காயல்பட்டினம் 12ஆவது வார்டுக்குட்பட்ட ஓடக்கரையில், திருச்செந்தூர் சாலையையொட்டிய தனியார் நிலத்தில் நேற்று காலை தீ கொளுந்தவிட்டு எரிந்தது. ஒடை மரங்கள் நிறைந்துள்ள இந்நிலப்பரப்பில், ஆங்காங்கே பிரிந்து பிரிந்து - ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியே நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
நண்பகல் 11.15 மணியளவில், அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியை நெருப்பு நெருங்கிக் கொண்டிருந்ததால், தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர் பரவலாக எரிந்துகொண்டிருந்த தீயை நீரூற்றி அணைத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் வாகனத்தில் நீர் தீர்ந்துவிட்டதால், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் தண்ணீர் வாகனத்திலிருந்து இயன்றளவுக்கு தீ அணைக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தீயணைப்பு வாகனமும், தனியார் தண்ணீர் வாகனம் ஒன்றும் அவ்விடம் வந்து சேர்ந்தன. திருச்செந்தூர் தீயணைப்பு வாகனமும் மீண்டும் நீரேற்றியவாறு நிகழ்விடம் வந்தது.
அனைத்து வாகனங்களிலிருந்தும் தீ எரிந்துகொண்டிருந்த பல பகுதிகளிலும் நீரூற்றி அணைக்கப்பட்டது.
நகராட்சி பணி நிமிர்த்தமாக திருச்செந்தூர் சென்றுகொண்டிருந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோர் நிகழ்விடம் அருகே தம் வாகனத்தை நிறுத்தி, துறைசார் அதிகாரிகளுக்குத் தொடர்புகொண்டு தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் நெடுஞ்சாலை ரோந்து காவல்படை துணை ஆய்வாளர் பூவலிங்கம் பாதுகாப்புப் பணிகளைச் செய்தார். காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார், நகர்மன்ற உறுப்பினர்கள் ரெங்கநாதன் என்ற சுகு, ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர் இச்சம்பவத்தின்போது உடனிருந்தனர். இந்நிகழ்வில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பாகவே ஆங்காங்கே சிறு சிறு புதர்கள் தனித்தனியே எரிந்துகொண்டிருந்ததாகவும், நேரம் செல்லச் செல்ல காற்று வேகமாக வீசியதில் பெருமளவில் தீ எரியத் துவங்கியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். |