தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ப்ளாஸ்டிக் கேரி பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரக அலுவலக நுழைவாயிலில் நின்றவாறு மகளிர் சுயஉதவிக் குழுவினர் துணிப்பை வணிகம் செய்கின்றனர். விபரம் பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்திற்குள் ப்ளாஸ்டிக் பைகளைக் கொண்டு செல்வதை அவர் முற்றிலுமாக தடை செய்துள்ளார்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரக நுழைவாயிலில், மகளிர் சுய உதவிக் குழுவினர் துணிப்பைகளுடன் தினமும் காத்திருக்கின்றனர். பல்வேறு தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை தரும் பொதுமக்களிடம் ப்ளாஸ்டிக் கேரி பைகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்கும் அவர்கள், ஒருவேளை அவர்களிடத்தில் ப்ளாஸ்டிக் பை இருப்பதைக் கண்டறிந்தால், அவர்களிடம் நளினமாகப் பேசி, ப்ளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எடுத்துக்கூறி, 5 ரூபாய் கொடுத்து துணிப்பை பெற்றுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பொதுமக்கள் துணிப்பை வாங்க ஒப்புக்கொண்டால், அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு துணிப்பைகளை கையளிக்கின்றனர். வாங்க விரும்பாவிடில், ப்ளாஸ்டிக் பைகளைக் கைப்பற்றி வெறும் பொருட்களுடன் மாவட்ட ஆட்சியரகத்திற்குள் நுழைய அனுமதிக்கின்றனர் மகளிர் சுய உதவிக் குழுவினர்.
மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைக்கு, மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் பெரும்பாலும் இன்முகத்துடன் வரவேற்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது. |