காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு பொருட்கள் - 29.05.2012 அன்று பொது ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அடங்கிய பிரசுரம், நகர் முழுவதும் ஏலம் நடைபெறும் தினத்திற்கு 15 தினங்களுக்கு முன் காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்பட்டது.
அந்த அடிப்படையில், 29.05.2012 அன்று, காயல்பட்டினம் நகராட்சியில் பொது ஏலம் நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆடு-மாடு அறுப்புத் தொட்டி - டிப்போ (Slaughter House)க்கான ஏலத்தை,
எம்.எச்.அப்துல் வாஹித் - ரூ. 1,26,999 தொகைக்கும்,
கே.எம்.காதர் முஹ்யித்தீன் - ரூ.1,45,000 தொகைக்கும்,
ஏ.செல்வம் - ரூ.1,50,000 தொகைக்கும்,
எஸ்.விஜயன் - ரூ.1,81,700 தொகைக்கும்
மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் கேட்டிருந்தனர். இந்நால்வரில், கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டிருந்த எஸ்.விஜயனுக்கு - 01.06.2012 முதல் 31.03.2013 வரையிலான பருவத்திற்கு (10 மாத காலத்திற்கு) குத்தகை வழங்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் அவர் காயல்பட்டினம் நகராட்சியில் முழு தொகையையும் செலுத்தி முறைப்படி ஏல குத்தகையைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், 06.06.2012 அன்று குத்தகைக்காரர் டிப்போவில் வசூலுக்குச் சென்றபோது, அறுக்கப்பட்ட கிடாயின் மண்ணீரலை (சுவரொட்டி / பல்குத்தி) கேட்டதாகவும், இறைச்சி வணிகர்கள் அதனைத் தர மறுத்ததாகவும், இதனால் இரு தரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதன்பிறகு, ஆறுமுகநேரி காவல்துறையினர் தலையிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், அன்று மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த இறைச்சி வணிகர்கள், நகர்மன்றத் தலைவரிடம் காலையில் நடந்த நிகழ்வை விவரித்தனர். அனைத்தையும் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், குத்தகைக்காரரை அழைத்துப் பேசினார்.
அறுக்கப்படும் கிடாயின் மண்ணீரல் - குத்தகைதாரருக்கே என்ற வழமையை மனதிற்கொண்டே தான் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்ததாக குத்தகைதாரர் தெரிவித்தார். ஆனால், மண்ணீரல் இறைச்சி வணிகருக்கே சொந்தம் எனவும், கிடா அறுப்புக்கு ரூ.5 தொகையும், மாடு அறுப்புக்கு ரூ.6 தொகையும் மட்டுமே குத்தகைக்காரருக்குத் தர இயலும் என்றும் இறைச்சி வணிகர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்குமாறு அவர்களிடம் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
மண்ணீரல் தரப்படாவிடில் தனக்கு நஷ்டமே ஏற்படும் என்றும், எனவே ஏலத்தை தொடர்ந்து எடுத்து நடத்த இயலாத நிலையில் உள்ளதாகவும் குத்தகைதாரர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தனித்தனியே தீவிர கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், மறுஏலம் விடப்படும் பட்சத்தில், அதே குத்தகைத் தொகை அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு தாங்களே ஏலம் எடுக்க நகர இறைச்சி வணிகர்கள் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், எஸ்.விஜயன் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது. விரைவில் ஆடு-மாடு அறுப்புத் தொட்டி மறு ஏலம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. |