காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தனது தேர்தல் வாக்குறுதிகளடங்கிய அறிக்கையில், 11ஆவது வாக்குறுதியாக, “பெண்கள் சொந்தக் காலில் நின்று, சுயமாக தொழில் செய்து, பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு, நகரிலுள்ள சுய உதவிக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, சாதார பெண்களை சாதனைப் பெண்களாக்கும் வழிகளை ஆராய்ந்து, செயல்திட்டங்களை வடிவமைத்து முயற்சிகள் மேற்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் அவர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவின் தூண்டுதலில், மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் -வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சிறுபான்மை மகளிருக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பயிற்சி முகாம், காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள அரசு கட்டிட வளாகத்தில் 26.03.2012 திங்கட்கிழமையன்று துவங்கி, 11.04.2012 தேதியுடன் நிறைவுற்றது.
இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் 25 பேரும், கிறிஸ்துவ பெண்கள் 25 பேரும் என மொத்தம் 50 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். சணல் பொருட்கள் உற்பத்தி செய்ய இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
பயிற்சியின் நிறைவில், இப்பெண்கள் இணைந்து, சரக்கு பை (Luggage Bag), கைபேசி உறை (Mobile Phone Cover), இனிப்புப் பண்டங்கள் வைக்கும் பை, புத்தக உறை (Book Cover), பூஞ்சாடி (Flower Vass), தேனீர் தட்டு (Tea Tray), சுவர்க்கடிகாரம், தாம்பூலப் பை, அலுவலகம் செல்வோருக்கான மதிய உணவு எடுத்துச் செல்லும் பை (Lunch Bag), பல வகைப் பூக்கள், கடிதம் தாங்கி (Letters Holder), பணப்பை (Money Purse) என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்திருந்தனர்.
இப்பயிற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள், மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட நிர்வாகத்தால் தனியொரு நிகழ்ச்சியில் வழங்கப்படும் என பயிற்சியின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 05.06.2012 அன்று மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மகளிர் தமது அனுபவங்களையும், அவற்றில் பெற்ற பலன்களையும் தெரிவித்து உரையாற்றினர். பின்னர், மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
பயிற்சி பெற்ற பின்னர் மகளிரின் மேம்பாடுகள் குறித்தும், பயிற்சியின்போது சந்தித்த குறைகளையும் பயிற்சியிலீடுபட்ட பெண்களிடம் கேட்டறிந்ததோடு, அனைவரும் தொழில் முனைவோராக வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமென தெரிவித்தார்.
பின்னர் கருத்து தெரிவித்த - பயிற்சியிலீடுபட்ட மகளிர், உற்பத்திக்கான சணல் துணி மூலப் பொருட்கள் இலகுவாகக் கிடைக்கப்பெற்றால், தம்மால் எளிதில் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
நிறைவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற மகளிர் அனைவருக்கும் ஒரு நாளுக்கு 25 ரூபாய் வீதம் 15 நாட்களுக்கு 375 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் செந்தில் ஊக்கத் தொகையை மகளிருக்கு வழங்கினார்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், மகளிர் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். |