காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தன்னிலை விளக்கம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் குறித்த விமர்சனங்களுக்கு - நகர்மன்றத் தலைவர் பதில் அளித்திருந்தார். நகர்மன்றத் தலைவரின் பதிலுக்கு - உறுப்பினர் லுக்மான் மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மரியாதைக்குரிய நகர்மன்றத் தலைவி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 16.06.2012 அன்று நான் வெளியிட்ட தன்னிலை விளக்கத்திற்கு தாங்க்ள 22.06.2012 அன்று என் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீண்ட விளக்கம் அளித்திருந்தீர்கள். இந்த அறிக்கை யுத்தம் தொடர வேண்டாம் என்று அன்பர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருந்தாலும் தாங்கள் என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தால் தான் நடுநிலையான மக்களுக்கு உண்மை தெரியவரும் என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட விளக்கத்தை தருகிறேன்.
1. அதிகாரிகளின் செயல்பாடு குறித்து:
தலைவி அவர்களே, தங்களிடம் ஒரு அலுவலரின் பெயரைச் சொல்லி அவர் லஞ்சம் வாங்கியதை ஆதாரத்துடன் சொன்ன பிறகும,; அவரை அழைத்து குறைந்த பட்சம் எச்சரிக்கை கூட செய்யவில்லையே ஏன்? இது தங்கள் பணியில் அலட்சியத்தைக் காட்டவில்லையா?
முன்னால் ஆணையர் (பொறுப்பு) சுப்புலெட்சுமி அவர்களை மாற்ற ஏற்பாடு செய்ததாக சொல்லும் தாங்கள், நேர்மையான அதிகாரியான சக்திகுமார் அவர்களும் அலுவலர் அஜித் குமார் அவர்களும் மற்றறாலாகி செல்லும் போது அமைதி காத்தது ஏன்? தாங்கள் நினைத்தால் உயர் அதிகாரிகளிடம் சொல்லி அவர்களை இங்கேயே பணியைத் தொடர செய்திருக்க முடியாதா? விளைவு, அலுவலர்கள்; பற்றாக்குறை.
2. உறுப்பினர்களுடன் பழகியது குறித்து :
தலைவி அவர்களே,
நீங்கள் உறுப்பினர்கள் மீது மன்றக் கூட்டத்திலேயே கடுஞ்சொற்களை உபயோகித்தத்தற்கும் பிறகு வருத்தம் தெரிவித்தற்கும் அங்கு இருந்த அனைவருமே சாட்சி ஆவார்களே!
உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பெற்ற பிறகு எல்லா உறுப்பினர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன், வேண்டுமானால் தனித்தனியாக பேசத்தயார் என்று கூறினீர்கள். இப்போது வசதியாக ஒன்றாக அமர்ந்து பேச மாட்டேன் என்று சொன்னதை மறைத்து விட்டு கூறுகிறீர்களே ஏன்? தனித்தனியாக அழைத்து பேசுவது தான் TEAM WORK ஆகுமோ? ஏன் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி.
இந்த சந்திப்பின் போது கவுன்சிலர்கள் எல்லோர்களும் லஞ்சம் வாங்க முடியாமல் போனதால் தான் எல்லோர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள் என்று ஆவேசமாக ஒட்டுமொத்தமாக எல்லோர்கள் மீதும் பழி சுமத்தினீர்களே? இது உண்மை தானா? என்று உங்கள் மனசாட்சிக்கும,; இறைவனுக்கும் நன்கு தெரியும் தானே?
3. தன்னிச்சையாக முடிவெடுப்பதாக விமர்சனம் :
தலைவி அவர்களே,
நான் எனது அறிக்கையில் கூறாததை நீங்களாகவே கேள்வி எழுப்பி பதில் சொல்லியிருக்கிறீர்கள். நான் இது வரை ஒரே ஒரு கூட்டத் தீர்மானத்தை எழுதும்போது மட்டும் தான் தங்களுடன் உடன் இருந்திருக்கின்றேன். ஆனால் இதுவரை 7 கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
2-வது கூட்டத்தில், 5-வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர் அவர்கள் முன்வைத்த பொருளான, உறுப்பினர்கள் சார்பாக மற்றவர்கள் செயல்படக் கூடாது என்ற பிரச்சனைக்கு மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மினிட் புக்கில் தீர்மானம் எழுதியிருக்கிறீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது என்பது தங்களுக்கு தெரியாதா?
4. துணைக் குழுக்கள் அமைத்திட முயற்சி :
தலைவி அவர்களே,
துணைக்குழுக்கான ஆலோசனைக் கூட்டத்தை 12-வது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள் வீட்டில் நடத்த தலைவி ஆகிய நீங்களும் சேர்ந்து தான் ஆர்வத்துடன் முடிவெடுத்து விட்டு, மற்றவர்கள் கூறினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இப்படி முடிவெடுத்த மறுநாள், தலைவி ஆகிய நீங்கள் எனக்கு போன் செய்து சுகு வீட்டிற்கு வர முடியாது, உங்கள் வீட்டில் நடத்தலாம் என்றீர்கள். அதற்கு நான், உங்கள் வீட்டிற்கு வரமாட்டோம், எங்கள் வீட்டில் கூட்டத்தை நடத்துவோம் என்று சுகு அவர்களிடம் தடாலடியாக என்னால் சொல்ல இயலாது. வேண்டுமானால் நகர்மன்றத்தில் நடத்தலாம் என்று கூறி அதன்படி நடந்தது.
அப்படி குழுக்கள் அமைப்பது பற்றி ஆலோசனையிலும் கூட, குழுக்கள் அமைத்தாலும் நான் சொல்வதுபடி தான் முடிவெடுக்க வேண்டும். அந்த குழுக்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று TEAM WORK முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள். இப்போது உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்.
5. மக்கள் குறைதீர் கூட்டம் :
தலைவி அவர்களே,
மக்கள் குறைதீர் கூட்டம் அவசியம் இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதைப் பற்றி ஆராயத்தான் சொன்னேன். சுமார் 90% மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பது தான் உண்மை நிலை. அதனால் தான் ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்திற்கு நான் வரவில்லை என்றேன்.
மாறாக மக்கள் குறைதீர்க் கூட்டங்கள் அவசியம் இல்லை என்று நான் கூறியதாக பச்சையாக பொய்யுரைக்கிறீர்கள்.
6. உறுப்பினர்களின் ஆலோசனைகளை மதிப்பதில்லை :
தலைவி அவர்களே,
தெரு விளக்கு பராமரிப்பதில் மின்வாரிய அலுவலகம் அலட்சியம் காட்டுவதால் பல விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாத நிலையில் உள்ளதால் (சில உறுப்பினர்கள் அல்ல), இரு உறுப்பினர்களைத் தவிர மற்ற எல்லா உறுப்பினர்களும் தனியாரிடம் பொறுப்பை வழங்கலாம் என்ற கூறியதின் அடிப்படையில் தங்களின் வேண்டுகோளின் பேரில் தான் துணைத்தலைவர் அவர்களும், சுகு அவர்களும், நானும் நாகர்கோவில் சென்று அங்கு நடைமுறையில் இருக்கும், தெரு விளக்கு தனியார் பராமரிப்பு ஒப்பந்த விபரம் நகல்கள் அனைத்தையும் ஜனவரி மாதம் கொண்டு வந்து கொடுத்தோம்.
அதன்பிறகும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஒரு சில தனி நபர்கள் கூறிய ஆலோசனையின்படி LED விளக்குகளை நாம் வாங்கி பொறுத்தலாம். தனியார் வசம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றே கூறி வந்தீர்கள். இப்போது பிரச்சனை அதிகமான போது தான் தனியாருக்கு வழங்குவது பற்றிய விசாரணையில் ஆர்வம் காட்டுகிறீர்கள். இந்த முயற்சியை ஜனவரி மாதமே எடுத்திருந்தால் இப்போது பிரச்சனை தீர்ந்திருக்கும்.
நான் தலைவியாகிய தங்களுக்கு மதிப்பு அளிக்கும் நோக்கத்தில் தான் மின்வாரிய பொறியாளரை நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு அழைத்து பேசுங்கள் என்றேன்.
சுனாமி குடியிருப்பு விஷயமாக ஐக்கிய பேரவைக்கு சென்று பேசலாம். வாருங்கள் என்று நான் கூறிய போது நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவி. அவர்கள் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்ற உங்களுக்கு மின்வாரிய பொறியாளரை சந்திக்கப் போகும் போது மட்டும் நீங்கள் உயர்ந்த பதவியில் உள்ள தலைவி என்ற நிலை மறந்து விட்டதோ? அல்லது மி.வா.பொறியாளரை விட ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தகுதியில் குறைவானவர்கள் என்ற நினைப்பா?
