காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நேற்று நடத்தப்பட்ட துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் வீடுகளுக்கான மின் வினியோகத்தில் அழுத்தம் குறைவாக இருந்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மின் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்ந்தறிந்து, நகரில் துணை மின் நிலையம் (Sub Station) அமைக்கப்பட்டால் இப்பிரச்சினை நிரந்தரமாகத் தீரும் என மின் வாரிய உயரதிகாரிகள் ஆலோசனையளித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் - நகரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நிறைவில், காயல்பட்டினம் துளிர் பள்ளிக்கு தென்கிழக்கில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, 22.10.2011 அன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் - அந்நிலத்தை மின்வாரியத்திடம் கையளித்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்நிலத்தில், துணை மின் நிலையம் அமைவதற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா 20.06.2012 பதன்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலை வகித்தார்.
துவக்கமாக மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ ஓதி அடிக்கல் நாட்டு விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் மின்வாரிய அதிகாரிகள் சார்பில் சடங்குகள் செய்யப்பட்டது.
பின்னர் துவங்கிய மேடை நிகழ்ச்சியில், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அவர் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு:-
“காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவதற்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை... கால தாமதமானால் இத்திட்டம் வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடும்” என்று மின்வாரிய செயற்பொறியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது விஷயத்தைக் கருத்திற்கொண்டு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை காரியத்தில் இறங்கி, காயல்பட்டினம் புளியங்கொட்டையார் குடும்பத்தினருக்குச் சொந்தமான 90 சென்ட் நிலத்தை 18.5 லட்சம் ரூபாய்க்கு பெற்றனர். இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தன் பங்களிப்பாக ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள் ஐம்பதினாயிரம் ரூபாய் தந்தார்கள்... இதர நகரப் பிரமுகர்களும் தம் பங்களிப்பை தந்தார்கள்...
பின்னர் எனது தலைமையில் சென்னையில் வசூலில் இறங்கினோம். அதன் பலனாக, ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்கள் தன் பங்களிப்பான 3 லட்சம் ரூபாய் தொகையுடன், எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் நிறுவத்தார் சார்பில் மொத்தம் 7 லட்சம் ரூபாய் நன்கொடையளித்தார்.
இவ்வாறாக தொகை ஒருவாறு சேகரிக்கப்பட்டு, நில உடமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலத்திற்குச் சொந்தமான புளியங்கொட்டையார் குடும்பத்தினர் இந்த ஊரில் பேருந்து நிலையம், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்கள்... இன்றும் இந்நிலத்தை அவர்கள் வழமையாக விற்கும் தொகையை விட குறைந்த தொகைக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பின்னர் இந்நிலம் மின்வாரியத்திடம் சட்டப்படி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் சில சோதனைப் பணிகளை மேற்கொள்ள இவ்வளவு நாள் கால அவகாசம் ஆயிற்று.
இங்கே விழாவில் கலந்துகொள்ள வருகை தந்திருக்கும் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவி ஆபிதா ஷேக் அவர்களை நான் மனதார வரவேற்கிறேன். அத்துடன், இங்கே வந்திருக்கின்ற நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளையும் நான் வரவேற்கின்றேன்.
இவ்வாறு ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) தியாகராஜனும், அவரைத் தொடர்ந்து, மின்வாரிய செயற்பொறியாளர் தாமோதரன் உரையாற்றினர். காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் எப்போதோ ஏற்பட்டுவிட்டபோதிலும், இப்போதுதான் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த அவர், மின் வாரியமே செய்து தர வேண்டிய இப்பணியில் - தற்போது மின் வாரியத்திடம் நிதி பற்றாக்குறை இருப்பதன் காரணமாக பொதுமக்களின் உதவி நாடப்பட்டதாகவும், இந்த ஊர் பெரியவர்கள் களமிறங்கி, இன்று இந்த நிலத்தைப் பெற்றுத் தந்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தாமோதரன் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய மின்வாரிய மதுரை மண்டல கட்டுமான செயற்பொறியாளர் சிவலிங்கசாமி, அதிகபட்சமாக எதிர்வரும் 31.12.2012 தேதிக்குள் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், அதற்கான தளவாட சாமான்கள் அனைத்தும் ஆயத்தமாகவே உள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ்வாண்டு பருவ மழை குறுக்கிடாவிட்டால் அடுத்த நான்கு மாதங்களில் கூட இப்பணியை முடித்துவிடலாம் என்றும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி துணை மின்நிலைய வினியோகத்துறை உதவி செயற்பொறியாளர் எலியேசர் உரையாற்றினார். காயல்பட்டினத்திற்கருகில் பணிபுரியும் தன்னை காயல்பட்டினத்தைச் சார்ந்த பெருமக்கள் தம் குடும்பத்தினருள் ஒருவராகவே கருதி வந்ததாகப் பெருமிதப்பட்டுக்கொண்ட அவர், தான் பணி நிறைவு செய்ய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தனது பொறுப்புக்காலத்திலேயே இத்துணை மின் நிலையம் இந்நகரில் அமையப்போவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்து, சலுகை விலையில் நிலம் வழங்கிய புளியங்கொட்டையார் குடும்பத்தினர் சார்பில் ஜே.ஏ.லரீஃப் உரையாற்றினார்.
