தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் - இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து நடத்தும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை இம்மாதம் 22, 23ஆம் தேதிகளில் நடத்திட இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 06.06.2012 புதன்கிழமை இரவு 07.00 மணிக்கு, இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது.
உறுப்பினர்கள் சுய அறிமுகம்:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தாய்லாந்து காயல் நல மன்றத்தின் செயலாளர் ஹாஃபிழ் எம்.எஸ்.செய்யித் முஹம்மது கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டோர் தம்மை சுய அறிமுகம் செய்துகொண்டனர்.
கடந்த கூட்ட அறிக்கை:
அதனைத் தொடர்ந்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் - கடந்த கூட்ட அறிக்கையை வாசித்து, அவை செயல்படுத்தப்பட்டமை குறித்து விளக்கினார். அதன் சுருக்கம் பின்வருமாறு:-
கல்வி ஒளிபரப்பு:
*** 10ஆம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமது அரசு பொதுத்தேர்வை தயக்கமின்றி சந்திப்பதற்கு வழிகாட்டும் நோக்குடன் நடத்தப்படும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சி - பாடத்திட்டங்கள் மாற்றம் கண்டுள்ளதையடுத்து, இவ்வாண்டு புதிதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது... 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டு, கல்வி ஒளிபரப்பு செய்யப்பட்டது... 10ஆம் வகுப்பிற்கான கல்வி ஒளிபரப்பிற்கான கால அட்டவணை அச்சிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில், நகரில் உள்ளூர் கேபிள் டிவி அலைவரிசைகள் முடக்கப்பட்ட காரணத்தால், ஒளிபரப்பு செய்ய இயலாமற்போனது...
மின்தடை நேரத்தை மாற்றியமைக்கக் கோரல்:
*** அரசுப் பொதுத்தேர்வு காலங்களில் மின்தடை நேரத்தை மாணவர்களின் படிப்பிற்கு பாதிப்பில்லாதவாறு மாற்றியமைத்துக்கொள்ளக் கோரி, அத்துறைசார் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது...
பள்ளிச்சீருடை-பாடக்குறிப்பேடுகள் இலவச வினியோகம்:
*** பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசே இலவசமாக பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடுகளை வழங்குவதாக அறிவித்த காரணத்தால், இக்ராஃவின் பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடுகள் ஒருங்கிணைந்த இலவச வினியோகத் திட்டத்தை இவ்வாண்டு செயல்படுத்த இயலவில்லை. நடப்பு கல்வியாண்டிற்கு இனி இத்திட்டத்தை செயல்படுத்திட கால அவகாசமில்லை.இன்ஷா அல்லாஹ்! அடுத்த வருடம் இதற்கான முயற்சிகள் முற்கூட்டியே மேற்கொள்ளப்படும்.
*** சுகாதார விழிப்புணர்வுப் பிரசுரம் வடிவமைக்கப்பட்டு, இக்ராஃவின் பெண் தன்னார்வச் சேவகர்கள் மூலம் விரைவில் வழங்கப்படும்...
இணையதளங்களுக்கு செய்திகள் அளித்தல்:
*** சென்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்தபடி,காயல்பட்டினத்தின் அனைத்து இணையதளங்களுக்கும் (அவர்கள் வேண்டுகோள் படி ) தற்போது இக்ராஃவின் செய்திகள் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டு வருகிறது... வாசகர் கருத்துக்களுக்கு (கமெண்ட்ஸ்) அனுமதியளிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதற்கு, “வாசகர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்க நாங்கள் விரும்பவில்லை... எனினும், இக்ராஃவின் சேவைகளைப் பாதிக்கும் வகையிலோ, கொள்கை முடிவுகளை விமர்சிக்கும் வகையிலோ அனுப்பப்படும் கருத்துக்களைப் பிரசுரிக்க மாட்டோம்...” என்று இணையதளங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இக்ராஃவின் செய்திகளுக்கு முறைகேடான எந்தக் கருத்துப்பதிவும் (கமெண்ட்ஸ்) இணையதளங்களில் இடம்பெறவில்லை.இதே நிலை நீடிக்கும் வரை இக்ராஃவின் செய்திகளை வழங்கலாம்.
இவ்வாறு கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டமை குறித்து இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கினார்.
சுழற்சிமுறை நிர்வாகத்தில் பங்கேற்க மன்றங்களுக்கு அழைப்பு:
பின்னர், இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தில் இதுவரை தம்மை இணைத்துக்கொள்ளாத வெளிநாட்டு காயல் நல மன்றங்கள், விரைந்து இணைந்து நிர்வாகத்தில் முறைப்படி பங்கேற்க வருமாறு கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு காயல் நல மன்ங்களின் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த முறையான அழைப்பு இக்ராஃவின் சார்பில் அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை:
நடப்பு கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை குறித்த தகவலறிக்கை பிரசுரமாக வெளியிடப்பட்டு, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும். அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கும் - அவற்றின் அறிவிப்புப் பலகையில் தொங்க விடுவதற்காக அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்-பெண் பாகுபாடில்லை:
கல்வி உதவித்தொகை வழங்கும் விஷயத்தில் மாணவியருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு கூட்டத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இக்ராஃவைப் பொருத்த வரை, கல்வி உதவித்தொகை வழங்கும் விஷயத்தில் மாணவர் - மாணவியர் என எந்தப் பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை என்றும், விண்ணப்பதாரர்களின் உண்மை நிலையை ஆய்ந்தறிந்து - அதனடிப்படையிலேயே வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டால், அவர் கற்று தம் குடும்பத்திற்கு செலவழிப்பவராக மாறுவார்... ஒரு மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டால், அவர் படித்து பட்டம் பெற்ற பின், தன் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய வழியகாட்டியாகத் திகழ்வார் என்ற அடிப்படையிலேயே இரு பாலருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது...
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 60 சதவிகிதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியர் மட்டுமே கல்வி உதவித்தொகை பெறத் தகுதி பெற்றவர்கள் என்ற வரையறை உள்ளது. நடப்பாண்டில் விண்ணப்பித்துள்ள மாணவியர் அனைவரும் இத்தகுதியைப் பெற்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் 60 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நாம் அதனை நிராகரிக்க வில்லை.
கல்வி உதவித்தொகை விண்ணப்பதாரர் நேர்காணல்:
நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியருக்கான நேர்காணலை இம்மாதம் 17ஆம் தேதியும், ஜகாத் நிதியின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியருக்கான நேர்காணலை ரமலான் மாதத்திற்கு பின்பும் நடத்தலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்கள் தேவை:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை அனுசரணையளித்துள்ள நன்கொடையாளர்கள், ஜகாத் நிதி மூலம் கல்வி உதவித்தொகை வழங்கிட நிதி வழங்கியவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் வழங்கிய தொகை விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்றங்களுக்கு வேண்டுகோள்:
நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அனுசரணையாளர்களை தருமாறு காயல் நல மன்றங்களுக்கு முறைப்படி மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் சுமார் 65 புதிய அனுசரணைகளுக்கு - இதுவரை 15 அனுசரணைகள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கை மன்ற செயலருக்கு பாராட்டு:
கடந்த ஆண்டு, கல்வி உதவித்தொகை அனுசரணை பெறுவதில் இதுபோன்று மந்தம் ஏற்பட்டிருந்த வேளையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத், தனியார்வமெடுத்து, பல்வேறு நாடுகளிலுள்ள அவருக்கு அறிமுகமானவர்களிடமெல்லாம் தகவல் தெரிவித்து, சுமார் 15 அனுசரணைகளைப் பெற்றுத் தந்தமைக்காக, கூட்டத்தில் அவருக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கப்பட்டது.இது போன்று பலரும் முன் வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தலையேற்றுள்ள தக்வா மன்றத்திற்கு கூடுதல் பொறுப்பு:
ஏற்கனவே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை வழங்கியவர்களின் 3 ஆண்டு தவணை நிறைவுற்றுள்ளவர்களுக்கு, புதிய அனுசரணை கேட்டு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக, இக்ராஃ நிர்வாகி தெரிவித்தார். நடப்பு நிலையை விளக்கி, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் முறைப்படி இக்ராஃவின் சார்பில் மின்னஞ்சல் அனுப்பி, கூடுதல் அனுசரணைகளைப் பெற முயற்சிக்குமாறும், இது விஷயத்தில் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பேற்றுள்ள தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) அமைப்பிற்கு - குறிப்பாக அதன் தலைவரும் - இக்ராஃ தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இது விஷயத்தில் கூடுதல் பொறுப்புள்ளதாகவும் சிங்கப்பூர் காயல் நல மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் தெரிவித்தார்.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் - இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து நடத்தும் - “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சியை - ஜூன் 23-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் மாநில சாதனை மாணவியுடன் நேர்காணல் நிகழ்ச்சி, அன்று மாலையில் பரிசளிப்பு விழா என்ற அடிப்படையில் நடத்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தலைசிறந்த கல்வியாளர்களையும், மாவட்ட ஆட்சியரையும் அழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரே மேடையில் பிற மன்றங்களின் நிகழ்ச்சிகள்:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெளிமேடையில் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது... பின்னர், அந்த மேடையிலேயே கத்தர் காயல் நல மன்றம் நடத்தும் “நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி - Inter School Quiz Competition” நடத்தப்படுகிறது... இதற்காக, அரங்கச் செலவுகளில் தம் பங்கை அம்மன்றம் இக்ராஃவிற்கு முறைப்படி அளித்து வருகிறது.
அதுபோல, கடந்த காலங்களில் “நகர நல்லாசிரியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி”யை அமீரக (துபை) காயல் நல மன்றம் தனி நிகழ்ச்சியாக நடத்தி வந்தது... அதன் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, நல்லாசிரியர்களுக்கான ஊக்கத்தொகையை இக்ராஃவின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போதே வழங்கி வருகிறது.அந்த வகையில் துபாய் காயல் நல மன்றமும் அரங்கச் செலவுகளில் தம் பங்கை செலுத்தின. இதர காயல் நல மன்றங்களும் சாதனை மாணவ-மாணவியருக்கான தமது பரிசுகளை இந்நிகழ்ச்சியிலேயே வழங்கி வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுச் செலவுகள் பெருமளவில் ஏற்படும் நிலையில், உலக காயல் நல மன்றங்கள் தத்தம் பங்கிற்கு சிறு தொகையளித்தால், அச்செலவை தயக்கமின்றி ஈடு செய்ய இயலும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒரே பருவத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் வேண்டுகோள்:
உலக காயல் நல மன்றங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் “கல்வி விழிப்புணர்வு - வழிகாட்டு நிகழ்ச்சி”களை நடத்துவதால், தம் பள்ளி மாணவர்களை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அடிக்கடி அனுப்பி வைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும், மாணவ-மாணவியரின் நன்மைக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளே அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக மாறிவிடக்கூடாது என்ற அடிப்படையில் ஒரே பருவத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி முடிக்குமாறும், நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்கருத்தின் நியாயம் உணரப்பட்டுள்ளதாகவும், இனி வருங்காலங்களில் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன் மாணவரை” நிகழ்ச்சி நடத்தப்படும் காலகட்டத்திலேயே இதர மன்றங்களும் தமது நிகழ்ச்சிகளை நடத்திட முயற்சிக்கலாம் எனவும் இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது கூட்டத்தில் தெரிவித்தார்.
பரிசுகளுக்கு மன்றங்களின் அனுசரணை:
ஒரே சாதனைக்கு பல பரிசுகள் வழங்கப்படுவதைத் தவிர்த்திடும் நோக்குடன், நகர சாதனை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் பரிசு வகைகள் இக்ராஃ நிர்வாகத்தால் முறைப்படுத்தப்பட்டு மன்றங்களுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இக்ராஃ நிர்வாகி, நாளது தேதி வரை சில மன்றங்கள் தமது பரிசு வகை விருப்பத் தேர்வைத் தெரிவித்துள்ளதாகவும், மீண்டும் ஒரே பரிசு வகைக்கு பல மன்றங்கள் பொறுப்பேற்கும் நிலை - மன்றங்கள் அறியாத நிலையிலேயே ஏற்பட்டுள்ளதால், இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சிக்கு முன்பாக அவற்றை இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
விளம்பரங்களை அனுமதித்தல்:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் தமது நிறுவனம் குறித்து விளம்பரப்படுத்த சில மணித்துளிகள் நேரம் ஒதுக்கித் தருமாறும், அதற்கான நன்கொடைத் தொகையை வழங்க ஆயத்தமாக உள்ளதாகவும், தனியார் நிறுவனமொன்று விடுத்த வேண்டுகோள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டுச் செலவுகளை ஈடு செய்ய விளம்பர நடவடிக்கைகளை அனுமதிக்கலாம் என்றும், அதே வேளையில் நிகழ்ச்சி நிகழ்முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
விளம்பரங்களை வகைப்படுத்தல்:
அதன்படி, விளம்பர நிறுவனங்கள் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் தமது நிறுவனங்களை விளம்பரப்படுத்த, பல்வேறு வரைமுறைகளைக் கொண்டு, Platinum Package, Diamond Package, Golden Package என மூன்று வகைகளாக விளம்பரங்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி விளம்பர அளவு - தன்மை - இட நிர்ணயம் செய்யலாம் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இதுகுறித்து கலந்தாலோசித்து, விளம்பர வகைகளை வரையறை செய்வதற்காக ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சாளை ஜியாவுத்தீன், ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதர் என்ற சின்ன லெப்பை, எஸ்.அப்துல் வாஹித் ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
இக்ராஃ நலப்பணிகளுக்கு ஓமன் கா.ந.மன்றம் நிதியளிப்பு:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஓமன் காயல் நல மன்றத்தின் தலைவர் அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப், அதன் செயற்குழு உறுப்பினர் கே.எம்.எம்.அப்துல் காதிர் ஆகியோர் இக்ராஃவின் கல்விச் சேவைகள் சிறப்பாக இருப்பதை அறிந்து, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக தமது ஓமன் காயல் நல மன்றத்தின் சார்பில் ரூபாய் 20,000 தொகையை நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி இக்கூட்டத்திலேயே அத்தொகையை இக்ராஃ தலைவரிடம் அளித்தனர். அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கருத்து தெரிவித்த கே.எம்.எம்.அப்துல் காதிர், காயல்பட்டினத்தில் கல்வி தொடர்பான அனைத்து அம்சங்களையும் முழுமையாக உள்ளடக்கியதாக இக்ராஃ திகழ வேண்டும் என்றும், அனைத்தையும் இப்போதே செய்ய இயலாது என்றாலும், அனைத்தையும் செய்ய இப்போதே உறுதியெடுத்துக்கொள்ள வேண்டுமெனவும், இயன்ற செயல்திட்டங்களை அவ்வப்போது செய்து முடிக்க வேண்டுமெனவும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
அதற்கு விளக்கமளித்த இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது, கல்வித்துறை தொடர்பான அனைத்து சேவைகளையும் செய்ய இக்ராஃ கொள்கை ரீதியாக ஆயத்தமாகவே உள்ளதாகவும், நடைமுறை சாத்தியங்களையும், தகுந்த பொருளாதாரத்தையும் கருத்திற்கொண்டு அவ்வப்போது செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், இனியும் அது தொடரும் என்றும் தெரிவித்தார்.
அபூதபீ கா.ந.மன்றம் குறித்த அறிமுகவுரை:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - அபூதபீ காயல் நல மன்றத்தின் மக்கள் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய், செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ ஆகியோர் தம் மன்றத்தின் செயல்திட்டங்கள் குறித்து சுருக்கமாக அறிமுகப்படுத்திப் பேசினர்.
அபூதபீ கா.ந.மன்றத்தின் புதிய பரிசு வகை:
09.05.2012 அன்று தம் மன்றத்தின் பிரதிநிதிகள் இக்ராஃ நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்பின்போது வழங்கப்பட்ட ரூபாய் 10,000 பரிசுத் தொகையை, நடப்பாண்டு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை -2012” நிகழ்ச்சியின்போது, 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற - திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு, முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசுத் தொகைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
ஏற்கனவே இறுதி வடிவம் செய்யப்பட்ட இக்ராஃவின் பரிசு வகைகளில் இது இடம்பெறாததால், புதிய பரிசு வகையாக இதனை அறிவிக்க இக்ராஃ ஆயத்தமாக உள்ளதாகவும், அதே நேரத்தில் இப்பரிசு வகையை ஆண்டுதோறும் அம்மன்றம் பொறுப்பேற்குமா என்றும் கூட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு விடையளித்த அபூதபீ காயல் நல மன்றத்தினர், இதுகுறித்து தம் மன்ற நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சிக்கு முன்பாக தெரிவித்து விடுவதாகத் தெரிவித்தனர்.
இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்கள்...
இக்கூட்டத்தில், ரூபாய் 15,000 தொகை செலுத்தி, இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதற்கு நேரிலும் - தொலைபேசி வாயிலாகவும் விருப்பம் தெரிவித்துள்ள,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ்,
அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத்,
ஓமன் காயல் நல மன்ற தலைவர் எஸ்.எச்.அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப்,
ஓமன் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கே.எம்.எம்.அப்துல் காதிர்,
ஹாஜி வாவு ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத்,சிங்கப்பூர்
ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களது விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்ட பின்னர், அடுத்த கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கல்வி உதவித்தொகை நேர்காணல் குழு:
இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியரை நேர்காணல் செய்திட,
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி,
ஜெஸ்மின் ஹாஜி ஏ.கே.கலீல்,
ஹாஜி எஸ்.ஐ.புகாரீ,
எஸ்.அப்துல் வாஹித்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதியன்று இக்ராஃ அலுவலகத்தில் நேர்காணலை நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை நேர்காணல் குழு:
ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள, விண்ணப்பிக்கவுள்ள மாணவ-மாணவியரை நேர்காணல் செய்திட,
ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன்,
ஜெஸ்மின் ஹாஜி ஏ.கே.கலீல்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. ரமலான் நோன்பு முடிந்த பின் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நாளில் இக்ராஃ அலுவலகத்தில் இந்நேர்காணலை நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012:
நடப்பாண்டு “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சியை, இம்மாதம் 22, 23 தேதிகளில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் நிர்வாகத்திற்கு முறைப்படியான அனுமதி கோரி கடிதம் அனுப்புவது என்றும்,
22-06-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை கத்தர் காயல் நல மன்றம் நடத்தும் “நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி - Inter School Quiz Competition” நடத்துவது என்றும்,மறுநாள் 23.06.2012 சனிக்கிழமையன்று காலை மாநில சாதனை மாணவியுடன் நேர்காணல் நிகழ்ச்சியையும்,அதே அன்று (23.06.2012) மாலை சாதனை மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழாவையும் நடத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது,
தீர்மானம் 4 - புதிய பரிசு வகை இணைப்பு:
இக்ராஃவின் - சாதனை மாணவர்களுக்கான முறைப்படுத்தப்பட்ட பரிசு வகைகளில், எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில் - திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவ-மாணவியருள் முதல் மூன்றிடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கென புதிய பரிசு வகையை இணைக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - வாழ்நாள் உறுப்பினர்களுக்கு நன்றி:
29.05.2012 அன்று நடைபெற்ற இக்ராஃவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்திலும், நடப்பு செயற்குழுக் கூட்டத்திலும், ரூபாய் 15,000 செலுத்தி, இக்ராஃவின் வாழ்நாள் உறுப்பினர்களாக (Life Members) இணைய விருப்பம் தெரிவித்துள்ள அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 6 - ஓமன் காயல் நல மன்றத்திற்கு நன்றி:
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாக செலவினங்களுக்காக ரூபாய் 20,000 நிதியுதவியளித்துள்ள ஓமன் காயல் நல மன்றத்திற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்தொகையை ஆண்டுதோறும் வழங்கியுதவுமாறு அம்மன்றத்தை இக்ராஃ அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது .
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
[செய்தி வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. @ 08:45/09.05.2012] |