காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் தென்புறத்தில், சித்தன் தெரு பகுதியில் பள்ளி வளாகத்தையொட்டி ஒரு மையவாடி (மண்ணறைத் தோட்டம்) அமைந்துள்ளது. சித்தன் தெரு, கீழ சித்தன் தெரு, கீழ நெய்னார் தெரு பகுதிகளைச் சார்ந்த மரணித்தோரின் உடல்கள் (ஜனாஸா) இங்கு அடக்கப்படுவது வழமை.
இந்த மையவாடியில், புற்பூண்டுகள் பெரும்புதர்களாக வளர்ந்து, தரைப்பகுதியை முழுமையாக மறைத்து படர்ந்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் சித்தன் தெருவைச் சார்ந்த வயது முதிர்ந்த ஒரு பெண் மரணித்ததையடுத்து, அடக்கம் செய்வதற்காக அந்த மையவாடிக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
பள்ளியின் அனைத்து மையவாடிகளையும் சுத்தம் செய்வதற்காக செலவு மதிப்பீடு பெறப்பட்டுள்ளதாகவும், அளவுக்கதிகமான தொகை தரப்பட்டுள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பின்னர், கடந்த 16.05.2012 அன்று காலையில், சித்தன் தெருவைச் சார்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, மையவாடியிலுள்ள புதர்களையும், முட்செடிகளையும் அகற்றி முழுமையாக துப்புரவு செய்து, குப்பைகளை தெருவோரத்தில் சேகரித்து வைத்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு குப்பைகளை அகற்றித் தரக்கோரி மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பெரும்பகுதி குப்பைகளை அகற்றினர். முட்செடிகள் அடங்கிய எஞ்சிய குப்பையை பொதுமக்களே துப்புரவு செய்து சாலையோரத்தையும் தூய்மைப்படுத்தியுள்ளனர். |