தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டினம் வழியே வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் - ஊருக்குள் வராமல், அடைக்கலாபுரம் வழியே அடுத்தடுத்து செல்வதாக அனுதினமும் கூறப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், 09.06.2012 அன்று (நேற்று முன்தினம்) நண்பகல் 12.40 மணி முதல் 14.02 மணி வரை, ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி எதிரில் நின்றவாறு க்ளிக்கியதில் கிடைத்த காட்சிகள்தான் இவை.
பெரும்பாலும் மதுரையிலிருந்து தூத்துக்குடி - காயல்பட்டினம் வழியே திருச்செந்தூருக்கு சென்று சேர வேண்டிய பேருந்துகள்தான் இவ்வாறு குறுக்கு வழியில் தயக்கமின்றி செல்கின்றன. இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் காயல்பட்டினத்தைச் சார்ந்த பயணியர் தமதூருக்கு பயணச்சீட்டு கேட்டால், “காயல்பட்டினத்திற்குள் போகாது” என்று ஒரே வாக்கியத்தில் உறுதியாகச் சொல்லும் நடத்துநர்கள், சற்று விவரமான பயணியர் வாக்குவாதம் செய்தால் மட்டும் - முகம் சுளித்து எரிச்சலுடன் பயணச்சீட்டை வழங்கிவிட்டு, ”வேண்டாத மாமியார்” வீட்டிற்கு வெறுப்புடன் செல்லும் மாப்பிள்ளை போல் காயல்பட்டினத்திற்குள் வந்து செல்கின்றன.
பேருந்து செல்வதற்கான வழித்தடங்களை அதற்கான அதிகாரிகள்தான் நிர்ணயிப்பர் என்ற நிலையைக் கடந்து, அந்தந்த பேருந்துகளின் ஓட்டுநர்களும் கூட தன்னிச்சையாக நிர்ணயிக்கலாம் என்பதை அனுதினமும் நிரூபிக்கும் இக்காட்சிகள் - இதன் இழப்பை பொதுமக்கள் உணராத வரை அன்றாடம் காட்சிகளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தகவல் & படங்கள்:
M.H.அப்துல் கஃபூர்.
|