காயல்பட்டினம் கோமான் மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கோமான் ஜமாஅத்தில் இயங்கி வரும் கோமான் நற்பணி மன்றத்தின் சார்பில், சாதனை மாணவ-மாணவியருக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா 09.06.2012 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு, கோமான் நடுத்தெருவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விழாவிற்குத் தலைமை தாங்கினார். லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், கோமான் ஜமாஅத் பிரமுகர் எஸ்.யஃகூப், கோமான் நற்பணி மன்றத்தின் தலைவரும், கோமான் ஜமாஅத் செயலாளருமான ஹாஜி என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், கோமான் ஜமாஅத் தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், கோமான் ஜமாஅத் உதவி தலைவர் என்.எம்.ஃபாரூக், அதன் பொருளாளர் எஸ்.எஸ்.தாஹிர் மற்றும் பிரமுகர்களான ஹாஜி எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், ஹாஜி எஸ்.எம்.கைசாலி மரைக்கா, ஹாஜி எம்.ஒய்.ஹாஜா மெய்தீன், ஹாஜி கே.ஆர்.மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.எச்.முஹம்மத் மல்ஹர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட நெல்லை ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநரும், ஷிஃபா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹாஜி எம்.கே.எம்.ஷாஃபீ, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், அரசு போக்குவரத்துக் கழக திருச்செந்தூர் பணிமனை மேலாளர் ஜி.பாஸ்கர், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ஜஃபர் ஹுஸைன் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, சாதனை மாணவ-மாணவியரைப் பாராட்டிப் பேசினர்.
பின்னர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் மேடையில் முன்னிலை வகித்தோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் வெளியான தமிழக அரசின் ப்ளஸ் 2 பொதுத் தேர்விலும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் நகரளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கும், மனையியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற மாணவிக்கும், கோமான் ஜமாஅத் அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், இவ்வாண்டு ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா பட்டங்களைப் பெற்ற கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த சிறுவர்-சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளின் இறுதியில் அனைவருக்கும பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், கோமான் நற்பணி மன்றம் சார்பில் முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசகள் வழங்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையைத் தொடர்ந்து, எம்.ஏ.ஹாஜி மலங் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளனைத்தையும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் மு.அப்துல் ரசாக் நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
|