ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ கத்தர் சென்றதையொட்டி, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் தலைவர் கண்ணியத்திற்குரிய பெருந்தகை ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் கத்தர் விஜயம் செய்ததையொட்டி, 07.06.2012 அன்று எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில் அவர்களுக்கு, கத்தர் தலைநகர் தோஹாவிலுள்ள ஏசியானா ரெஸ்டாரண்ட்டில் வரவேற்பளிக்கப்பட்டது.
இதற்கென குறைந்த கால அவகாசத்தில் கூட்டப்பட்ட அவசர செயற்குழுவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதியம் 01.15 மணிக்குத் துவங்கிய கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் கனி முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.
நகர மக்களிடையே ஒற்றுமை மற்றும் கலாச்சார பாரம்பரிய கட்டுக்கோப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
பின்னர், அவருக்கு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் நினைவுப் பரிசு வழங்கினார்.
கூட்டத் தலைவரின் நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் எம்.எம்.எல்..முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பின்னர், அனைவருக்கும் இந்தியன் ஃபபே முறையில் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 15:39/18.06.2012] |