பெண் கவுன்சிலர்கள் உட்பட ஒரு சில கவுன்சிலர்களிடம் மின்வாரிய ஊழியர்கள் சிலர் மிகவும் தன்மையற்ற முறையில் பேசியதால் தான,; நான் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் யாரிடமும் நான் இதுவரை அவர்களைப் பற்றி, புகார் கொடுக்கவே இல்லை. என் புகாரினால் தான் அவர்கள் நகராட்சிக்கு வர மறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவர்கள் வர மறுத்த பிறகுதான் நான் புகார் கொடுக்கவே முற்பட்டேன். இருந்தாலும் புகார் கொடுக்கவில்லை.
7. அப்பட்டமான பொய் :
தலைவி அவர்களே,
சென்னை செல்லும்போது பயணத்திற்கு டிக்கட் எடுக்கும் வேலைக்கான பொறுப்பை யாராவது ஒருவர் மேற்கொள்வது எனவும், செலவுகள் அனைத்தையும் வருகின்றவர்கள் பகிர்ந்து கொள்வது என்றும், ஆரம்பத்திலேயே நீங்கள் உட்பட எல்லோர்களும் சேர்ந்து முடிவு செய்து, அந்த பொறுப்பை சுகு அவர்களிடம் ஒப்படைத்தோம். அதன்படி அவர் தான் டிக்கட் புக் செய்தார். அதன் பிறகு அதற்கான தொகை அவரிடம் கொடுக்கப்பட்டது. நீங்கள் சொல்வதுபோல் வேண்டாம் என்று தடுத்திருந்தால் வேறு யாராவது அல்லவா டிக்கட் எடுத்திருக்க வேண்டும். இதற்கு எல்லா உறுப்பினர்களும் சாட்சி.
மேலும் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், ஒர் அப்பட்டமான, பொய்யான குற்றச்சாட்டை நான் வேறு ஒன்றுக்கு கூறியதை சென்னை செல்லும் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு பேசுகிறீர்கள்.
அது என்னவென்றால் பதவியேற்ற புதிதில் தலைவி உட்பட எல்லா உறுப்பினர்களுக்கும் T.Nagar LKS டைரியும், காலண்டரும், துணைத் தலைவர் அவர்களால் அன்பளிப்பாக தரப்பட்டது.
இதைப் பற்றி பேசும்போது தான் இப்படிப்பட்ட அன்பளிப்புகள் மார்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது தான், இது தவறில்லை என்று கருத்து கூறினேன். இதை அப்படியே உல்டாவாக மாற்றி, சென்னை செல்லும் நிகழ்ச்சியோடு பொறுத்துகிறீர்கள்.
அது சரி, அந்த டைரியை நீங்களும் பெற்றுக் கொண்டீர்களே அப்போது அதில் சென்னை தொழிலதிபரின் பணம் இருக்கிறது என்று தங்களுக்குத் தெரியாதா?
8. மீன் சந்தை குறித்து :
தலைவி அவர்களே,
மீன் சந்தை பிரச்சனையில் கூட இப்போது பேச வேண்டாம், இன்றும் நாட்கள் இருக்கிறது பேச்சு வார்த்தையை ஒத்திப் போடலாம் என்று நீங்கள் சொன்னபோது, தங்களிடம் எதையும் ஒத்திப்போடாதீர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயலுவோம் என்றேன். அதை வசதியாக மறைத்து விட்டு எதற்கெடுத்தாலும் மக்கள் மக்கள் என்று கூறாதீர்கள் என்று வேறு ஒரு சம்பவத்தின் போது, இன்னொரு உறுப்பினர் சொன்ன வார்த்தையை நான் சொன்னது போல் ஜோடிக்கிறீர்கள்.
பொதுநல அமைப்புகள், பொது நல அமைப்புகள் என்று அங்கலாய்க்கிறாரே ஐக்கிய பேரவை என்ற பொதுநல அமைப்பு ஒன்று இருப்பது இவருக்கு தெரியாதா? என்றைக்காவது எந்த பிரச்சனைக்காவது ஐக்கிய பேரவையை இவர் அழைத்திருக்கிறாரா? ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி.
TWAD குழு நகராட்சிக்கு வந்தபோது, கவுன்சிலர்களுடன் எங்கள் கோமான் தெருவைச் சார்ந்த 2 நபர்கள் இருந்தததை 13- வது வார்டு கவுன்சிலர் சம்சுதீன் அவர்கள் என்னிடம் ஆட்சேபம் தெரிவித்து அவர்களை வெளியே போகச் சொல்லுமாறு சொன்னபோது, அதை நான் சொல்ல முடியாது, தலைவி அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன். அதன் பிறகு தலைவி அவர்களிடம் கவுன்சிலர்களுடன் TWAD குழு மீட்டிங் என்று சொல்லி விட்டு, எங்களுக்கு தெரிவிக்காமலே தனி நபர்களை அழைப்பதை ஆட்சேபித்தது உண்மை. ஆனால் எங்களுக்கு சமமாக எப்படி அவர்களை உட்காரச் சொல்வீர்கள் என்று நான் கூறவே இல்லை. நான் சொல்லாத வார்த்தையை சொல்லியதாக கூறி எங்கள் கோமான் ஜமாத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்ள நினைக்கிறீர்கள்.