இந்தப் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்திட ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி, ஹாஜி பிரபுத்தம்பி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்த அவர், இதற்கு முழு முனைப்புடன் செயல்பட்ட காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் முருகனுக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
புளியங்கொட்டையார் குடும்பத்தினர் இந்நகரின் பல்வேறு நலப்பணிகளுக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது இந்த நிலம் தாங்கள் திட்டமிட்டிருந்ததை விட குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுபோல, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு இந்நகரின் முன்னோர்கள் தமது பெருவாரியான நிலங்களை தானமாக அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த துணை மின் நிலைய அமைவிடத்திலுள்ள இரண்டு சாலைகளும் குறுகலானவை என்று சுட்டிக்காட்டிய அவர், மின்வாரியத்தினர் எதிர்பார்ப்பது போல், 30 அடி நீளம் கொண்ட கன்டெய்னர் லாரி வளைந்து திரும்பும் வகையில் இந்தச் சாலைகளில் ஒன்றை அகலமாக்கித் தர, இங்கே வந்திருக்கும் நகர்மன்றத் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அடுத்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். அவரது உரை சுருக்கம் பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான இந்நிகழ்வு நகர சரித்திரத்தில் முக்கியப் பதிவாகும்... இதற்காக முயற்சித்த காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பெரியவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாயிருந்த நகர மக்களுக்கும் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லெண்ணம், நல்ல முயற்சிகள் செய்வது யாராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் நற்கூலி நிச்சயமாக உண்டு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ள இந்த நற்பணி போல, இனி வருங்காலங்களிலும் அனைத்து விஷயங்களிலும் இந்நகரின் பெரியோர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும்... பொதுமக்களும் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், விரைவிலேயே நம் நகராட்சி தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி நகராட்சியாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மின் நிலையத்திற்குத் தேவையான அகலச் சாலையை அமைப்பதற்கு, நானும் - அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து தேவையான அனைத்து காரியங்களையும் செய்து தருவோம் என இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த துணை மின் நிலையத்தின் மூலம் நம் நகரின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற எனது ஆவலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துணை மின் நிலைய திறப்பு விழாவின்போதும் இதே உற்சாகத்துடன் நாம் அனைவரும் இணைந்து பங்கேற்க வேண்டும். அதற்கு வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா சில மணித்துளிகள் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, அதிமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் உரையாற்றினார்.
கடந்த ஐந்தாண்டுகளாக இந்த துணை மின் நிலையம் அமைவதற்கு கடந்த ஆட்சியில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போது அம்மாவின் ஆட்சியில்தான் அது கைகூடியுள்ளது... இங்கு துணை மின் நிலையம் அமைவதற்காக கட்சியின் சார்பில் அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவோம்... மக்களும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும்... என்று தெரிவித்தார்.
அடுத்து, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் உரையாற்றினார். அதிமுகவின் சார்பில் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் பேசியதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளாக இத்துணை மின் நிலையம் அமைவதற்காக பல்வேறு அலைச்சல்களுக்கிடையில் திமுக சார்பில் நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன்... எங்களது துரதிஷ்டம் காரணமாக தற்போது ஆட்சி மாறிய நிலையில் அது திறக்கப்படவுள்ளது... என்று தெரிவித்தார்.
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உரையாற்றிய அதன் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், இதற்காக இரண்டு கட்சிகளும் கருத்து வேறுபட்டுக்கொள்ளத் தேவையில்லை என்றும், யார் குத்தியாவது அரிசியானால் சரிதான் என்றும் தெரிவித்தார்.
நிறைவாக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் உரையாற்றினார்.
மிகுந்த சிரமங்களுக்கிடையில், இந்நகர மக்களின் ஒத்துழைப்புடன் தற்போது இந்த நிலம் வாங்கப்பட்டு, மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நகரில் ஐக்கியம் பேணப்பட வேண்டுமென்றும், அது இருந்தால்தான் நல்ல காரியங்களைச் செய்திட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இந்நகரில் நல்ல பணிகள் நடைபெறுவதற்கு அனைத்து கட்சிகளின் பங்களிப்பும் அவசியம் என்று மேலும் தெரிவித்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், பொருளாளர் எம்.கே.டி.செய்யித் முஹம்மத் அலீ, ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் பெருமாள், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், செல்லப்பாண்டியன், காயல்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் முருகன் மற்றும் ஊழியர்களும்,
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ. |