தமிழ்நாடு வக்ஃப் வாரியம் - கடந்த ஓர் ஆண்டாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள் தேர்வினை விரைவில் நடத்திட ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் பிரிவு 14-இன் கீழ் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களிலிருந்து தனித்தனியாக உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. பார் கவுன்சில் உறுப்பினர்கள்
மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் 26.6.12 அன்று தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்டல கண்காணிப்பாளர்கள் (வக்ஃப்)
அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் வெளியிடப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அல்லது சேர்க்கப்படாதது தொடர்பாக யாருக்காவது ஆட்சேபணையிருந்தால் அவர்கள் தங்களின் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகளை ஒரு வார காலத்திற்குள் (3.7.2012 மாலை 5.30 மணிக்குள்) தேர்தல் அதிகாரிக்குத் தெரிவிக்குமாறு பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு பெறப்படும் உரிமைக் கோரல்கள் மற்றும் மறுப்புகள் மீது தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவு இறுதியானதாகும்.
2. தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அதிகாரி, தேர்தல் அறிவிப்பையும் தனியாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுவார்.
3. தேர்தல் விதிகள் தபால் மூலம் வாக்கை பதிவு செய்யவும் வகை செய்கின்றன. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய வாக்குச் சீட்டை கோரி, தேர்தல்
நடத்தும் அலுவலருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்வதற்கு அவர்களின் கையொப்பங்கள், சம்மந்தப்பட்ட வக்ஃப் கண்காணிப்பாளர்களால் மேலொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். இந்த
விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு 02.08.2012-க்கு முன்னர் வந்து சேர வேண்டும்.
தேர்தல் விதிகள் ஒவ்வொரு மண்டல கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |