அண்மைக் காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கக் கூட்டம் பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் 14.06.2012 அன்று நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து மாணவர்கள் தம்மையும், தம்மோடு தொடர்புள்ளவர்களையும் தடுத்திட வேண்டும் என்ற கருத்திலும் - டாக்டர் ராணி டப்ஸ் உரையாற்றினார்.
பின்னர், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் - டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு உற்பத்தியாகும் விதம் குறித்து, கண்ணாடி புட்டியில் அடைக்கப்பட்ட டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுப்புழுவைக் காண்பித்து விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, வட்டார சுகாதார ஆய்வாளர்களான சோமசுந்தரம், ஆனந்தராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் - டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழியை பின்வருமாறு முன்மொழிய மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் அதனை வழிமொழிந்தனர்:-
சுகாதார உறுதிமொழி
நான் எனது வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ - டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், பயன்பாடற்ற ப்ளாஸ்டிக் கோப்பைகள் போன்ற பொருட்களை தேங்க விடமாட்டேன்...
எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாதவண்ணம் மூடி வைப்பேன்... வாரம் ஒருமுறை அவற்றை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன்... இதன்மூலம் ஏடிஸ் கொசு வளராமல் தடுப்பேன்...
நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை-அயலாருக்கும் கற்றுக்கொடுத்து, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பார்த்துக்கொள்வேன்... தற்பொழுது அரசு எடுத்து வரும் கொசு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பளிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்...
இவ்வாறு, உறுதிமொழி வாசகம் அமைந்திருந்தது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|