அண்மைக் காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது..
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று (26.06.2012) மாலை 04.00 மணியளவில் நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோர், மாணவியருக்கு - வீடுகளில் சுகாதாரத்தைப் பேணுவது குறித்து அறிவுரை வழங்கினர்.
சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்குமார், மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வூட்டி பேசினார்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் ஆசிரியை பேபி லதா உறுதிமொழி வாசகங்களை முன்மொழிய, மாணவியர் அதனை வழிமொழிந்தனர்.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி - டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்களடங்கிய பிரசுரங்களை மாணவியருக்கு வினியோகித்தார்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றி, பேரணியைத் துவக்கி வைத்தார்.
பள்ளி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் புறப்பட்ட இப்பேரணியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு பள்ளி மாணவியர் சுகாதார விழிப்புணர்வூட்டும் முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்களான பொம்மையா, சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள்எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், இ.எம்.சாமி ஆகியோர் இப்பேரணியில் உடன் சென்றனர்.
|