் மன்றத்தின் செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் அவர்கள் இல்லத்தில் வைத்து முதன் முதலாக நடந்தேறியது. கூட்டத்திற்கு சகோ.எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர் அவர்கள் தலைமை தாங்க, சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் அவர்களின் தலைப்புதல்வன் எம்.ஐ. முஜாஹித் அலி இறைமறை ஓத, அமர்வு அமைதியாக ஆரம்பித்து பிறகு மஃரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்தது.
இவ்வமர்வின் தலைவர் சகோ.எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர் நல்ல பல கருத்துகளை உறுப்பினர்களுக்கு சுருக்கமான அறிவுரையாக தந்ததுடன், நாம் ஜித்தாவாசிகள் சில சிரமங்களை ஏற்றுக்கொண்டு மன்றக்கூட்டம் என்ற ஆவலுடன் இன்று மக்கா வந்தாலும், பல கூட்டங்களுக்கு தவறாது மக்காவிலிருந்து சிரமமின்றி வந்த இந்த உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது இவர்களின் இந்த ஆர்வம் மற்ற எல்லா உறுப்பினர்களுக்கும் வரவேண்டும். கூட்டம் நடப்பதை முன் கூட்டியே அறியத்தருவதால் நாம் இந்த நாளை இதற்கென்று பயன்படுத்திக் கொண்டு நாம் அனைவர்களும் வந்து கலந்துகொண்டால், நம்மை நாடும் பல பயனாளிகளுக்கும் ஊருக்கும் சேவைகளை தொடர்ந்து செய்திட பெரும் உதவியாக இருக்கும். என்று வேண்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வரவேற்புறையை சகோ. ஒய்.எம்.சாலிஹ் அவர்கள் நிகழ்த்தி நிறைவு செய்தார்.
மன்றசெயல்பாடுகள்:
மன்ற செயலாளர் சகோ. எம்.ஏ.செய்யத் இப்றாஹிம் அவர்கள் பேசியதில் செயற்குழுகூட்டத் தலைவர் கூறியது போல் அப்படி ஒன்றும் எங்களுக்கு பெரிய சிரமம் ஏற்பட்டதாக இதுவரை தெரிந்ததில்லை. நம் ஊருக்கும், நம்மக்களுக்கும் நல்ல பல சேவைகளை இம்மன்றத்தின் மூலமாக செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் மேலோங்கி நிற்பதால் சிரமங்கள் சிதைந்து போகின்றது. இருப்பினும் இத்துணை உறுப்பினர்களும் இங்கு வந்து கலந்து கொண்டமைக்கு உங்கள் அனைவர்களையும் வாழ்த்தி வரவேற்கின்றேன் என்று தொடர்ந்து நபிமொழிகளின் வரிகளை எடுத்தோதி தானங்களில் சிறந்தது ஏழை மக்களைத் தேடி அவர்களுக்கு ஈகை செய்வதுதான் பல தடவை பல கட்டங்களிலே சஹாபிகளுக்கு கண்மணி நபிகளார் எடுத்துரைத்தது இதுதான். எனவே நாம் போட்டிப்போட்டுக்கொண்டு ஒன்றுபட்டு ஊரின் ஏழை மக்களுக்கு பல சேவைகள் செய்திட வல்ல ரஹ்மான் நம்மை பணித்திடுவானாக! என்ற பிராத்தனையுடன் நிறைவு செய்தார்.
தொடர்ந்து மன்றத்தலைவர் சகோ. குளம். அஹமது முஹிய்யதீன் நாம் ஆற்றவேண்டிய பணிகளையும் இக்ராவின் தொய்வில்லா சேவைகளையும் பாராட்டிப் பேசியதோடு சந்தாவின் அவசியத்தையும் எடுத்துக்கூறி, இம்மன்றம் முழுக்க முழுக்க சந்தா நிதியைக் கொண்டே இதுவரை தொய்வில்லா பல சேவைகளைச் செய்துள்ளது என்பதனையும் நாம் நினைவில் எடுத்துக் கொண்டு, மேலும் விரிவாக செய்திட நம்முடன் வேலை செய்பவர்களுடன், நமக்கு அறிந்த நபர்களுடன் நம்மன்றத்தின் சேவைகளை எடுத்துரைத்து அவர்கள் தரும் ஜகாத் நிதியைக் கொண்டும் அதிகம் வழங்கிட நாம் ஆவன செய்ய வேண்டும் என்றும் பேசி நிறைவு செய்தார்.
செயற்குழு அறிக்கை:
சென்ற செயற்குழு கூட்டத்தின் அறிக்கை மற்றும் தீட்டிய தீர்மானங்களை தனக்கே உரிய அழங்கார பாணியில் வாசித்து அமர்ந்தார். மன்ற செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.செய்யது மீரான் அவர்கள்.
நிதி நிலை:
நிதி நிலை அறிக்கையை சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் கல்விக்கென ஒதுக்கிய பிறகு தற்போதைய இருப்பு, வரவேண்டிய சந்தாக்கள், போன்ற விபரங்களைப்பற்றி மிகத்துல்லியமாக எடுத்துரைத்தார்.
மருத்துவ உதவிகள்:
இம்மன்றத்திற்கு மருத்துவ உதவிகேட்டு வந்திருந்த விண்ணப்பங்களை மன்ற உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு பொறியாளர் சகோ.எஸ்.செய்யது பஷீர் அவர்கள் முன்னிலையில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட பின் விண்ணப்பங்களை முறைப்படுத்தி இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதல் மற்றும் ஜமாத் பறிந்துறையின்படி வந்த கடிதம் இவைகளில், அதிமுக்கியமானவைகளை மட்டும் ஏற்கப்பட்டு கர்பப்பை புற்று நோயால் அவதியுரும் ஒருவருக்கும், எலும்பு முறிவு அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்ட பிளேட்டை எடுக்கும் நபருக்கும், காலில் புண், ஆன்ஜியோகிராம், முகத்தாடை சரிசெய்தல், பக்கவாத நோயால் அவதியுரும் நபர் என ஆக ஏழு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்படடு அறிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பாராட்டு:
புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற அமெரிக்காவில் இருந்து தன் குடும்பத்துடன் வந்திருந்த காயல் சகோ. எஸ்.டி.எஸ்.சதக்தம்பி, தான் ஒரு பாடசாலையை உருவாக்கி அதனை நிர்வகித்து வருவதாகவும், அதனால் அங்கு ஏற்படும் சிரமங்களையும் எடுத்துக் கூறியதுடன், மன்ற உறுப்பினர் தொடுத்த வினாக்களுக்கும் நிறைவான பதில் தந்ததுடன் மன்றத்தின் செயல்பாடுகளையும், இங்கு நடந்தேறிய கூட்ட நிகழ்வுகளையும் கண்ணுற்ற அவர், இம்மன்றம் ஆற்றிவரும் நல்ல பணிகளை வெகுவாக பாராட்டி வாழ்த்தினார். மற்றும் அன்னாருடன் மக்கா வாழ் மன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்று மன்ற செயல்பாடுகளைக் கண்டு பாராட்டி மகுடம் சூட்டி மகிழ்ந்தனர். இவர்கள் யாவரும் இந்த செயற்குழுவில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து வாதங்கள், விவாதங்களுக்குப் பிறகு நம் காயல் நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுடன் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக தீட்டப்பட்டது.
தீர்மானங்கள்:
1. உலக காயல் நலமன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராவின் புதிய தலைமைக்கும், புதியதாக தங்களை இச்சங்கத்தில் இணைத்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கும், வாழ்நாள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், ஜித்தா காயல் நற்பணி மன்றம் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
2. இம்மன்றத்தின் 66ஆவது செயற்க்குழு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ரமழான், ஆகஸ்ட் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இப்தார் நிகழ்வுடன், ஆர்யாஸ் உணவகத்தில் வைத்து நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
பொறியாளர் சகோ.எஸ்.செய்யது பஷீர் அனுசரணையுடன் இரவு சிறப்பான சிற்றுண்டி உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, இறுதியாக சகோ.எம்.ஏ.சி.ஷா மீரான் சாகிபு தொடர்ந்து நன்றி நவில, பின் சகோ. பி.எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா 'துஆ' பிராத்தனையுடன் அன்றைய நிகழ்வுகள் சிறப்பாக இரவு 10:00 மணிக்கு நிறைவுப் பெற்றது. அல்ஹம்து லில்லாஹ். மக்கா வாழ் மன்ற உறுப்பினர்கள் இந்த செயற்க்குழு கூட்ட ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல்,
எஸ்.ஹெச்.அப்துல் காதர், ஜித்தா.
நிழற்படங்கள்,
ஹிஜாஸ் மைந்தன், புனித மக்கா.
|