சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வூட்டி, பாதுகாப்புணர்வுடன் அவர்களைத் திகழச் செய்திடும் நோக்கோடு, கத்தர் காயல் நல மன்றம், ரியாத் காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டியை நடத்தின.
01.07.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் - ஐசிஐசிஐ வங்கி முனையில் துவங்கி, நகரின் பல்வேறு வீதிகள் வழியாக கடற்கரையைச் சென்றடைந்தது.
போட்டியில் பங்கேற்க அழைப்பு:
முன்னதாக, இப்போட்டியில் கலந்துகொள்ள, Open To All முறையில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாரத்தான் போட்டி குறித்த தகவல்களடங்கிய பிரசுரம் காயல்பட்டினம் நகரின் மூன்று ஜும்ஆ பள்ளிகளிலும், ஆண்கள் பயிலும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வினியோகிக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் ஒருங்கிணைப்பு:
அதனடிப்படையில், 350 பேர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். 30.06.2012 அன்று இரவு 08.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அலுவலகத்தில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா தலைமையில் மாரத்தான் போட்டி ஏற்பாடுகள் மற்றும் விண்ணப்பங்கள் ஒருங்கிணைப்பிற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, கத்தர் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏஃபாஸுல் கரீம், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், ஐக்கிய விளையாட்டு சங்க பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஏ.எஸ்.புகாரீ, எம்.சதக், கலாமீ யாஸர், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இளைஞர் ஐக்கிய முன்னணி உறுப்பினர் உ.ம.ஷாஹுல் ஹமீத், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரடங்கிய குழு, மாரத்தான் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தோரின் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து பட்டியலிட்டது. அதனைத் தொடர்ந்து, மறுநாள் நடைபெறவிருக்கும் மாரத்தான் போட்டிக்கான ஏற்பாட்டுப் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
வீரர்கள் திரட்சி:
போட்டி நடைபெற்ற 01.07.2012 அன்று காலை 07.15 மணிக்கே போட்டியாளர்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு, பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தலைமையில் பங்கேற்பாளர் அடையாள எண் வழங்கப்பட்டது.
போட்டி துவக்கம்:
காலை 08.00 மணிக்கு மாரத்தான் போட்டி துவங்கியது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பச்சைக் கொடியசைக்க, போட்டியாளர்கள் உற்சாகத்துடன் ஓட்டத்தைத் துவக்கினர்.
ஐக்கிய விளையாட்டு சங்கம் - ஐசிஐசிஐ முனையிலிருந்து துவங்கிய போட்டியில், தைக்கா தெரு, காட்டு தைக்கா தெரு, சதுக்கைத் தெரு, நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெரு, சித்தன் தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, அப்பாபள்ளித் தெரு, சொளுக்கார் தெரு வழியாக, சுமார் 4 கிலோ மீட்டர் பந்தய தூரத்தைக் கடந்து சென்ற மாரத்தான் பங்கேற்பாளர்கள், காலை 08.30 மணியளவில் கடற்கரை நுழைவாயிலை முழுமையாக வந்தடைந்தனர்.
அடையாளச் சான்று:
போட்டியின் அனைத்து வழித்தடத்தையும் போட்டியாளர்கள் முறையாகக் கடந்துள்ளதை உறுதி செய்திட, முஹ்யித்தீன் பள்ளியிலிருந்து பெரிய சதுக்கை செல்லும் சாலை முனை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானம் மற்றும் ரெட் ஸ்டார் சங்கம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி (செக் பாய்ண்ட்) அமைக்கப்பட்டு, அங்கிருந்து போட்டியாளர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாணவர்களைத் தவிர...
இப்போட்டியில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். அவர்களைத் தவிர, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உள்ளிட்ட பொதுமக்களும் பங்கேற்றனர். அவர்களுள் நகர்மன்ற உறுப்பினர் அஜ்வாத் போட்டி தூரத்தை முழுமையாக நிறைவு செய்தார்.
பரிசளிப்பு விழா:
போட்டியைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் தலைமை தாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஜியாவுத்தீன், கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி பரிசளிப்பு விழாவைத் துவக்கி வைத்தார். பல்லாக் அப்துல் காதிர் நெய்னா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, விழா தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, விழாவில் தலைமை - முன்னிலை வகித்தோர், மாரத்தான் போட்டியில் 4 முதல் 10 இடங்களுக்குள் வந்த வீரர்களுக்கு ரூ.500 பணப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கினர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் முதலிடம்:
போட்டி தூரத்தை 12 நிமிடங்களில் ஓடிக் கடந்து, காயல்பட்டினம் எல்.கே,மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.டி.அஹ்மத் பஸ்ஸாம் முதலிடத்தைப் பெற்றார். அவருக்கு எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தங்கப்பதக்கத்தை அணிவிக்க, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ரூ.3,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.
