காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் வெள்ளி விழா, பட்டமளிப்பு விழா, மாணவியர் விடுதி திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள், ஜூன் 29 அன்று துவங்கி, ஜூலை 01 வரை மூன்று தினங்கள் நடைபெறுகிறது.
இதற்கான கலந்தாலோசனைக் கூட்டம், 25.06.2012 திங்கட்கிழமை இரவு 07.30 மணிக்கு, கல்லூரி அமைந்துள்ள, மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் நடைபெற்றது. எம்.எம்.அஹ்மத் ஃபுஆத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அறிமுகவுரையாற்றினார்.
கல்லூரியிலிருந்து இதுவரை 486 மாணவியர் “ஆலிமா முஅஸ்கரிய்யா” ஸனது (சான்றிதழ்) பெற்று வெளியேறியுள்ளதாகவும், 76 மாணவியர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து “ஹாஃபிழா” ஸனது பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், கல்லூரி துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, நடப்பாண்டு வெள்ளி விழாவாக கொண்டாடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர், மூன்று நாள் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான பொறுப்புகள் கூட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
நிறைவாக, கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
வெள்ளி விழா குறித்து, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெள்ளி விழா, இம்மாதம் 29, 30 மற்றும் ஜூலை 01 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் கீழ்ப்பகுதி திறந்தவெளி மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு நாட்கள் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பெண்கள் மட்டுமே பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரி மாணவியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள், சன்மார்க்கப் போட்டிகள் நடைபெறுகின்றன. காயல்பட்டினம் நகரின் முக்கிய பெண்மணிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்கின்றனர். 30.06.2012 சனிக்கிழமை மாலை 04.45 மணிக்கு நடைபெறும் 5ஆவது அமர்வு நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்குகிறார்.
ஜூலை 01 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சிகள் ஆண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மார்க்க அறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் மற்றும் சிறப்புரைகள் இடம்பெறுகின்றன.
அன்றிரவு அமர்வில், கல்லூரியின் வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இலங்கை மேல் மாகாண கவர்னர் அஸ்ஸெய்யித் அலவி மவ்லானா மலரை வெளியிட, நகரப் பிரமுகர்கள் அதனைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர், கல்லூரியில் பயில விரும்பும் வெளியூர் மாணவியர் வசதிக்காக, புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியை, இலங்கை மேல் மாகாண கவர்னரின் தனிச் செயலாளர் அஸ்ஸெய்யித் அஹ்மத் நகீப் மவ்லானா திறந்து வைக்கிறார்.
பின்னர், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, “ஆலிமா முஅஸ்கரிய்யா” ஸனது (சான்றிதழ்) பெறும் மாணவியரின் பெயர்களை வாசிக்க, பெண்கள் பகுதியிலிருந்து ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி, ஹாஜ்ஜா எஸ்.கே.பால் ஆமினா, ஹாஜ்ஜா எம்.டி.சாரா உம்மா ஆகியோர் மாணவியருக்கு சான்றிதழ்களை (ஸனது) வழங்குகின்றனர்.
52 மாணவியர் “ஆலிமா முஅஸ்கரிய்யா” ஸனதும், 6 மாணவியர் “ஹாஃபிழா” ஸனதும் பெறவுள்ளனர். நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:-
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எம்.எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையில் ஏற்பாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.
இவ்வாறு, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |