காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தன்னிலை விளக்கம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்றிருந்த - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் குறித்த விமர்சனங்களுக்கு - நகர்மன்றத் தலைவர் தற்போது பதில் அளித்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
நகர்மன்றத் தலைவியாக எனது 8 மாத செயல்பாடு குறித்து வார்டு 1 உறுப்பினர் ஹாஜி ஏ. லுக்மான் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எனது தங்கையின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் - சிகிச்சைக்காக ஞாயிறு காலை திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டியதாகிவிட்டது. தாயாரும் இத்தாவில் இருப்பதால் - தங்கையுடன், திருநெல்வேலியில் இருக்கவேண்டிய அவசியத்தை தொடர்ந்து - உறுப்பினர் லுக்மான் அவர்களின் அறிக்கை குறித்த விளக்கத்தை வழங்க காலதாமதமாகிவிட்டது. அதற்கான வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு - எனது பதிலை கீழே வழங்குகிறேன்.
அதிகாரிகளின் செயல்பாடு குறித்து...
நான் தலைவியின் அதிகாரம் என்ன என்று தெரிந்துகொண்டு - அதனை அதிகாரிகளிடம் பயன்படுத்தாமல், உறுப்பினர்களிடம் பயன்படுத்துவதாக 1ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அவர்கள் கூறியுள்ளார்கள். நகராட்சி சட்டதிட்டங்கள்படி - நகராட்சி அதிகாரிகள், ஆணையருக்குதான் கட்டுப்பட்டவர்கள். நகராட்சி ஊழியர்களின் செயல்பாட்டில் (நிறைவுறாத பணிகள், அடிக்கடி விடுமுறை, காலதாமதமாக அலுவலகம் வருவது) அதிருப்தி தெரிவித்து - நான் பல முறை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆணையருக்கு தெரிவித்துள்ளேன்.
இப்போது என்னைக் குறைசொல்லும் உறுப்பினர்கள், நான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, “இப்படி அதிகாரிகள் விஷயத்தில் மேலிடத்திற்கு அடிக்கடி புகார் தெரிவித்து கொண்டிருந்தால், ஊழியர்கள் வேறு நகராட்சிக்கு மாறி சென்றுவிடுவார்கள்” என்று என்னிடம் தெரிவித்ததும் உண்டு. ஏற்கனவே பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் அதனையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுதான் நாம் இதனை அணுக வேண்டி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு - நகராட்சியில் உள்ள காலி இடங்களை நிரப்பாமல் பணிமாற்றம் வழங்ககூடாது என்றும் நான் உயர் அதிகாரிகளை எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டும் உள்ளேன்.
மேலும் - அதிகாரிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத பட்சத்தில் - அவர்களை மாற்றவும் நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். உதாரணமாக - முன்னாள் ஆணையர் (பொறுப்பு) வி.எஸ்.சுப்புலெட்சுமியின் செயல்பாடுகள் குறித்து பல அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து - அவரை மாற்றி, புது ஆணையரை நம் நகராட்சிக்கு தந்திட நான் நடவடிக்கை எடுத்தேன். அதன் பலனாக நம் நகராட்சிக்கு முதல் முறையாக முழு நேர ஆணையர் நியமிக்கப்பட்டு்ள்ளார்.
உறுப்பினர்களுடன் பழகுவது குறித்து...
நான் உறுப்பினர்கள் பலருடன் கடுகடுப்பாக இருப்பதாக உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறியுள்ளார்கள். நான் நகராட்சி உறுப்பினர் அனைவரையுமே எனது குடும்பமாக நினைத்து, மதித்து, பழகி வருவது - அவரவரின் மனசாட்சிக்கும், இறைவனுக்கும் நன்கு தெரியும். இதற்கு மேல் நான் இது குறித்து விளக்கம் கூற விரும்பவில்லை.
உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கிய கடிதம் குறித்து பதில் கேட்கும்போது நான் உறுப்பினர்களுடன் கலந்து பேச மாட்டேன் என்று கூறியதாக லுக்மான் அவர்கள் கூறியுள்ளார்கள். இறைவன் சாட்சியாக, நான் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாக சந்தித்து கடிதம் குறித்து பேசுவேன் என்று தான் கூறினேனே தவிர - பேசவே மாட்டேன் என்று கூறவில்லை. இந்த உரையாடல் நடக்கும்போது - அங்கு இருந்த பொதுமக்களில் ஒருவரே இதற்கு சாட்சி.
தன்னிச்சையாக முடிவெடுப்பதாக விமர்சனம்...
நகர்மன்றத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்று உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறியிருக்கிறார். கடந்த எட்டு மாதங்களில் - நகர்மன்றம் குறித்த எந்த முக்கிய முடிவுகளையும் நான் தன்னிச்சையாக எடுத்ததே இல்லை. நான் உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும் போது கூட - லுக்மான் அவர்கள் உட்பட பல உறுப்பினர்களை உடன் அழைத்துச் சென்றுதான் பேசி உள்ளேன். முக்கிய மற்றும் அவசிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்திட - பல தருணங்களில் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து - வருகைப்புரிந்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்தே - முடிவுகளை எடுத்துள்ளேன்.
குறுகிய கால அவகாசத்தில் நிறைவேற்றப்படவேண்டிய அவசர பணிகளுக்கு அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்துவிட்டுத்தான் காரியம் செய்ய வேண்டுமென்றால் அது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். ஆகவே நகர்மன்றத் தலைவருக்கான அனுமதியை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்தியுள்ளேன். ஆனால், மன்றக்கூட்டத்தில், உறுப்பினர்களின் இசைவுடன் செய்ய வேண்டிய எந்த ஒரு செயல் குறித்தும் தன்னிச்சையாக நான் முடிவெடுத்ததில்லை.
தீர்மானங்களை எழுதும்போது கூட - கூட்டங்களில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த உறுப்பினர்களின் முடிவினை தான், உறுப்பினர்கள் லுக்மான், ஈ.சாமி போன்றோரை அழைத்து, அவர்களின் உதவிக்கொண்டுமே எழுதியுள்ளேன். விரைவில் நகர்மன்ற கூட்டம் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளதால் - கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விபரங்கள் குறித்து எந்த கருத்து வேறுபாடும் இனி - இன்ஷா அல்லாஹ் - வராது.
பணிகளை துரிதமாக நிறைவேற்ற துணைக்குழுக்கள் அமைத்திட முயற்சி...
பதவியேற்ற ஆரம்பகாலத்தில் நகராட்சியின் பணிகளை நல்ல முறையில் செய்திட உறுப்பினர்கள் கொண்டு துணைக்குழுக்கள் அமைக்க பல முயற்சிகளை எடுத்தேன். ஆனால் - சில உறுப்பினர்கள் அதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் லுக்மான் அவர்கள் ஏற்பாட்டில் - மீண்டும் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து துணைக்குழுக்கள் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த ஆலோசனை கூட்டத்தினை - 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு அவர்களின் இல்லத்தில் நடத்த வேண்டும் என கூறினர். அக்கூட்டம் - ஏப்ரல் 25 அன்று நகர்மன்ற வளாகத்தில் பிறகு நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவிலும் துணைக்குழுக்கள் குறித்து முடிவெடுக்காதற்கான காரணம் என்ன என்பது கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும்.
நகர்மன்றப் பணிகளை துறைவாரியாகப் பிரித்து, துணைக்குழுக்கள் அமைத்து அன்றே செயல்படத் துவங்கியிருந்தால் - இன்று பல காரியங்கள், நிலுவையில் இல்லாமல் நிறைவுற்றிருக்கும். இப்போது ஒன்றும் நடக்கவில்லை என்று குறைபடும் உறுப்பினர்களும் அப்போது
ஒத்துழைத்திருக்கலாம்.
மக்கள் குறைதீர் கூட்டம்...
ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்ததன் காரணம் - நம் நகர்மன்றத்தில் குறைகள் அதிகபட்சம் ஒரு மாதத்தைத் தாண்டி நிலுவையில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதன்படியே ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டும் வருகிறது.
ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் - பெறப்பட்ட மனுக்கள், அத்துறை அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க கூறப்படுகிறது. அதில் சில மனுக்களில் உள்ள குறைகள் தீர்க்கப்பட்டும் உள்ளன. பல நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள மனுக்களை விரைவாக பரிசீலனை செய்யவும், அனைத்து மனுக்களின் தற்போதைய நிலையை கோரியும் ஆணையர் அவர்களுக்கு வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் நான் பலமுறை கூறியுள்ளேன்.
முந்தைய மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்காமல், அடுத்த கூட்டம் நடத்தக்கூடாது என்று உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சில குறைகள் நிவர்த்தி செய்யப்பட காலதாமதம் ஆகலாம்.
இதுவரை நான்கு மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. காலதாமதமாவதற்குக் காரணமான சிக்கல்களைக் களைந்து - முடிந்த வரை பெருவாரியான மனுக்களில் உள்ள குறைகளை எவ்வாறு விரைவாகத் தீர்ப்பது என்பதில் நம் ஆலோசனைகள் இருக்கவேண்டுமே தவிர - மக்கள் குறைதீர் கூட்டங்கள் அவசியம் இல்லை என கூறுவது ஏற்புடையதல்ல.
மாவட்ட ஆட்சியரகத்தில் - ஒவ்வொரு திங்கட்கிழமையும் - மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு திங்கட்கிழமையில் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் அடுத்த திங்கட்கிழமைக்குள் களையப்பட்டால்தான் மக்கள் குறைதீர் கூட்டம் தொடரவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை.
உறுப்பினர்கள் - தங்கள் வார்டிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலையை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரித்தாலே, பல மனுக்கள் விரைவாக தீர்வு காணப்படும். ஏப்ரல் மாதம் 25 அன்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், அது முடியும் நேரத்தில் நகர்மன்றத்திற்கு வந்து, “நான் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரவில்லை... Unofficial கூட்டத்திற்கு தான் (துணைக்குழுக்கள் குறித்த ஆலோசனை கூட்டம் ) வந்தேன்” என்று அனைவருக்கும் கேட்கும் விதமாக உறுப்பினர் லுக்மான் அவர்கள் கூறினார் என்பதனை இங்கு நான் நினைவு கூறுகிறேன்.
உறுப்பினர்களின் ஆலோசனைகளை மதிப்பதில்லை என்ற விமர்சனம்...
தெரு விளக்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்க வேண்டுமென்று உறுப்பினர் லுக்மான் அவர்களும், சில உறுப்பினர்களும் தொடர்ந்து கூறிவந்தார்கள். முந்தைய நகர்மன்றத்தால் - இது குறித்து தயார் செய்யப்பட்ட மதிப்பீடான 12 லட்ச ரூபாய் மிக அதிகம் என்ற காரணத்தாலும், தெரு விளக்குகள் விஷயத்தில் பல முறைகேடுகள் முந்தைய ஆண்டுகளில் நடந்திருப்பதாலும் இதுகுறித்த முடிவை - அவசர கோலத்தில் எடுக்கமுடியாது என்று நான் கூறினேன். அதன் பிறகு துணைத்தலைவர் அவர்களும், உறுப்பினர் லுக்மான் அவர்களும், 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு அவர்களும், நாகர்கோவில் சென்று அங்கு எவ்வாறு தெருவிளக்கு பரமாரிப்பு தனியார் மூலம் நடைபெறுகிறது என்று அறிந்து வரச் சென்றார்கள்.
பின்னர் அவர்கள் தெரிவித்த தகவலில் - தனியார் நிறுவனம், தாங்கள் பெறும் ஒப்பந்தத் தொகைக்கு - குறிப்பிட்ட எண்ணிக்கை வரைதான் பழுதான தெருவிளக்குகளை மாற்றுவார்கள் என்றும், அதன் பிறகு செய்யப்படும் மாற்றங்களுக்கு - கூடுதல் கட்டணம் (ஒப்பந்தபுள்ளி தொகை போக) நாம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
அவசரப்பட்டு முடிவெடுக்காமல் - பல நகராட்சிகளின் தலைவர்களையும், ஆணையர்களையும் நான் விசாரித்ததில் - சின்னமனூர், பெரியகுளம் போன்ற நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள முறைகளில் - ஒப்பந்தப்புள்ளி தொகையை தவிர கூடுதலாக ஒரு ரூபாய் கூட நகராட்சி கட்டணமாக செலுத்தவேண்டியதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்த முறையைப் பின்பற்றி தனியார் மூலம் தெருவிளக்குகள் பராமரிப்புகள் மேற்கொள்ள - ஆயத்த பணிகளை துவக்க - ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க நம் நகராட்சி அலுவலர் சென்னை சென்றுள்ளார். இவ்விசயத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்திருந்தால் - பல லட்சம் ரூபாய் நமது நகராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் - பஞ்சாயத்து தெரு விளக்குகளுக்கே பொறுப்புதாரர்கள். நகராட்சி தெரு விளக்குகளுக்கு அல்ல. காயல்பட்டினம் நகராட்சி - 2004 ஆம் ஆண்டு நகராட்சி நிலையை (மூன்றாம்) அடைந்தது. அன்றே - நம் நகராட்சிக்கு, தெருவிளக்குகளை பராமரிக்க பணியாளர்கள் (Wiremen) நியமிக்கப்பட்டிருக்கவேண்டும். இருப்பினும் பல ஆண்டுகளாக - நம் நகராட்சியின் தெருவிளக்குகளை மின்சார வாரிய ஊழியர்களே பராமரித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக அவர்கள் பணிகளை மேற்கொள்ள கூடுதல் தொகை கேட்டு -பணிகளை காலதாமதம் செய்ததால், நான் - உறுப்பினர்களுடன் சென்று பொறியாளரை பலமுறை சந்தித்து, எழுதுப்பூர்வமாகவும் - நகராட்சியில் நிரந்தர ஊழியர்களை நியமனம் செய்யும் வரை, மின்சார வாரிய ஊழியர்களை வழங்கி, ஒத்துழைக்கும்படியும் கோரி வந்தேன். அதனைத் தொடர்ந்து மின்சார வாரிய பொறியாளரும் இரு தற்காலிக பணியாட்களை நகராட்சிக்கு அனுப்பித் தந்துள்ளார். நமது நகராட்சிக்கு நிரந்தர Wiremenகளை பணியமர்த்த அனுமதியும் அரசிடம் கோரப்பட்டுள்ளது.
ஆனால் உறுப்பினர் லுக்மான் அவர்கள் இந்த விஷயத்தில் நடந்து கொண்டது எப்படி? மின்சார வாரிய பொறியாளரை நான் - பொறியாளரின் அலுவலகம் சென்று நேரில் சந்தித்து, பேசியது Protocol கிடையாது, தவறு என்று என்னிடம் கூறினார். மின்சார வாரியத்திற்கும், நகராட்சிக்கும் எந்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களும் இல்லை என்பதை அறியாமல், மின்சார வாரிய ஊழியர்கள் நகராட்சி பணிகளை செய்ய மறுக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய - உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க முற்பட்டார். உறுப்பினர் லுக்மான் அவர்களின் புகாரினால் - மின்சார வாரிய ஊழியர்கள் நகராட்சிக்கு வர மறுத்தால் - யாருக்கு நஷ்டம்? நகராட்சிக்குதானே?
கடந்த ஏப்ரல் மாதம் உறுப்பினர்கள் பலருடன் நான் சென்னை செல்லும்போது கூட அப்பயணத்திற்கான ஏற்பாட்டை ஒரு குறிப்பிட்ட வார்டு உறுப்பினர் மேற்கொள்வார் என்று தெரிவித்தபோது - வேண்டாம், அவர் ஏற்பாடு செய்தால் - சென்னை தொழிலதிபர் பணம் அதில் இருக்கும், நாம் அனைவரும் பயண செலவை பகிர்ந்து கொள்வோம் என கூறினேன். அதற்கு, “அதுக்கென்னா , நமது மார்க்கத்தில் அன்பளிப்பை உதாசீனம்படுத்தக்கூடாது, ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒன்று இல்லையா?” என்றும் உறுப்பினர் லுக்மான் அவர்கள் வினவினார். இதற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. உறுப்பினர்கள் அனைவரும் - பயண செலவினை - சமமாக பங்கிட்டுகொண்டோம்.
ஆலோசனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவைகளை ஏற்றுக்கொண்டு நான் பலமுறை செயல்பட்டிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில் வழங்கப்படும் முறையில்லாத, நிர்வாக செயல்பாடுகளை பாதிக்ககூடிய ஆலோசனைகளை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வது?
ஆடு, மாடு அறுப்பு தொட்டி ஏலம் குறித்து...
பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாத ஆடு, மாடு அறுப்பு தொட்டி குத்தகை - பிற இனங்களுக்கான ஏலம் விடப்படும்போது - அவற்றுடன் இணைத்து, மே இறுதியில் விடப்பட்டது. ஏலம் குறித்த அறிவிப்பு, நகர் முழுவதும், 15 தினங்களுக்கு முன்னரே, விளம்பரம் செய்யப்பட்டது. ஏலத்தில் பங்கேற்றவர்களுக்கு - கடந்த ஏல தொகை அடிப்படையில் - ஆரம்ப தொகை குறித்த தகவல் வழங்கப்பட்டது. ஏலம் முறையாக நடைபெறவேண்டும் என்பதால் - மூடி, முத்திரையிட்ட கவர் மூலம் - ஏலத் தொகை பெறப்பட்டது. எந்த வித விமர்சனத்திற்கும் வழி வகுக்காமல், முறைப்படி தான் ஏலமும் விடப்பட்டது.
மீன் சந்தை குறித்து ...
உறுப்பினர் லுக்மான் அவர்கள் மீன்கடை பிரச்சனை என கூறியுள்ளது - எல்.கே.மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள தினசரி சந்தையை பற்றியாதாகும். அது குறித்து நான் என்ன அவசர முடிவெடுத்தேன்? இந்த சந்தையில் மீன் விற்க அனுமதிக்கக் கூடாது என பரிமார் தெரு மீன் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை குறித்து - நானும், அனைத்து உறுப்பினர்களும் கூடிதானே பேசினோம்?
இச்சந்தையில் மீன் விற்கப்படாவிட்டால், இப்பகுதி மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்று தெரிவித்து, எல்.கே.மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சந்தையிலும் மீன் விற்கப்படவேண்டும் என்று நகரின் மேற்கு பகுதி பொதுமக்கள் கூறியதால் - மக்களிடமும், பொது அமைப்புகளிடமும் - கலந்தாலோசித்து இது குறித்து முடிவெடுப்போம் என்றுதானே நான் சொன்னேன். அதற்கு உறுப்பினர் லுக்மான் அவர்கள், “எதற்கெடுத்தாலும், மக்கள், மக்கள் என கூறாதீர்கள்! மக்கள் பிரதிநிதிகள் என்று நாங்கள் எதற்கு இருக்கிறோம்?” என்றார். இது குறித்து நாம் எடுக்கும் எந்த ஒரு முடிவும் மக்களைப் பாதிக்குமா, இல்லையா என்பதை அறிவதற்காகத்தானே மக்களையும், பொது நல அமைப்புகளையும் கலந்தாலோசிக்கவேண்டும் என நான் கூறினேன்? இதில் என்ன தவறு?
எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விமர்சனம் …
நகராட்சி பணிகள் தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதற்கு துறை வல்லுனர்களை நகராட்சிக்கு அழைத்து வந்தேன். தமிழக அரசு - தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கிவருகிறது. அதன்படி காயல்பட்டினதிலும் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இப்பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று இத்தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்தவரையே - காயல்பட்டினதிற்கு அழைத்து வந்து விளக்கம் வழங்க ஏற்பாடு செய்தேன். குப்பைகளை அகற்றும் விசயத்தில் நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற EXNORA அமைப்பின் நிறுவனரை சென்னையில் சந்தித்தும், அதன் பிரதிநிதியை காயல்பட்டினதிற்கு - பரிந்துரைகள் வழங்க - அழைத்தும் வந்தேன். நிபுணர்களை அழைத்ததையும் தன்னிச்சை முடிவு என - குறை காண்கிறார்கள்.
காயல்பட்டினத்தின் குடிநீர் பிரச்சனை என்பது இன்று நேற்று உள்ள பிரச்சினையல்ல. பல ஆண்டுகளாக நிலவுகிறது. இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தோம். அவர்களின் பதில் திருப்தியாக இல்லாததால் - TWAD நிறுவனத்தின் Managing Director யை நான் சென்னையில் சந்தித்தேன். ஒரு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்யும்படி அப்போது கேட்டுக்கொண்டேன். காயல்பட்டினம் எல்லை வரை குடிநீரை வழங்குவதுதான் தங்கள் பொறுப்பு என்றாலும், நமது கோரிக்கையை ஏற்று அவரும் - நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டார். அந்தக் குழுவும் - நகராட்சிக்கு தனது பரிந்துரையை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த TWAD குழு நகராட்சிக்கு வந்திருக்கும்போது, உறுப்பினர்கள் தவிர - நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலமுறை - குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைப்பாடுகள் குறித்த - புகார்களை என்னிடம் நேரடியாக தெரிவித்த பொது நல ஆர்வலர்களையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தேன். அதில் - கோமான் நற்பணி மன்றத்தின் இரு சகோதரர்கள் மட்டும் வருகை தந்து, தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் விநியோகம் குறித்த பிரச்சனைகளை அதிகாரிகளுக்கு எடுத்து சொல்லி, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். இதற்கு உறுப்பினர் லுக்மான் அவர்கள் - எப்படி அவர்களை அழைப்பீர்கள், எப்படி அவர்களை எங்களுக்கு இணையா உட்கார சொல்வீர்கள், எங்களை நீங்கள் மதிக்கவில்லை என்று கூறினார். மக்களோடு மக்களாக இணைந்து நின்று செயலாற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதி, மக்களை கூப்பிட்டது - மதிக்காத செயல் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) மூலம் - ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து நம் நகராட்சிக்கு பெறப்படும் குடிநீருக்கு பல ஆண்டுகளாக பல லட்சம் தொகை செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது. “நிலுவைத் தொகையை விரைந்து செலுத்தினால்தான், உங்கள் ஊருக்கு கூடுதல் தண்ணீர் வழங்கும் விஷயத்தில் முன்னுரிமை அளிக்க இயலும்” என்று TWAD அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, கடந்த நகர்மன்றக் கூட்டம் ஒன்றில் நிலுவைத் தொகையை செலுத்துவதை கூட்டப் பொருளில் கொண்டு வந்தேன். “மொத்தமாக செலுத்தத் தேவையில்லை. தவணை முறையில் கூட நிலுவைத் தொகையை செலுத்தலாம்” என்றும் அக்கூட்டத்தில் நான் கூறினேன்.
அப்போது கூட, 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு அவர்கள், “இதையெல்லாம் கட்டத் தேவையில்லை. இதுபோன்ற பாக்கி எல்லா உள்ளாட்சிகளுக்கும் உள்ளது. இதை தள்ளுபடி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கலாம்” என்று தெரிவித்தார்.
ஒருபுறம் நகரில் குடிநீர் பற்றாக்குறையையும் வைத்துக்கொண்டு, மறுபுறத்தில் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்யும்போது அதனை எதிர்ப்பதும், பெற்ற பொருளுக்கு பணம் கட்டத் தேவையில்லை என்று சொல்வதும் எந்த வகையில் அறிவுடமை? ஒரு நல்ல நிர்வாகத்தை நடத்துவதற்கு இதை ஒரு அறிவுப்பூர்வமான அறிவுரையாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? இதுபோன்ற அறிவுரைகளுக்குக் காது கொடுக்காததால்தான், “உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை” என்றும், “தலைவி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்” என்றும் கூறப்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, கடந்த 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் ஒரு அறிவிப்பில், இதுபோன்ற நிலுவைத் தொகையை அரசு செலுத்தாது என்றும், அந்தந்த உள்ளாட்சியே செலுத்த வேண்டும் என்றும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டே நிலுவைத் தொகையை செலுத்த தீர்மானிக்கப்பட்டது.
நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலைய கட்டிடத்திலுள்ள கடைகள் பல காலமாக வாடகை செலுத்தப்படாமலும், பினாமிகளின் பெயரிலும், மேலும் குறைந்த வாடகையிலும் இருந்து வருகிறது. அக்குறையை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் உறுப்பினர்கள் சிலர் எதிர்த்தார்கள்.
எனக்கென வாகனம் கேட்டதாக ஒரு விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. சென்னைக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் என்னுடன் வந்த உறுப்பினர்களில் சிலர்தான் நகராட்சிகள் நிர்வாகத் துறையின் ஆணையர் திரு.சந்திரகாந்த் காம்ளே IAS அவர்களிடம் - தலைவருக்கு அறையும், வாகனமும் வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதனைக் கேட்டறிந்த அந்த அதிகாரியும், “பலமுறை என்னை சந்தித்து நகராட்சிப் பணிகளுக்காக பல கோரிக்கைகளை முன்வைத்துள்ள நகர்மன்றத் தலைவி , அரசு விதிகள் அனுமதித்தும், தனக்கு ஒரு வாகனம் வேண்டும் என்றோ, அறை வேண்டும் என்றோ ஒரு முறை கூட கேட்கவேயில்லையே, ஏன் ?” என்று கேட்டார். இதற்கு நம்மைப் படைத்த இறைவனும், அங்கிருந்த நம் நகர்மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுமே சாட்சி. ஆனால் தற்போது இதுவும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனது செயல்பாடுகள்...
நகராட்சியின் நடவடிக்கைகளை - நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே! அரசிடம் சம்பளம் பெறும் நகராட்சி அலுவலர்களே அந்நடவடிக்கைகளை செயல்படுத்தும் பொறுப்பிலுள்ளவர்கள். இவ்வாறிருந்தும், நகராட்சி பொதுநிதியிலுள்ள கணக்கு அறிக்கையைத் தருமாறு பலமுறை கேட்டும், நம் நகராட்சி அதிகாரிகள் அதற்கு அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. பட்ஜெட் தயாரிக்க சொன்னபோது கூட, “கடந்த ஐந்தாண்டுகளில் பட்ஜெட் எதுவும் தயாரிக்கப்படவில்லை. அப்படியிருக்க தற்போது எப்படி தயாரிக்க முடியும்?” என்ற பதிலை அதிகாரிகள் தந்தனர்.
ஆனால், அதற்காக நான் ஓர் அளவுக்கு மேல் காத்திருக்கவும் இல்லை.
நகராட்சியின் நிதிநிலையைப் பற்றி அறியாமல் எந்த புதுத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று கடந்த நகர்மன்றக் கூட்டங்களில் தெரிவித்திருந்தேன்.
நகராட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் நான் பல மாதங்களாக கேட்டும் வழங்கப்படாத நிலையிலும் - அதிகாரிகள் செயல்படவில்லை என்ற காரணத்தால் நானும் அமைதியாக இருந்துவிடாமல், அனைத்து வங்கிக் கணக்கு எண்களையும் நானே பெற்று, திருச்செந்தூரிலும், காயல்பட்டினத்திலும் உள்ள வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று வங்கிக் கணக்குகளைப் பெற்று வந்தேன்.
இதுபோன்று, அதிகாரிகளிடம் செய்யக் கூறியும் செய்யாத பல பணிகளை அப்படியே விட்டுவிடாமல், அவர்கள் எழுத வேண்டிய கடிதங்களைக் கூட நானே எழுதி கொடுத்து, அவற்றை அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர். அவர்களின் கையெழுத்தைப் பெற்று, தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும், சென்னைக்கும் சென்று பல உயரதிகாரிகளை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்து முறையிட்டுள்ளேன். ஒரு சில நேரங்களில், கையெழுத்திடாமலே அதிகாரிகள் சென்னை சென்றுவிட்ட நிலையிலும், அக்கடிதங்களை சென்னைக்கு அனுப்பி, அங்கு அவரது இருப்பிடத்தில் நேரடியாக கையெழுத்தைப் பெற்று காரியங்கள் செய்துள்ளேன்.
அதிகாரிகள் தானாகவே சமர்ப்பிக்கவேண்டிய வரவு செலவு கணக்கினை - சமர்ப்பிக்க காலம் தாழ்த்துவதால், வரவு செலவு கணக்கு, செக் யாருக்கு கொடுக்கப்பட்டது, எதற்காக கொடுக்கப்பட்டது என ஆய்வு செய்ய இரு மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தேன். அதன்படி இம்மாதம் ஜூன் 15 அன்று முதல் கூட்டம் நடந்திருக்க வேண்டும். அக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து - அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் தகவல் தெரிவித்தேன். ஆனால் உறுப்பினர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை.
அதுபோல, நகராட்சி பணிகளை டெண்டர் எடுக்க உள்ளூர் ஒப்பந்தகாரர்கள் தயக்கம் காண்பிப்பதால், நம் நகராட்சியின் டெண்டர் விஷயத்திலும் பலருக்கும் ஆர்வத்தைத் தூண்டி, டெண்டர்களில் பலரும் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணத்தில், நம் நகருக்கு அருகிலுள்ள உள்ளாட்சிகளில் டெண்டர்களில் பங்கேற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் அழைப்பு விடுத்து, நம் நகராட்சியில் நடைபெறும் டெண்டரில் பங்கேற்க ஊக்கப்படுத்தியிருக்கிறேன். இது உறுப்பினர் லுக்மான் அவர்களுக்கும் நன்கு தெரியும். காரணம், அவரும் அம்முயற்சியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.
மேலும் - குடிநீர் தொட்டி மூடி அமைத்தல் போன்ற சிறுப்பணிகளை (low value) மேற்கொள்ள நகராட்சியில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் - சிறு பணிகளை, விரைவாக செய்திட, புதிய முறையை கடந்த கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவந்தேன். அதன்படி - சிறு நிறுவனங்கள், தளர்த்தப்பட்டுள்ள விதிமுறைகள் மூலம், நகராட்சியின் சிறு பணிகளை எளிதாக எடுத்த செய்ய முடியும்.
நகராட்சியின் டெண்டர் விஷயத்தில் எந்த ஒளிவு-மறைவோ, ஊழலோ நடைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக, அனைத்து மக்களுக்கும் தெளிவாக விளம்பரப்படுத்தியே டெண்டர் அறிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் செய்த காரணத்தால், ஊழலுக்கு வாய்ப்பேயின்றி பொது ஏலம் மற்றும் இதர டெண்டர்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்றுக்கொண்டும் உள்ளன.
சமீபத்தில் நிறைவுற்ற அரசு மானியமான IUDM திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்பிலான Solid Waste Management டெண்டர் - இ-டெண்டர் முறையில், கால அவகாசம் வழங்கப்பட்டு, விதிகள்படி விளம்பரமும் செய்யப்பட்டு நடைபெற்றதால் - நகராட்சியின் பணம் 12 லட்சம் சேமிக்கப்பட்டது.
DCW தொழிற்சாலையின் மாசினால் நகரில் பாதிப்பு ஏற்படுகிறது என மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அத்தொழிற்சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, அது குறித்த வல்லுனர்கள் கலந்துரையாடல் கூட்டம் மார்ச் மாதம் சென்னையில் நடந்தது. இறுதி நேரத்தில் அது குறித்த தகவல் கிடைத்தாலும், உடனடியாக சென்னைக்கு சென்று - பாதிப்புக்கு உள்ளாகியுள்ள காயல்பட்டினம் மக்களின் அச்சத்தை போக்கிய பிறகே, இத்தொழிற்சாளையினை விரிவாக்குவது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்றும், அதற்கு முன்னர் அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் சமர்ப்பித்து வந்தேன்.
அரசு, அரசு துறைகளிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ...
அடுத்து, நம் நகராட்சியின் நலப்பணிகளுக்கு அரசிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு நான் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை என்று - என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நமதூரிலுள்ள அரசு பொது நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 7 லட்சம் பெறப்பட்டு, 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
DTCP அரசு நிறுவனத்திடம் 48.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், காயல்பட்டினம் கடற்கரையை, கலாசாரத்தை பாதிக்காத வகையிலும், அதே வேளையில் மக்களுக்கு பயனுள்ள வகையிலும், சீர் அமைத்திடும் பொருட்டும் - திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை பயன்படுத்தாமல் இருக்கும் நிலத்தில் - அதிகாரிகள் 29 சென்ட் நிலம் மட்டுமே இருப்பதாக கணக்கிட்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு அதனை தரும்படி கோரியிருந்தனர். அதிக இடம் கிடைத்தால் - பல்வேறு நல்காரியங்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில், காலி இடத்தில 29 சென்ட் அல்ல, 44 சென்ட் - காயல்பட்டினம் நகராட்சிக்கு தரவேண்டும் என்ன மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்துள்ளேன்.
தமிழக அரசு - காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்து, நகராட்சியிடம் அதற்கான இடம் கோரி கடிதம் எழுதியிருந்தது. நகராட்சியிடம் அதற்கான இடம் இல்லை என்பதால், இடத்தின் தேவை குறித்து - நகரில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் தெரிவித்தேன். அதனை தொடர்ந்து, ஆர்வப்பட்டு இடம் தர விருப்பம் தெரிவித்த பகுதிகளில் - கோமான் ஜமாஅத் மக்கள் அளிக்க முன்வந்த இடத்தினை - நகர்மன்றத்தின் பெருவாரியான உறுப்பினர்கள் தற்போது தேர்வு செய்துள்ளனர்.
எளிய நிலையில் உள்ள நமதூர் சிறுபான்மை (முஸ்லிம், கிருஸ்துவர்) பெண்களுக்கு சுய தொழிலில் ஆர்வமூட்ட - மாவட்ட மகளிர் திட்டம் மூலம் சணல் மூலம் பொருட்களை தயாரிக்க பயிற்சி வழங்கும் முகாமினை நடத்த ஏற்பாடு செய்தேன்.
நம் நகர்மன்றக் கட்டிடம் 45 வருட பழமைவாய்ந்தது. இன்று பல இடிபாடுகளுடன் அக்கட்டிடம் காணப்பட்டு வருகிறது. இது புதுப்பிக்கப்பட வேண்டும் என முந்தைய நகர்மன்றத்திலேயே விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படாததால் அந்த வாய்ப்பு நழுவ விடப்பட்டது. நகராட்சி கட்டிடங்களைப் புதுப்பிப்பதற்கென்றே அரசிடம் ஒரு திட்டம் உள்ளதாகவும், அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் நான் சென்னை சென்ற இடத்தில் அதிகாரிகளிடமிருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் நம் நகர்மன்றக் கட்டிடத்தைப் புதுப்பிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நமதூரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கொண்டு வரப்படும் இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டத்தைப் பெறுவதற்கான இறுதி கட்ட பணிகள் முழு முனைப்புடன் செய்யப்பட்டு வருகிறது. நகர்மன்றத் தலைவராக நான் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தொடராக செய்து வருகிறேன்.
உதாரணமாக, அத்திட்டத்தின் ஒரு பகுதியான உள்ளூர் குடிநீர் வினியோகத்தை சீரமைக்கும் பணியை துவக்கமாக செய்திட கோரிக்கையை முன்வைத்துள்ளேன். அதுபோல, இத்திட்டத்திற்கு நம் நகராட்சி செலுத்த வேண்டிய 3 கோடி ரூபாய்க்கு - நகராட்சியின் நிதிப்பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு - அத்தொகையின் பெரும்பங்கை அரசே வழங்கிடக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளேன்.
முன்மாதிரியான நகராட்சியினை உருவாக்க வேண்டும்...
ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களின் நல்ல ஆலோசனைகளை பெற்று செயல்படுத்த காத்திருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் செயல்பட்டும் வருகிறேன். தேவையான அனைத்து ஆலோசனைகளுக்கும் நம் நகரின் அனைத்து பொதுநல அமைப்புகள், சென்னையிலுள்ள அத்துறை அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் கலந்தாலோசித்தே பல முடிவுகளையும் நான் எடுத்து வருகிறேன்.
நகர்மன்றத் தலைவர் என்ற அடிப்படையில் - நம் தமிழக அமைச்சர்களை சந்தித்து, நம் நகருக்குத் தேவையான நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட்டபோது - நகர்மன்றத்திற்கு நல்லதொரு நிர்வாகத்தைத் தருவேன் என்று எவ்வாறு வாக்குறுதியளித்தேனோ அதிலிருந்து சிறிதளவும் மாறு செய்ய மாட்டேன். அதே நேரத்தில் சட்டதிட்டங்களை மதிக்காமல், குறுக்குவழியில் செல்லவோ, லஞ்சம் வாங்கவோ முனைவோருக்கு நான் ஒரு போதும் துணை போக மாட்டேன். அது அதிகாரிகளாக இருந்தாலும் சரி, நகர்மன்ற உறுப்பினர்களானாலும் சரியே!
நம் நகராட்சியில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். அலுவலர்கள் குறைவு. பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல காலங்களாக தவறான வழியில் நகராட்சி மூலம் பலர் லாபம் அடைந்துவருவது. இவைகளை எல்லாம் தாண்டி மாற்றங்கள் கொண்டு வர சிரமம் இருந்தாலும், காலம் எடுத்தாலும், இறைவன் உதவியுடன், செயல்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு உறுப்பினர்களின் உதவியை - என்றும்போல், இன்றும் நாடுகிறேன். பொறுமையாகவும், ஒற்றுமையாகவும், நல்ல எண்ணத்துடனும், புரிதலுடனும் நாம் அனைவரும் செயல்பட்டால் - நல்லதொரு நகராட்சி - இன்ஷா அல்லாஹ் - நமக்கு கிடைக்கும்.
இவ்வாறு தனதறிக்கையில் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தெரிவித்துள்ளார்.
|