காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
26ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பி.ஏ.காஜா முஈனுத்தீன் பாக்கவீ வழங்கினார்.
நேற்று இரவு முதல் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் துவங்கின. இரவு 07.00 மணிக்கு, மிஃராஜ் தினத்தை முன்னிட்டு மிஃராஜ் மவ்லித் ஓதப்பட்டது. மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் துணைத்தலைவர் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் சித்தீக் மிஸ்பாஹீ துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
27ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ வழங்குகிறார்.
இன்றிரவு 07.00 மணிக்கு மஜ்லிஸை உருவாக்கியோர் மற்றும் அதற்காக நிரந்தர தானதர்மங்களைச் செய்த வாக்கிஃபூன்கள் மீது கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு, குருவித்துறைப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ தலைமை தாங்குகிறார். மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ துஆ ஓத நிகழ்ச்சிகள் நிறைவுறுகிறது.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.
|