சஊதி அரபிய்யா - புனித மக்கா நகரிலுள்ள உம்முல் குரா பல்கலைக் கழக பேராசிரியர், மக்கா ஹரம் ஷரீஃப் முஃப்தீ ஆகியோர் காயல்பட்டினம் வருகை தந்து பல்வேறு நிறுவனங்களைப் பார்வையிட்டனர். விபரம் பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - புனித மக்கா நகரில் அமைந்துள்ள உம்முல் குரா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அஷ்ஷெய்க் ஹாஷிம் அலீ, புனித மக்கா ஹரம் ஷரீஃப் முஃப்தீ அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் லத்தீஃப் ஆகியோர், 21.06.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினம் வருகை தந்தனர்.
காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியைப் பார்வையிட்ட அவர்கள், கல்லூரியின் பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர், தாமாக முன்வந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ளோருக்கு வழிகாட்டும் நோக்குடனும், இஸ்லாமிய மார்க்க செய்திகளை தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்குடனும் காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டருக்குச் சென்று, அதன் பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு, அங்கு பயின்று வரும் புதிய முஸ்லிம்களோடு கலந்துரையாடினர்.
பின்னர், அன்றிரவு 07.15 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் உரையாற்றினர். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ அந்த உரைகளை தமிழாக்கம் செய்தார்.
அனைத்து நிகழ்வுகளிலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், நிர்வாகிகளான எஸ்.இப்னு சஊத், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், தஃவா சென்டர் நிர்வாகி ஹாஜி ஆர்.அல்தாஃப், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், பொறியாளர் அப்துல்லாஹ் மரைக்கார், ஹாஜி எம்.ஏ.இஸ்ஸத்தீன், ஹாஜி முஹம்மத் ஆதம் சுல்தான், ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார், ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |