நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், காயல்பட்டினம் பள்ளிகளில் பயின்ற 18 மாணவர்கள் தேர்ச்சியிழந்துள்ளனர்.
இம்மாணவர்கள் வருட இழப்பின்றி மீண்டும் கல்வி கற்று முன்னேற ஆர்வமூட்டும் நோக்குடன், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் கடந்த பொதுக்குழுவில், செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவாலங்கா அமைப்பின் சார்பில், 04.06.2012 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. கலந்தாலோசனையின் நிறைவில், தேர்ச்சியிழந்த மாணவர்களை இக்ராஃவில் ஒன்றுதிரட்டி, அவர்களின் கண்ணியம் குறையாத வண்ணம் அவர்களுக்கு மேற்படிப்பில் ஆர்வமூட்டி, தேர்ச்சியிழந்த பாடங்களை மீள்தேர்வு மூலம் எழுதச் செய்ய ஊக்குவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கான வழிகாட்டு முகாம், 20.06.2012 புதன்கிழமை காலை 11.30 மணியளவில், இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது. இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், முகாம் நோக்கம் குறித்து, இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் துவக்கவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ மாணவர்களுக்கு வழிகாட்டு உரையாற்றினார்.
சில கவனச் சிதறல்களால் தமது வெற்றியை நழுவி விட்ட மாணவர்கள், இதுவே போதும் என்று இருந்துவிடாமல், அவர்களை ஒன்றுதிரட்டி, நடப்புலகில் உயர்கல்வியின் அவசியம் குறித்து அவர்களுக்கு உணர்த்தி, தேர்ச்சியிழந்த பாடங்களை அம்மாணவர்கள் மீள்தேர்வு எழுத - தம் மன்றம் இக்ராஃவின் ஒத்துழைப்புடன் ஊக்கமளிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதனடிப்படையிலேயே இம்முகாம் நடத்தப்படுவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்த அவர், மேற்கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரத்தில் தாழ்நிலையிலுள்ள மாணவர்களிருப்பின், இருவருக்கு தம் மன்றம் மூலம் ரூ.50,000 செலவில் உயர்கல்விக்கு அனுசரணையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுபோன்று உதவிகள் தேவைப்பட்டாலும் கூட, அவர்களுக்கும் உதவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முகாமில் கலந்துகொள்ளக் கோரி, நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியிழந்த 18 மாணவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியிழந்த மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுள் 3 மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். |