திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் 89ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர திமுக கிளை சார்பில், 22.06.2012 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக நகர அவைத்தலைவர் ஜே.எம்.கிதுரு முஹம்மது தலைமை தாங்கினார். நகர திமுக துணைச் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், எஸ்.இ.முஹம்மது அலி ஸாஹிப் (டி.எம்.) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் வரவேற்புரையாற்றினார். காயல்பட்டினம் நகராட்சியின் செயற்பாடுகளை விமர்சித்து அவரது உரை அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து, திமுக தலைமைக் கழக பேச்சாளர் பவானி கண்ணன் சிறப்புரையாற்றினார்.
கடந்த திமுக ஆட்சியின் சிறப்புகள், தற்போதைய அதிமுக அரசின் குறைகள் ஆகியவற்றுக்கு விளக்கம் என்ற அடிப்படையில் அவரது உரை அமைந்திருந்தது.
ஆர்.எஸ்.கோபால் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், நகர திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில், மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
|