தமிழக அரசின் - நகர்ப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள இளைஞர்களுக்கு கணினி பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் இன்றும் நாளையும் காயல்பட்டினம் நகராட்சியில் வழங்கப்படுகிறது.
இன்று காலை 10.30 மணியளவில் விண்ணப்பங்கள் வினியோகம் துவக்கி வைக்கப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கி, பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, விண்ணப்பப் படிவங்களையும் வழங்கினார்.
நகராட்சி ஆணையர் அஷோக் குமார், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோரும் மாணவியருக்கு விண்ணப்பங்களை வழங்கினர். மொத்தம் 4 மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவர்கள், திருச்செந்தூரிலுள்ள தனியார் கணினி நிறுவனத்தில், Desk Top Publishing - DTP, Hardware, BPO, Web Designing, 3D Animantion, Tally, AutoCad ஆகிய பயிற்சிகளை இலவசமாகப் பெறவுள்ளனர்.
இம்முகாம் குறித்து காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-
*** வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர தகுதி பெற்றவர்கள்...
*** பயிற்சிக் காலம் 6 மாதங்கள்...
*** கணினியில் அடிப்படை அறிவு (Basic Computer Knowledge) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்...
*** வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளோர் பட்டியலில் இடம்பெறாத - ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பெறப்படுகிறது... அவர்களின் ஏழ்மை நிலை குறித்து ஆய்ந்தறிந்த பின்னர், நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, நகராட்சி மண்டல மேலாரின் அனுமதி கிடைக்கப்பெற்றால் - நகராட்சி நிதியிலிருந்து அவர்களும் பயிற்சி பெற வாய்ப்பளிக்கப்படும்...
இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தெரிவித்தார். நடப்பு விண்ணப்பங்கள் வினியோகம் குறித்து, நகர்மன்றத்தின் 18 உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். |