சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 நன்கொடை சேகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 08.06.2012 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
மழலை ஃபவ்ஜுல் ஹினாயா இறைமறையின் இனிய வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.
நகர்நலப் பணிகளுக்காக நிதியாதாரத்தைப் பெருக்கும் பல்வேறு அம்சங்களில் முக்கியமான ஒன்றான உறுப்பினர் உண்டியல் திறப்பை முக்கிய நிகழ்வாகக் கொண்டு நடைபெறும் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்பதாக அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அதனைத் தொடர்ந்து, கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்து - மன்ற உறுப்பினர்களும், இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுமான ஜவஹர் இஸ்மாஈல், ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை சமர்ப்பித்து. அவை செயல்படுத்தப்பட்டமை குறித்து விளக்கமளித்தனர்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் காலாண்டிற்கான சந்தா தொகை உறுப்பினர்கள் விரைந்து செலுத்திடுமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் அறிமுகம் நடைபெற்றது. சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வந்துள்ள ஃபைஸல் அஹ்மத் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு விரைவில் கிடைத்திட உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பளிக்குமாறு மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அப்போது கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்கும் புதிய குழுவினராக, மஹ்மூத் ரிஃபாய், தைக்கா ஸாஹிப் ஆகிய மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இக்ராஃவின் பரிசுத் திட்டத்திற்கு நிதியொதுக்கீடு:
இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சியில், இக்ராஃவின் ஒருங்கிணைந்த பரிசளிப்புத் திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பில் நகரளவில் இரண்டாமிடம் மற்றும் 10ஆம் வகுப்பில் நகரளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு தலா ரூ.5,000 தொகை வீதம் ரூ.10,000 பரிசுத்தொகையை சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வழங்க நிதியொதுக்கப்பட்டது. இத்தொகை விரைவில் முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.
ஜகாத் நிதி சேகரிப்பு:
ரூ.1,50,000 செலவு மதிப்பீட்டில் - 2012ஆம் ஆண்டிற்கான ஜகாத் நிதியின் கீழ் மன்றத்தால் செயல்படுத்தப்படவுள்ள திட்டத்திற்கு, மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை தாராளமாகத் தந்துதவுமாறு மன்ற ஆலோசகர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவி திட்டத்தின் கீழ், ஆதரவற்ற - ஏழைக்குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் 06.05.2012 அன்று இறையருளால் வினியோகித்து முடிக்கப்பட்டுள்ளது. வினியோகப் பணிகளை உள்ளூரிலிருந்தவாறு ஒருங்கிணைத்து செய்து தந்த மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் மற்றும் ஜனாப் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கு இக்கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் ரமழான் மாதத்திற்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவியை, 17.07.2012 அன்று வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் பட்டியலை விரைந்து மீளாய்வு செய்து, மாற்றங்களிருப்பின் ஜூலை 10ஆம் தேதிக்குள் மன்றச் செயலாளரிடம் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்குமாறு மன்ற ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.
இக்ராஃவிற்கான உறுப்பினர் சந்தா:
இக்ராஃவிற்கான - இதுவரை பெறப்பட்ட உறுப்பினர் சந்தா தொகைகள் குறித்தும், இன்னும் பெறப்பட வேண்டிய சந்தா தொகை குறித்தும், மன்றத்தின் இக்ராஃவிற்கான ஒருங்கிணைப்பாளர் உதுமான் கூட்டத்தில் விவரித்தார்.
உண்டியல் திறப்பு:
அடுத்து, நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் - மன்றத்தின் பல திட்டங்களுள் ஒன்றான உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் - பெறப்பட்ட உண்டியல்கள் இக்கூட்டத்தில் திறக்கப்பட்டது. “மண்ணின் மைந்தன்” சாளை நவாஸ் உண்டியல்களைத் திறக்க, உறுப்பினர்கள் தொகைகளைக் கணக்கிட்டனர்.
நிறைவில், ரூ.1,43,000 தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது வகைக்கு தாராள மனதுடன் உதவிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்ற உறுப்பினர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சியை, இம்மாதம் 30ஆம் தேதியன்று, சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டனில் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் குறித்து ஆய்வு செய்து தீர்மானிக்க தனிக்குழு அமைத்து செயல்படுமாறு மன்ற ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவ அவசர உதவிக்கு நிதியொதுக்கீடு:
மருத்துவ அவசர உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனு பரிசீலனைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அது வகைக்காக ரூ.9,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
காயிதேமில்லத் அமைப்பிற்கு நிதியொதுக்கீடு:
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நலத்திட்டப் பணிகளுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.15,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
ஹாஃபிழாக்களுக்கான ஊக்கத்தொகை:
நகர ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்து முடித்துள்ள 7 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. ஜூலை 01ஆம் தேதியன்று இத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட, மன்ற உறுப்பினர்களான சாளை நவாஸ், அப்துர்ரஹ்மான் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
விவாதிக்க வேறம்சங்கள் இல்லா நிலையில், 22.00 மணியளவில் - கோழி பிரியாணி இரவுணவுபசரிப்புடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சிங்கை காயல் நல மன்றம் சார்பாக,
ஜவஹர் இஸ்மாஈல் மற்றும்
ஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ. |