அண்மையில் வெளியிடப்பட்ட - 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று பரிசளிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, இன்று காலை 09.30 மணியளவில், மாணவர் ஒன்றுகூடலின்போது நடைபெற்றது. பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தக்கூத்தன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் காதிர் ஸாஹிப் ஜாஸிம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அறிமுகவுரையாற்றினார். பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது.
இதில், 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவிலும் - காயல்பட்டினம் நகரளவிலும் முதலிடம் பெற்ற, காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சார்ந்த ஒ.எஃப்.செய்யித் முஹம்மத் ஷாதுலீ என்பவரின் மகன் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான் என்ற மாணவருக்கு ரூ.1000 பணப்பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா வழங்கினார்.
அதுபோல, 500க்கு 456 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்ற - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த எம்.எஸ்.செய்யித் அஹ்மத் நிளார் என்பவரின் மகன் எஸ்.ஏ.என்.அப்துல் காதிர் நவ்ஃபல் என்ற மாணவருக்கு ரூ.750 பணப்பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை, ஹாஜி எஸ்.எம்.உஸைர் வழங்கினார்.
500க்கு 456 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் இரண்டாமிடம் பெற்ற மற்றொரு மாணவரான - காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த பால் மாடசாமி என்பவரின் மகன் பி.மந்திர பார்த்திபனுக்கு, ரூ.750 பணப்பரிசு வழங்கப்பட்டது. இதனை பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி பாளையம் அஹ்மத் முஸ்தஃபா வழங்கினார்.
500க்கு 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மூன்றாமிடம் பெற்ற - காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த கே.எம்.செய்யித் அஹ்மத் என்பவரின் மகன் எஸ்.ஏ.ஷகூர் அஃப்ஸர் என்ற மாணவருக்கு ரூ.500 பணப்பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை, ஹாஜி ஹிட்லர் மஹ்மூத் வழங்கினார்.
இப்பரிசுகளுக்கு, பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, மறைந்த தனது தாயார் அ.ச.முஹம்மத் ஃபாத்திமா நாச்சி நினைவாக அனுசரணையளித்திருந்தார்.
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 114 மாணவர்களில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம், இப்பள்ளி 98 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. |