இம்மாதம் 30ஆம் தேதியன்று நடைபெறும் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுமென, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நடப்பு செயற்குழுவின் கடைசிக் கூட்டம் 09.06.2012 அன்று, அமைப்பின் செயலாளர் யு.முஹம்மத் ஷேக்னா இல்லத்தில் - அவரது கிராஅத்துடன் துவங்கியது.
மன்றத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நடப்பு செயற்குழுவின் கடைசிக் கூட்டம் இது என்பதால், புதிய பருவத்திற்கான செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவை நியமித்தலே இக்கூட்டத்தின் முக்கிய பொருளாக இருக்கும் என்று அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், கடந்த கூட்ட அறிக்கையை, மன்றத்தின் துணைத் தலைவர் எஸ்.ஏ.நூஹ் சமர்ப்பித்து, அவை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து விவரித்துப் பேசினார்.
கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை - கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து, கடந்த 03.06.2012 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்பச் சிற்றுலா நிகழ்ச்சி 06.05.2012 அன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைப்பின் வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.ஹஸன் தாயகத்திலுள்ளதால், மன்றத் தலைவர் அப்துல் அஜீஸ் சமர்ப்பித்தார். கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
நகர்நலன் குறித்த உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சிறுதொழில் உதவி:
அமைப்பிற்கு விண்ணப்பிக்கும் - காயல்பட்டினத்தில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தினரை சிறுதொழில் செய்து வருமானமீட்டச் செய்திடும் நோக்குடன் அவர்களுக்கு தொழிற்கருவிகளை - காயல்பட்டினம் ஐ.ஐ.எம். நிறுவனம் மற்றும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்புகளின் மூலம் உதவியாக வழங்கிட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - வருடாந்திர பொதுக்குழு:
2012ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, இம்மாதம் 30ஆம் தேதியன்று, ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜிதிலுள்ள சமுதாயக் கூடத்தில் நடத்தவும், அக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட - அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீயின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |