வி-யுனைட்டெட் கே.பி.எல். 4ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப் போட்டி, 31.05.2012 அன்று துவங்கி, 10.06.2012 அன்று (நேற்று) இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது. இப்போட்டிகளனைத்தும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஃபை ஸ்கை பாய்ஸ் அணியும் காயல் யுனைட்டெட் அணியும் களம் கண்டன. இதில், காயல் யுனைட்டெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது.
இரவு 07.00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் மூஸல் காழிம் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையைத் தொடர்ந்து, ஐக்கிய விளைாயாட்டு சங்க துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரர்களுக்கும், சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கும், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் வீரர்களுக்கும், நடுவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வெற்றிக்கு முனைந்த ஃபை ஸ்கை பாய்ஸ் அணிக்கு ரூபாய் 10,000 தொகைக்கான காசோலையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற காயல் யுனைட்டெட் அணிக்கு ரூபாய் 15,000 தொகைக்கான காசோலையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இவற்றை, விழா தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. சுற்றுப்போட்டியின் அனைத்து போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சுற்றுப்போட்டி ஏற்பாடுகளை, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். |