காயல்பட்டினம் தீவுத்தெரு - அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு, கண் மருத்துவ ஆலோசனை இலவச முகாம், 15.06.2012 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்காட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய இம்முகாமில், கண் மருத்துவ ஆலோசகர் எஸ்.ஜெயகாந்தன் தலைமையில், விழி ஒளி ஆய்வாளர் எஸ்.சண்முகலட்சுமி, முகாம் மேலாளர் வி.சுப்பிரமணியன், முகாம் உதவியாளர் ராஜேந்திர குமார் ஆகியோரடங்கிய குழுவினர் மாணவியருக்கு கண் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண் மருத்துவ ஆலோசகர் எஸ்.ஜெயகாந்தன், சென்னையில் அகர்வால் கண் மருத்துவமனை துவக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மாணவ-மாணவியருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அகர்வால் கண் மருத்துவமனைக்கு வருகை தரும் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த 3 பேருக்கு கண் மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கண் தொடர்பான பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமது மருத்துவமனையில் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முகாம் ஏற்பாடுகளை, ஐக்கிய சமாதானப் பேரவை மேலாளர் எம்.செய்யித் முஹம்மத் புகாரீ, “சுலைமானிய்யா ரியல்ஸ்” ஷெய்கு சுலைமான், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |