தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினம் நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் பிரதான குழாயில், காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள வயற்பரப்பு அருகிலுள்ள குழாய் பகுதியில் இன்று காலையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு காரணமாக தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது.
இத்தகவல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்டோர் நிகழ்விடம் விரைந்தனர். அங்கு தேவையான சீரமைப்புப் பணிகளை அவர்கள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ரெங்கநாதன் என்ற சுகு, இ.எம்.சாமி ஆகியோர் நிகழ்விடத்தில் சீரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
உடைந்த குழாயை அகற்றி, புதிய குழாய் பொருத்தி சீரமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் என ஆத்தூர் குடிநீரேற்று நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ. |