கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, வழமை போல இவ்வாண்டும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை, இம்மாதம் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தின.
இம்முகாமில், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் தலைவர், டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் சசிப்பிரியா ஆகிய - புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர்கள் பங்கேற்று மருந்துவ ஆலோசனைகளை வழங்கினர். காயல்பட்டினத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் 80 பேர் இம்முகாமில் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாமில், மருத்துவ நிபுணர்களுக்கு உதவியாக, மருத்துவப் படிப்பு மாணவர்களான சுல்தான் ராஷித், பீர் முஹம்மத், ஃபஸல் அஹ்மத், ஹாஃபிழ் யாஸர் அரஃபாத் ஆகியோர் துணைப் பணியாற்றினர்.
முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வருகை தந்து, முகாம் நிகழ்வுகளைப் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
முகாம் நிறைவில், மருத்துவ நிபுணர்கள், செவிலியர் மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் தலைமையில், அதன் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் மீராஸாஹிப், அதன் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, முஹம்மத் இப்றாஹீம் (48), அஹ்மத் (48), காதர் சுலைமான், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், பாதுல் அஸ்ஹப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, சாளை பாதர் ஆகியோர் முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
பொதுவாக புற்றுநோய் என்பது முற்றிய பிறகே தன்னை அடையாளங்காட்டும். அதற்குப் பிறகு சிசிக்சை செய்வதால் பெரிய அளவில் பயனெதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதே நேரத்தில், இதுபோன்ற முகாம்களின் மூலம் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், மிக இலகுவாக சிகிச்சை மூலம் சரிசெய்திட இயலும் என முகாமில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். |