தலைவி அவர்களே, எங்கள் கோமான் ஜமாஅத்தில் எங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் உங்களைப் போன்ற மூன்றாம் நபர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி ஒரு போதும் நாங்கள் பிரிந்து விட மாட்டோம். எனவே அந்த முயற்சியை கைவிட்டு விடுங்கள்.
நகராட்சி தலைவருக்கு வாகனம் ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் கேட்டது உண்மை. ஆனால் அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்வது தான் பொய். அப்படி விருப்பம் இல்லாமலா எனக்கு 600 ரூபாய் படி வேண்டாம். கார் வாங்கி தாருங்கள் என்று நகர்மன்றக் கூட்டத்திலே எழுந்து நின்று ஆர்வமாக கூறினீர்கள்.
வரவு செலவு கணக்குகளை நகர்மன்றக் கூட்டத்தில் விவாதித்தால் தான் மினிட் புக்கில் ஏற்ற முடியும் என்ற காரணத்தினால்தான் Unofficial கூட்டம் வேண்டாம் என்கிறோம்.
வெளியூர் ஒப்பந்தக்காரர்கள் பதிவு செய்வதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. IUDM திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை செலவழிக்கவில்லை என்றால் அது நகராட்சிக்கு மிச்சமாகாது. அரசுக்குத்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற விஷயம் தெரியாமல் நகராட்சிக்கு 12 லட்சம் மிச்சம் பிடித்து கொடுத்ததாக சொல்கிறீர்கள்.
9. முன்மாதிரியான நகராட்சி :
தலைவி அவர்களே,
ஊருக்கு நல்லது செய்ய எல்லா பொது நல அமைப்புகளுடன் (ஐக்கிய பேரவை தவிர, ஏனென்றால் அவர்கள் ஊருக்கு கெடுதி செய்ய நினைப்பவர்கள்?) ஆலோசித்து நகருக்கு தேவையான நலத்திட்டங்கள் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று நான், நான் என்று தன் புராணம் பாடாதீர்கள்.
அப்படி என்றால் உறுப்பினர்கள் யாரும் எந்த முயற்சியும் செய்வதில்லையா? உறுப்பினர்களான நாங்களும் எங்களால் ஆன முயற்சிகளை செய்யத்தான் செய்கிறோம். ஆனால் நாங்கள் கேமராமேன் துணையுடன் செல்லாததால் அது வெளியே தெரிவதில்லை.
குறுக்குவழியில் செல்வோருக்கோ, லஞ்சம் வாங்க முனைவோருக்கோ நீங்களென்ன, நாங்களும் தான் துணை போக மாட்டோம். அது அதிகாரிகளாக இருந்தாலும் சரி நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி நகர்மன்றத் தலைவியாக இருந்தாலும் சரி.
இறுதியாக உங்களைப்போல் தான் நாங்களும் கூறுகிறோம். உறுப்பினர்களின் உதவியோடு ஒன்றிணைந்து செயல்படுவோம், வாருங்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உறுப்பினர்கள் ஒன்றிணை வேண்டாம். தனித்தனியாக என்னிடம் ஆலோசனை கூறுங்கள் என்கிறீர்கள்.
தலைவி அவர்களே! இன்னும் காலங்கள் இருக்கிறது. உறுப்பினர்களை அரவணைத்து அவர்களும் உங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்று மதித்து, அவர்களின் நல்ல ஆலோசனைகளை ஏற்று கூட்டாக செயல்பட்டு நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முன்வாருங்கள்.
இறுதியாக, ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நாம் யாரை ஆதரிக்கிறாமோ அவர்களைத் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். யாரை எதிர்க்கிறாமோ அவர்களைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். நாம் ஆதரிப்பவர்களிடம் குறை கண்டு அவர்களை எதிர்த்தால் மக்கள் நமக்கு பல பட்டங்களைச் சூட்டத் தயாராக இருக்கிறீர்கள்.
அவர் அவர்கள் செயல்களுக்கு அவர் அவர்களே பொறுப்பாளி ஆவார்கள். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
வஸ்ஸலாம்.
இவண்,
A.லுக்மான்
(1-வது வார்டு உறுப்பினர்)
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |