காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, இம்மாதம் 10ஆம் தேதியன்று (நேற்று) மாலை 04.30 மணியளவில், காயல்பட்டினம் - அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். தஃவா சென்டர் நடத்தும் புனித குர்ஆன் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஃபாயிஸ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இவ்விழாவில், இஸ்லாமைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி மாணவ-மாணவியர் தமது அனுவங்களை உரைகளாக அளித்தனர்.
இவ்விழாவில், இஸ்லாமிய அழைப்பாளரும் - எழுத்தாளருமான சிவசுப்பிரமணியம் என்ற சிராஜுத்தீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “சாதி ஒழிந்தது” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றினார்.
இவ்விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு, அசைபட விரிதிரை வசதியுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். தொலைக்காட்சி இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) தலைமையில், எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.அப்துல் ஜப்பார், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், ஆரிஸ், உமர், பிலால் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |