இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் மேடைப் பேச்சு பயிற்சி, இம்மாதம் 26ஆம் தேதி முதல் துவக்கப்படவுள்ளது. இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர உறுப்பினர்கள் மற்றும் மேடைகளில் பேச ஆர்வப்படும் பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்குடன், கடந்த காலங்களில் காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் கிளை சார்பில் சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் சொற்பயிற்சி மன்றம் நடத்தப்பட்டு வந்தது. சொந்த அலுவலகம் என்று ஒன்று இல்லாதிருந்த காரணத்தால், பின்னர் அது இடைநின்று போனது.
இந்நிலையில், தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைக்கு சொந்த அலுவலகம் அமைந்துள்ளதையடுத்து, “சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை”யை மீண்டும் துவக்குவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30 மணிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான “தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸில்” கட்டிடத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் உரையாற்றினார்.
இடைநின்று போன “சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை”யை நகர காயிதேமில்லத் பேரவை சார்பில், மீண்டும் மாதமிருமுறை நடத்திடவும், அதில் நகர முஸ்லிம் லீக் மாணவரணியினர் மற்றும் மேடைப் பேச்சுக்கான பயிற்சி பெற ஆர்வப்படும் நகர பொதுமக்களைக் கலந்துகொள்ளச் செய்யவும், தொடர்ந்து ஆறு வகுப்புகளில் பேச்சுப் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும், ஒரு பிரிவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், அடுத்த பிரிவுக்கு பயிற்சியளிக்கலாம் என்றும் ஆர்வம் தெரிவித்தார்.
பின்னர், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் மாதமிருமுறை சொற்பயிற்சி மன்றத்தை நடத்திடவும், முதல் சொற்பயிற்சி மன்றத்தை இம்மாதம் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் மற்றும் அனைத்தணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |