கேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கேரள மாநிலம் - கோழிக்கோடு நகரில் இயங்கி வரும் எமது மலபார் காயல் நல மன்றத்தின் 08ஆவது பொதுக்குழுக் கூட்டம், 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு, நெய்னா காக்கா அவர்கள் இல்லத்து மொட்டை மாடியில் இறையருளால் சிறப்புற நடைபெற்றது.
மன்றத்தின் துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் அவர்களின் மகள் ஜொஹரா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்து, அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை வழமையை விட குறைவுதான் என்றாலும், மழையையும் பொருட்படுத்தாது இவ்வளவு பேர் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று தெரிவித்தவாறு தனதுரையைத் துவக்கி அவர், மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் நகரில் புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகளைச் செய்வதற்காக உஸ்மான் லிம்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களால் முழுமையாக அப்பணியை செய்யவியலாத சூழ்நிலையில் - அப்பொறுப்பிலிருந்து நீங்கிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அக்குழு கலைக்கப்படுவதாகத் தெரிவித்த செயலாளர், மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில், PUBLIC AWARENESS COMMITTEE - PAC என்ற பெயரில் புதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் மூலம் நகர மக்களின் உடல் நலம் குறித்த செயல் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மன்றத்தின் அலுவலகத்திற்கான வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற இடர்பாடுகளின்றி மன்றத்தின் நகர்நலப் பணிகள் சீராக நடைபெற மன்றத்திற்கென சொந்த அலுவலக கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, அதற்கான பணிகளை இப்போதிலிருந்தே துவக்கிட வேண்டுமென்று தெரிவித்தார்.
சென்ற கூட்டத்திற்குப் பிறகு - கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற மன்றத்தின் நகர்நலப் பணிகளை விவரித்த அவர், இப்பருவத்தில் மருத்துவ உதவியாக ரூ.79,000 தொகை உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
மன்றத்தின் நடப்பு நிர்வாகக் குழுவின் 3 ஆண்டு கால அளவைக் கொண்ட பொறுப்புக் காலம் நிறைவடைய இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், இதுகாலம் வரை, மன்றச் செயலாளரின் ஊக்கத்துடன் கூடிய உற்சாக வழிகாட்டலில் மன்றத்தின் சார்பில் நகர்நலப் பணிகள் சிறப்புற செய்து முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், 5 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கமிட்டியின் மூலம் 10 பேர் கொண்ட செயற்குழு தேர்ந்தெடுக்கப்படும் நடப்பு நடைமுறையை வரும் பொதுக்குழுவில் மாற்றியமைத்து, 15 பேரையும் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உறுப்பினர்கள் உள்ளனர் என்ற நிலையிலும், நகர்நலப் பணிகளுக்காக அனைத்து உறுப்பினர்களும் தந்த பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று அவர் புகழ்ந்துரைத்தார்.
பின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் சமர்ப்பிக்க, மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளர் நூருல் அமீன் அவர்களால் கணக்குத் தணிக்கை செய்யப்பட்ட பின்னர், கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிறப்புரையாற்றினார். அனாட்டமிக் தெரபி எனும் செவிவழி சிகிச்சை குறித்து விவரித்த அவர், நோயற்ற வாழ்விற்கான வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய இந்த சிகிச்சை குறித்த டி.வி.டி. தன் வசமுள்ளதாகவும், கேட்போருக்கு இலவசமாக வழங்க ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், அனாட்டமிக் தெரபி குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு, அவரும் - மன்றச் செயலாளரும் விளக்கமளித்தனர்.
பின்னர், மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின், குழந்தைகள் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு ஹில் டாப் மேனிலைப்பள்ளியில் பயின்று, CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ தரத்தைப் பெற்று சாதனை புரிந்த - மன்ற உறுப்பினர் செய்யித் தமீம் அவர்களின் மகன் எஸ்.டி.ஸமீர்,
காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில், 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்ற - மன்ற உறுப்பினர் எஸ்.இ.மொகுதூம் அப்துல் காதிர் அவர்களின் மகள் எம்.ஏ.கே.உம்மு ஸல்மா ரைஹானா ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர், மன்றத்தின் துணைத்தலைவர் முஹம்மத் ரஃபீக் உரையாற்றினார். துணைச் செயலாளர் தெரிவித்த அனாட்டமிக் தெரபி குறித்த தகவல்களடங்கிய டி.வி.டி.யை தான் பார்த்ததாகவும், மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய அதனை அனைவரும் பார்த்துப் பயன்பெற வேண்டுமென்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மன்றப் பணிகள் குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் விளக்கமளித்தனர்.
நிறைவாக, யு.எல்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கூட்ட நிகழ்வுகளின் படத்தொகுப்பைக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஐதுரூஸ் Seena,
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:21/14.06.2012] |