காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
28ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட முத்துச்சுடர் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, புகாரீ இமாம் அவர்களின் வரலாற்றுச் சரித உரையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்கினார்.
நேற்றிரவு 07.00 மணிக்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மீதான மவ்லிதும், இப்னு ஹஜர் இமாம் அவர்கள் மீதான மர்ழிய்யா - புகழ்மாலையும் ஓதப்பட்டது. இந்நிகழ்விற்கு, டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.மவ்லானா ஸாஹிப் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
29ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, சட்ட மேதை இமாம் ஷாஃபஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சுருக்க உரையை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.
இன்று மாலை 04.30 மணிக்கு, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது அல்லாமா அல்ஹாஃபிழ் முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்விய்யுல் முஃப்தீ அவர்களால் தொகுக்கப்பட்ட மின்ஹத்துல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ எனும் மவ்லித் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து, இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான சிறப்பு பைத்தும் ஓதப்படுகிறது. இந்நிகழ்விற்கு காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்குகிறார். கடைப்பள்ளியின் இமாம் எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகிறது.
நாளை துஆ தினமாகும். மார்க்க சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுகிறது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆ இறைஞ்சுகிறார்.
நாளை துஆ தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் ஆண்கள் - பெண்களுக்கான அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பகரமாக, சனிக்கிழமையன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.
|