இரண்டாமிடத்தை, காயல்பட்டினம் இரத்தினபுரியைச் சேர்ந்த எஸ்.விவேக் என்ற மாணவரும், மூன்றாமிடத்தை முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் எம்.ஏ.அப்துல் லத்தீஃப் என்ற மாணவரும் பெற்றனர்.
இவர்களுக்கு முறையே ரூ.2000, ரூ.1000 பணப்பரிசும், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. காலைப் பொழுதின் துவக்கத்தில் திடீரென பல வீதிகளின் வழியாக வீரர்கள் ஓடிச் சென்றதைப் பார்த்து, நகரமே பரபரப்பிற்குள்ளானது. பின்னர், ஆர்வப்பட்ட பல பொதுமக்கள் கடற்கரையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
50 இடங்களைப் பெற்றோருக்கு பரிசுகள்...
11 முதல் 50 இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு 01.07.2012 அன்று மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தலா ரூ.100 பணப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் 50 இடங்களைப் பெற்ற வீரர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ், அதன் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி பல்லாக் இல்யாஸ், கேப்டன் ஹபீப, இலங்கை காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் மூத்த ஆலோசகர் நோனா மானாத்தம்பி ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
முதலிடம் பெற்ற மாணவருக்கு சிறப்புப் பரிசு:
பின்னர், மாரத்தான் போட்டியில் முதலிடம் வென்ற மாணவர் எஸ்.டி.அஹ்மத் பஸ்ஸாமுக்கு, 26.03.2012 அன்று செஷல்ஸ் சாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், 42.165 கிலோ மீட்டர் தூரத்தை 03:48:12 மணி நேரத்தில் கடந்து சென்று மூன்றாமிடத்தைப் பெற்ற - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பதுர் சுலைமான் சார்பில் ரூ.1,000 பணப்பரிசு அளிக்கப்பட்டது. அப்பரிசை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, கத்தர் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், அதன் செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ் ஆகியோரிணைந்து, அப்பரிசை சாதனை வீரருக்கு வழங்கினர்.
போட்டி வழித்தடத்தை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்:
இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 261 பேரில், 225 பேர் போட்டி தூரத்தை முழுமையாக நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுள், ஏற்கனவே பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்ற முதல் 50 பேரை தவிர்த்து எஞ்சிய அனைவருக்கும் 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள்:
*** போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஓடும்போது விபத்துகளெதுவும் நடக்காதவண்ணம், போட்டி வழித்தடத்தில் முற்கூட்டியே ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் பாதைகளை சரிசெய்திருந்தனர்.
*** முதலுதவிக்காக காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) வீரர்களின் முன்புறத்திலும், கடைசி வீரருக்கு அடுத்தும் தொடர்ந்து சென்றன.
*** போட்டி தூரத்தை நிறைவு செய்த மாணவர்கள் சிலர் களைப்பின் காரணமாக கடற்கரையில் சோர்வுற்றனர். அவர்களுக்கு, டாக்டர் எஸ்.ஏ.கே.நூருத்தீன், கே.எம்.டி. மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் ஃபாஸீ ஆகியோர் முதலுதவிகளைச் செய்தனர்.
*** ஆர்வ மிகுதியால், 6 வயதுக்கும் குறைவான பல சிறுவர்களும் போட்டியில் பங்கேற்று, முழு வழித்தடத்தையும் கடந்து வந்தது பார்வையாளர்கள் பலரின் கண்களை பெரிதும் ஈரமாக்கின.
*** முன்னதாக, சிறுமியர் சிலரும் இப்போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்க வந்தனர். எனினும், பெண்களைப் பங்கேற்கச் செய்வதில்லை என்ற ஏற்பாட்டுக் குழுவின் தீர்மானம் அவர்களின் ஆர்வம் குன்றாவண்ணம் விளக்கப்பட்டு, அவர்கள் தமதில்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படங்களில் உதவி:
K.ஃபைஸல் ரஹ்மான் (கத்தார்)
மற்றும்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ (காயல்பட்டினம்). |