நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், காயல்பட்டினம் பள்ளிகளில் பயின்ற 18 மாணவர்கள் தேர்ச்சியிழந்துள்ளனர்.
இம்மாணவர்கள் வருட இழப்பின்றி மீண்டும் கல்வி கற்று முன்னேற ஆர்வமூட்டும் நோக்குடன், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் கடந்த பொதுக்குழுவில், செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவாலங்கா அமைப்பின் சார்பில், 04.06.2012 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. காவாலங்கா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவ்வமைப்பின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ (48), ஹாஜி எஸ்.ஐ.புகாரீ ஆகியோர் பங்கேற்றனர்.
இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் பங்கேற்றனர்.
கலந்தாலோசனையின் நிறைவில், தேர்ச்சியிழந்த மாணவர்களை இக்ராஃவில் ஒன்றுதிரட்டி, அவர்களின் கண்ணியம் குறையாத வண்ணம் அவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வமூட்டி, தேர்ச்சியிழந்த பாடங்களை மீள்தேர்வு மூலம் எழுதச் செய்ய ஊக்குவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து காவாலங்கா பொதுச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் கருத்து தெரிவிக்கையில்,
ஏதோ சில கவனச் சிதறல்களால் தமது வெற்றியை நழுவி விட்ட இம்மாணவர்களை இத்தோடு விட்டுவிடாமல் அவர்களை ஒன்றுதிரட்டி, நடப்புலகில் உயர்கல்வியின் அவசியம் குறித்து அவர்களுக்கு உணர்த்தி, தேர்ச்சியிழந்த பாடங்களை அம்மாணவர்கள் மீள்தேர்வு எழுத - தம் மன்றம் இக்ராஃவின் ஒத்துழைப்புடன் ஊக்கமளிக்கவுள்ளதாகவும், அவர்களில் மேற்கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரத்தில் தாழ்நிலையிலுள்ள மாணவர்களிருப்பின், இருவருக்கு தம் மன்றம் மூலம் ரூ.50,000 செலவில் உயர்கல்விக்கு அனுசரணையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுபோன்று உதவிகள் தேவைப்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, உலக காயல் நல மன்றங்களை முறைப்படி தொடர்புகொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான அனுசரணைகள் பெறப்பட்ட பின்னர் இதர மாணவர்களுக்கும் இந்த உதவித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்ச்சியிழந்த மாணவர்களை இக்ராஃவில் ஒன்று திரட்டி ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு தினங்களில் நடத்தப்படும் என, காவாலங்கா அமைப்பின் சார்பில் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ இன்று தெரிவித்துள்ளார். |