அண்மைக் காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது..
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று (26.06.2012) மதியம் 03.30 மணிக்கு நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகநாதன் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து கருத்துக்களை வழங்கினார். பின்னர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேரணியைத் துவக்கி வைத்தார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் புறப்பட்ட இப்பேரணியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு பள்ளி மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
வட்டார சுகாதார ஆய்வாளர்களான சோமசுந்தரம், ஆனந்தராஜ், செவிலியர் கஸ்தூரி, கோமதி, அழகு மீனாட்சி, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோர் இப்பேரணியில் உடன் சென்றனர்.
|