காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில், ஒடை மரங்கள் நிறைந்திருந்த சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நேற்று மாலை 04.00 மணியளவில் திடீரென தீ பரவியது. பல்வேறு பகுதிகளில் பிரிந்து பிரிந்து சுமார் 2 மணி நேரம் நெருப்பு கொளுந்து விட்டு எரிந்தது.
இத்தகவலைக் கேள்வியுற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உடனடியாக நிகழ்விடம் விரைந்து சென்று, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். சில மணித்துளிகளில் அவ்விடம் தீயணைப்புத் துறையினர், கற்புடையார் பள்ளி வட்டம் பகுதிக்குள் செல்லும் நுழைவுச் சாலையில் உள்ள மரம் ஒன்று பாதையைத் தடுத்திருந்த காரணத்தாலும், தீ எரிந்து கொண்டிருந்த பகுதியில் முட்செடிகள் நிறைந்திருந்த காரணத்தாலும், வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல இயலாது என்று தெரிவித்துவிட்டனர்.
பின்னர், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புச் செய்யப்பட்டதன் அடிப்படையில், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பொதுமக்களும் கைகளில் தண்ணீர் பாத்திரங்களைச் சுமந்து சென்று தீயை அணைத்தனர்.
தொடர்ந்து பல இடங்களில் - தீ கங்கம் எரிந்து கொண்டிருந்ததால் - கே.எம்.டி. மருத்துவமனையின் குடிநீர் வண்டி மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு - பொதுமக்களால் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர். இரவு 09.00 மணியளவில் நகர்மன்றத் தலைவர் அவ்விடத்தை விட்டு சென்றார். இந்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
தீ எரிவதைக் கண்டு சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் சில மணித்துளிகளில் கூடிவிட்டதால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ. |